சுவாமிஜி சீடர்களுக்கு தைரியம் தந்த விதம்
குருதேவரின் உபதேசங்களை நாடெங்கும் பரப்புவது தமது சமயப் பணிகளில் தலையானது என்பதை சுவாமிஜி அறிந்து இருந்தார். இனி அத்தகைய பணிகளில் தமது இளம் சீடர்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் விரஜானந்தரையும் பிரகாசானந்தரையும் சமயப் பணி புரிவதற்காக டாக்கா செல்லுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இளைய சீடர்களான அவர்கள் இருவரும் சுவாமிஜியின் ஆணையை எவ்விதம் செயலாக்குவது என்பது புரியாமல் திகைத்தார்கள்.
"சுவாமிஜி! நான் எதையும் தெரிந்து கொள்ளவே இல்லையே. பிறகு எவ்விதம் பிரச்சாரம் செய்ய இயலும்?" என்றார் விரஜானந்தர்.
"எனக்கு எதுவும் தெரியாது என்று சொல். அதுவே பெரிய பிரச்சாரம் தான்," என்றார் சுவாமிஜி.
"நான் என்னுடைய முக்தியை இன்னும் தேடவில்லையே" என்று மீண்டும் விரஜானந்தர் தமது சந்தேகத்தை கிளப்பினார்.
சுவாமிஜியின் பதில், முழக்கமாக அமைந்தது. தன்னுடைய முக்தியை மட்டுமே நாடுபவன் நரகத்தை அடைவான். பிறருக்கு உளபூர்வமாக சேவை செய்பவனே மேலானவன் என்ற கருத்தை சுவாமிஜி சீடரின் உள்ளத்தில் பதிய வைத்தார்.
பின்பு அவ்விரு சீடர்களையும் தம்முடன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.
மூவரும் தியானத்தில் ஆழ்ந்தார்கள்.
சுவாமிஜி அப்போது தமது சக்தியை அவர்களுக்கு அருளினார். பின்பு அவர்களுக்குப் பலவிதமான போதனைகளைச் செய்தார். விழிமின், எழுமின், செய்மின் என்று கூறி துணிவு ஊட்டினார். அக்கணம் சுவாமிஜியின் அன்பு வெள்ளத்திலும், அருள் வெள்ளத்திலும் அவர்கள் திளைத்தனர்.
அவர்கள் - தயக்கமும் சந்தேகமும் நீங்கப் பெற்றவர்களாகி – சமுதாயப் பணியையும் சமயப் பணியும் புரியும் உயர்ந்த நோக்கத்துடன் டாக்கா நகருக்குப் பயணம் ஆனார்கள்.
