செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடு

bookmark

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
   தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
   சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)    1

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
   வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
   கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)    2

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
   கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
   மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)    3

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
   மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
   யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)    4

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
   நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
   மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)    5

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
   கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
   பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)    6

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
   வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
   யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)    7

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
   தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
   சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)    8

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
   வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
   பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)    9

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
   தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
   நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)    10