சேரமான் பெருஞ்சேரலாதன்
சேரமான் பெருஞ்சேரலாதன் சங்ககாலச் சேர அரசர்களில் ஒருவன். வெண்ணிப் பறந்தலை என்னுமிடத்தில் இவன் சோழ அரசன் கரிகாலனைத் தாக்கிப் போரிட்டுக்கொண்டிருந்த போது யாரோ ஒரு சோழ போர் வீரன் சேரன் முதுகில் காயப்படுத்தி விட்டான். இந்தக் காயத்தால் இவன் இறந்துவிடவில்லை. இறக்கவும் மாட்டான். ஆற்றிக்கொள்ளலாம். என்றாலும் முதுகில் தழும்புடன் அவன் வாழ விரும்பவில்லை. போர்க்களத்திலேயே வடக்குத் திசை நோக்கி அமர்ந்து பாடுகிடந்து உயிர் துறந்தான்.
கரிகாலன் தன் படைவீரன் செய்த இழிசெயலுக்காக நாணியிருக்க வேண்டும். அவன் நாணவில்லை. இதனைக் கண்ட அவ்வூர்ப் பெண்புலவர் தன் அரசன் கரிகாலனை விட சேரன் நல்லவன் எனப் போற்றிப் பாடியுள்ளார்.
இரங்கல்:
1. இந்த இழிசெயலுக்கு வருந்திய போர்க்களம் அமைதியாகிவிட்டது.
2. சோழனின் வெற்றிமுரசு முழங்கவில்லை.
3. பாணர் யாழிசை கூட்டிப் பாடவில்லை.
4. வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கள் பருகவில்லை.
5. ஊரிலுள்ள மக்கள் சுற்றத்தாருடன் தேறல் அருந்தவில்லை.
6. உழவர்கள் வயல்வெளியிலும் குரவை ஓசை எழுப்பவில்லை.
7. அந்த ஊர் மக்கள் திருவிழாவைக் கூட மறந்துவிட்டனர்.
8. உவா (அம்மாவாசை, பௌர்ணமி) நாள்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு சுடர்களில் ஒரு சுடர் தோன்றும்போது மற்றொரு சுடர் மறைவது போல் ஆயிற்று.
9. சேர நாட்டிலிருந்து சோழநாட்டு ஊருக்கே வந்து பேரரசன் கரிகாலனைத் தாக்கிய இந்தச் சேரன் மிகப் பெரிய அரசன் எனக் கொள்க.
