உலாவியற் படலம் - 1176

bookmark

முகக் குறிகளால் ஒருத்தி காதல் புலப்படுதல்

1176.    

புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொற்கொடி.
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள். அது அறிந்தனன்;- அற்றம்தான்.
மனங்கள் போல. முகமும் மறைக்குமே?
 
புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொற்கொடி-   காட்டில்
வதிந்து கார்காலத்து மேகங்களைக் கண்டு  மகிழ்கின்ற மயில் போலவும்
பொற்கொடி  ஒன்று  போலவும்  அழகு  உடைய  ஒரு மங்கை; மனம்
கொள்   காதல் மறைத்தலை  எண்ணினாள் -  தன்  மனத்தகத்தே
(இராமன்  மேற்)கொண்ட   காதலை   வெளித் தெரியாமல் மறைத்தற்கு
எண்ணினாள்;   அனங்க  வேள்  அது  அறிந்தனன்  - (மனத்தில்
தோன்றுபவனாகிய) மன்மதன் அதனை அறிந்து  கொண்டான்;  அற்றம்
தான்  மனங்கள் போல்  முகமும் மறைக்குமே? - (அவள் மனத்துள்
உள்ள  காதலை  முகத்தில் அவன்  வெளிப்படுத்திவிட்டான்.  ஆகவே)
(தெரியாது   மறைந்திருக்கும்   மனங்களில்    மறை    பொருள்களை
மறைக்கலாம்.)   எல்லோர்க்கும்  தெரியும்   பொருளாகிய  முகங்களில்
மறைபொருள்கள்    வெளிப்பட்டுவிடும்    (மனம்  போல்   மறைத்தல்
இயலாது).

கார்   கண்டு மகிழும் காட்டு மயில் போலக் கார்முகில் வண்ணனாம்
இராமபிரானைக்  கண்டு  களித்தாடும்  வீட்டு  மயில்  இவள்  என்பார்.
“கார்மயில்  போலும்”  என்றார்.  “பளிங்கு  போல்  நெஞ்சம் கடுத்தது
காட்டும்  முகம்”  (திருக்.  706). ஆதலால் மனங்கள் போல  முகங்கள்
மறைக்குமே” என்றார்.                                       29