சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!
"பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!" – சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!
சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற மேற்கோள், "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" (What you think, you become!)
"ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர்.
"வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள வேண்டும்" என்பதை விளக்கும் வகையில், சுவாமிஜியின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வொன்றை பார்ப்போம்… பாய்ந்து ஓடி வந்த மிருகம்… சுவாமிஜி செய்தது என்ன?
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது — சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர். மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். ""சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?" என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், "நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது," என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர். பிரச்சனைகளை எதிர்கொள்வதும் இப்படித் தான். பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்! - என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் சுவாமிஜி தனது செயலால் விளக்கினார்.
இதே போன்ற ஒரு சம்பவம் ஸ்வாமிஜிக்கு இந்தியாவில் இருக்கும் காசி நகரத்திலும் நடந்தது அதையும் பார்ப்போம்.
காசியில் நடந்த அந்த சம்பவம் :-
ஸ்வாமிஜி நரேந்திரராக இருந்த காலத்தில் துறவறம் பூண்டு காசிக்குச் சென்றார். பிரேமானந்தர், பக்கீர் பாபு இருவரும் அவருடன் சென்றார்கள் (பிற்காலத்தில் இவர்களும் கூட நல்ல சன்னியாசிகளாக இருந்து ஸ்வாமிஜிக்கு உதவி புரிந்தனர்).
காசி மாநகரில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பும் போது குரங்குக் கூட்டம் வந்து அவர்களைத் துரத்தியது.
பெரிய பெரிய குரங்குகள் படையாகத் திரண்டு வந்து துரத்தியதும் துணிவும் நெஞ்சுரமும் மிகுந்த நரேந்திரரே அஞ்சினார். குரங்குகளிடம் இருந்து தப்புவதற்காக அவர்கள் ஓடலானார்கள்.
வேகமாக அவர்கள் ஓட, குரங்குகளும் வேகமாக துரத்திக் கொண்டு வந்தன. எப்படி அவைகளிடம் இருந்து தப்புவது என்று நரேந்திரர் சிந்தித்த வேளையில் அவருக்குள்ளே இருந்த குருதேவரின் குரல் ஒலிக்கக் கேட்டார்.
"குரங்குகளைக் கண்டு அஞ்சி ஓடாதே. அவற்றை எதிர்த்து நில்." இந்த தெய்வக் குரலைக் கேட்டதும் நரேந்திரரின் உள்ளத்தில் துணிவு மிகுந்தது. பயம் விலகி ஓடியது.
பிரேமானந்தரையும், பக்கீர் பாபுவையும் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டு தாமும் நின்றார். மார்பு நிமிர்த்தி, தோளை உயர்த்தி "என்ன செய்து விடுவாய்?" என்பது போல குரங்குகளை ஒரு பார்வை பார்த்தார்.
குரங்குகள் நின்றன. நரேந்திரரின் பார்வையில் தெறித்த வீரக்கனலைக் கண்டு அவைகள் மிரண்டன. பின்பு பாய்ந்து ஓடி மறைந்தன.
இந்நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தர் (நரேந்திரர்) அமெரிக்க நகரமொன்றில் சொற்பொழிவு ஆற்றும் போது கூறினார்.
"துரத்தி வருகின்ற இயற்கை வேகத்தை எதிர்த்து நின்று வெல்லுங்கள். மாயையை எதிர் கொண்டு போராடினால் பயம் விலகிப் போகும்" என்ற தத்துவத்தை இந்த நிகழ்ச்சி தமக்கு உபதேசித்ததாகவும் உரையாற்றும் போது அன்று, அவர் குறிப்பிட்டார்.
குரங்கால் நரேந்திரர் பட்ட இன்னொரு அவஸ்தை:-
ஒரு முறை ராதா குண்டம் என்ற புண்ணிய க்ஷேத்திரத்திற்கு நரேந்திரர் வந்தார். கிருஷ்ணரின் பேரன்பைப் பகிர்ந்து கொண்ட ராதை வாழ்ந்த தவபூமி ராதா குண்டம். அந்த புண்ணியத் தலத்தில் நரேந்திரர் ஆனந்தமாகச் சுற்றி வந்தார். அவரிடம் அப்போது ஒரே ஒரு கௌபீனம் மட்டுமே இருந்தது. ஒரு நாள் அதை மரக்கிளையொன்றில் உலர்த்திய போது குரங்கு ஒன்று வந்த அதனை கவ்விச் சென்றுவிட்டது.
நரேந்திரர் கௌபீனத்தை அந்தக் குரங்கிடமிருந்து பெறுவதற்குப் பலவிதமான முயற்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால் குரங்கு கௌபீனத்தைக் கீழே எறியாமலே மரக்கிளையில் அமர்ந்து கொண்டு சேஷ்டைகள் செய்தது.
நரேந்திரருக்கு அவமானம் தாங்க முடியவில்லை. யாரைக் கோபிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. எவரும் கிடைக்கவில்லை என்றால் எதையும் கேட்டுக் கொள்கின்ற கடவுளைத் தானே கோபிக்கத் தோன்றும்?
"ராதை வாழ்ந்த புண்ணிய பூமியைத் தேடி வந்து இவ்வாறு மானமிழந்து நிற்கிறேனே. ராதே! அன்பும் கருணையும் மிகுந்த தேவியாயிற்றே நீ. நீயே எனக்குக் கருணை காட்டவில்லையே. நான் இனி உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்?" என்று மனம் வெதும்பி புலம்பித் தவித்தார். பிறகு அடுத்திருந்த வனத்தை நோக்கி ஓடினார்.
உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக் கொள்வது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.
நரேந்திரருக்கு நிகழ்ந்ததை சற்றுத் தொலைவில் இருந்த வண்ணம் ஒருவர் பார்த்தார். அவர் உடனே ஒரு துவராடையைக் கையில் எடுத்துக் கொண்டார். மற்றொரு கையில் உணவுப் பொட்டலம்.
நரேந்திரர் ஓடிய வனப்பகுதியை நோக்கி விரைந்து சென்றார். "இந்தாருங்கள். இதை அணிந்து கொண்டு, உணவை உண்ணுங்கள்" என்றார்.
நரேந்திரர் வியப்புடன் அவரை நோக்கினார். ராதையின் பிரிவும் கருணையுமே ஒரு உருவமாகத் தம் முன்னே நிற்கின்றதோ என்று எண்ணி பரவசம் எய்தினார். அத்துடன் அவர் அளித்த ஆடையைப் பெற்றுக் கொண்டார்.
