எதிர்கொள் படலம் - 1142

bookmark

சேனைகளை நடத்திக்கொண்டு செல்லுமாறு தயரதன்
இராமனிடம் கூறல்

இராமனுக்குத் தயரதன் தந்த பணி
 
1142.    

சான்று எனத் தகைய செங்
   கோலினான். உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக்
   கருது பேர் அருளினான்.
‘ஆன்ற இச் செல்வம் இத்
   தனையும் மொய்த்து அருகு உற’
தோன்றலை. ‘கொண்டு முன்
   செல்க!’ எனச் சொல்லினான்.
 
சான்று     எனத்தகைய    செங்கோலினான்  -  (யாவர்க்கும்)
உதாரணமாகக்   காட்டத்தக்க    செங்கோல்    முறைமையுடையவனும்;
உயிர்கள் தாம் ஈன்ற  நல்தாய்  எனக்கருது பேர்  அருளினான் -
அனைத்து    உயிர்களும்     தம்மைப்பெற்ற     நல்லதாய்    என்று
எண்ணத்தக்க  பெருங் கருணையுடையவனுமான  தசரதச்   சக்கரவர்த்தி;
ஆன்ற இச்செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு  உற- செல்வம்
என்று  கருதுகிற    இச்சேனையாகிய     செல்வங்களை     உன்னை
நெருங்கி  அருகே  சூழ்ந்திருக்குமாறு; ‘கொண்டு முன் செல்க’ என்று;
(அணைத்துக்)  கொண்டு  மக்களை வழிநடத்திச் செல்க   என்று;
தோன்றலை    அருளினான்   -   (தன்   அருமைக்  குமாரனாகிய)
இராமனை (நோக்கிப்)  பணித்தருளினான்.

தயரதனை.   “தாய் ஒக்கும் அன்பில்” கம்ப. 171) என்பார் முன்னும்.
செங்கோல்   தசரதனைப்   போல்    செலுத்தவேண்டும்   என்னுமாறு
ஆண்டான் ஆதலின். “சான்று எனத்தகைய  செங்கோலினன்”  என்றார்
-  வையகம்  முற்றும் வறிஞன் ஓம்பு  மோர்  செய்எனக் காத்து இனிது
அரசு  செய்தவன்  அவன்  (கம்ப.  179) ஆதலின்  இல்லறத்  திருவை
ஏற்க   இருக்கும்  இராமனுக்கு.  ஏற்ற  தருணம்   எனக்கருதி.   அரச
திருவை  எங்ஙனம் கொண்டுசெல்லவேண்டும் எனத்  தந்தை  மகனுக்கு
உரைத்த  அருமை  வாசகங்கள்  இவை.  அரசச்  செல்வம் எவையென
மேற்பாடலிலும்     இப்பாடலிலும்      தெளிவுறச்     சுட்டியுள்ளமை
இக்காலத்துக்குப் பொருந்துமாறு இலங்குதல் காண்க.               29