தாடகை வதைப் படலம் - 348

bookmark

348.

விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட.
செஞ்செவே செருமுகத்து அன்றியே. திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல். என்றும் ஆறாது அரோ.
 
விஞ்சுவான்  மழையின்மேல்  -   வானிலிருந்து   பெய்யும்மழை
நீரைவிட  மேலாக;  அம்பும்  வேலும்பட - அம்புகளும். வேல்களும்.
மார்பில் படும்படி: செஞ்சவே செரு முகத்தன்றியே-  செம்மையான
போர்   முகத்தல்லாது;   திறனிலா   வஞ்சகர்   தீவினைகளால் -
(அறப்போர்   செய்யும்)   திறமையில்லாத   வஞ்சகர்களின்  சூழ்ச்சிச்
செயல்களால்; மான  மா  மணிஇழந்து - (சிறைப்பிடிக்கப்பட்டு) தமது
மானம்  என்ற  மணியை   இழந்து;  அஞ்சினார்  நெஞ்சுபோல்  -
தோல்வியடைந்த மெய்வீரர்களின்  மனம் எப்படிக் கொதிக்குமோ அது
போல; என்றும்  ஆறாது -  பாலை  நிலத்தின் வெப்பம் எப்போதும்
ஆறாதிருக்கும்.  

அரோ:   அசை.  விஞ்சுவான்: பூதங்களில் விஞ்சிய வான். வேலை:
முதனிலைதிரிந்த    தொழிற்  பெயர்  இலா:  ஈறுகெட்ட  எதிர்மறைப்
பெயரெச்சம்.   அஞ்சினார்:  வினையாலணையும் பெயர். போர்வீரர்க்கு
அஞ்சுதலாவது    வீரம்   இருந்தும்   அதனைக்  காட்ட  வழியின்றி
அஞ்சியிருத்தலாம்.

சூழ்ச்சியால்   வென்று  சிறை  வைக்கப்பட்ட உண்மை வீரர்களின்
உள்ளக்  கொதிப்பு  ஆறாதது  போல.  பாலையின் வெப்பம் என்றும்
ஆறாது என்றார்.                                         7