தமிழ்த்தாய்

தமிழ்த்தாய்

bookmark

தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
  ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
  மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.    1

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
  மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
  ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.    2

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
  காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
  தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.    3

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
  தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
  நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.    4

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
  நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
  சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.    5

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
  காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
  யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!    6

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
  சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
  ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.    7

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
  ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
  கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!    8

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்,
மெத்த வளருது மேற்கே - அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.    9

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"    10

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
  இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
  செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!    11

தந்தை அருள்வலி யாலும் - இன்று
  சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
  ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.    12