சிரார்த்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள்
சிரார்த்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் முனிவர், இறந்தவர்களுக்கு உண்டான கிரியைகளை செய்வதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அதை எப்பொழுது செய்ய வேண்டும்? என்று எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சகர மாமன்னனுக்கு மேலும் சில சந்தேகங்களும், ஐயங்களும் ஏற்பட துவங்கின. அதாவது முன்னோர்களுக்கு செய்யக்கூடிய கிரியைகளுக்கு எவ்விதத்தில் தகுதியுடைய பிரம்மம் உணர்ந்தவர்களை அழைக்க வேண்டும்? என்பதே அவருடைய ஐயமாக இருந்தது. தனது மனதில் தோன்றிய ஐயங்களை அவுர்வ முனிவரிடம் கூறினார். முனிவரும் மன்னனுடைய மனதில் தோன்றிய ஐயங்களை விளக்கும் பொருட்டு அதற்கு உண்டான கருத்துக்களையும் தெரிவிக்க துவங்குகிறார். மூன்று நாசிகேதானுவாகங்களை ஓதி அதன்படி நடப்பவனாகவும், மூன்று மதுருக்குகளை ஓதி அதன்படி நடப்பவனும், திரிசுபர்ணானுவாகங்களை ஓதி அதன்படி அனுஷ்டான முடையவனும், மதுவித்தையில் நிஷ்டை பெற்றவனும், ஷடங்க வேதாத்தியயனம் செய்தவனும், அந்த வேதத்தின் பொருளையறிந்தவனும், வேத விதிப்படி அனுஷ்டானமுடையவனும், பரப்பிரம்ம தியானம் செய்பவனும் ஜ்யேஷ்ட சாமத்தை ஓதவல்லவனும் ஆகிய இவர்களே முக்கியமானவர்கள் ஆகையால் அவர்களை அழைத்து வந்து போஜனம் செய்விக்க வேண்டும். இவர்களும் கிடைக்கவில்லை என்றால், சுத்தமான பிரம்மம் உணர்ந்தவர்களை தேடி அழைக்க வேண்டுமே தவிர சிரார்த்த காரியம் செய்வதற்கு எந்தவிதத்திலும் தகுதி இல்லாதவர்களை கொண்டு சிரார்த்த செயல்களை செய்யக்கூடாது. இவ்விடத்தில் தகுதி இல்லாதவர்கள் என்பது தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்பவன், புழுத்த நகமுடையவன், சொத்தைப் பல்லுடையவன், நயவஞ்சகன், கன்னியரை தவறான எண்ணத்தோடு பார்கின்றவனும், அவர்களிடம் கன்னியக்குறைவாக நடந்து அவர்களின் வாழ்க்கையை ஏமாற்றக்கூடியவர்கள், அக்னியையும், வேதத்தையும் கற்காமல் அதை தவறாக எண்ணுகின்றவனும், போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றவனும், உண்மைக்கு மாறாக பொய் கூறுகின்றவன், மற்றவர்களின் பொருட்களை அபகரிப்பவன், புறம் பேசி மற்றவர்களின் வாழ்க்கையை கெடுகின்றவனும், வேதத்தை பணத்திற்கு மட்டும் ஓதி பொருள் சேர்கின்றவன், தாய், தந்தையரை விட்டவன், பொறாமை எண்ணமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்ட மங்கையை மணந்துகொண்டவன், தேவ தாந்தரங்களைப் பூஜித்து பிழைப்பவன் இவர்கள் அனைவரும் சிரார்த்தம் செய்ய தகுதி அற்றவர்கள். சிரார்த்தம் செய்வதற்கு முதல் நாளிலேயே நல்ல குணம் கொண்ட பிரம்மம் உணர்ந்தவர்களை அழைத்து வந்து தேவார்த்தமாகவும், பிதுரார்த்தமாகவும் செய்யும்படி தனித்தனியே பிரார்த்திக்க வேண்டும். பிறகு கோப உணர்வுகளையும், ஸ்திரீ சங்கமத்தையும், பயனற்ற செயல்பாடுகளுக்காக வருந்துவதையும், சிரார்த்தம் செய்கின்றவரும், சிரார்த்தம் செய்வதற்காக அழைத்து வந்தவரும் செய்யாமல் நியமத்துடன் இருக்க வேண்டும். சிரார்த்தம் செய்கின்றவரும், சிரார்த்தம் செய்வதற்காக அழைத்து வந்தவரும் ஸ்திரீ போகம் செய்வது என்பது மகாதோஷமாகும். சிரார்த்தம் செய்வதற்கு அழைத்து வந்தவருக்கு கால் அலம்பல் முதலிய உபசாரங்களைச் செய்து, பவித்திர பாணியாய் ஆசமனம் முதலானவைகளை செய்து, சுத்தர்களாக இருக்கும் அவர்களை ஆசனத்தில் அமர்த்தி, அமுது செய்விக்க வேண்டும். பிதுர் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இச்சைக்கேற்ப ஒவ்வொருவரையாவது வைக்க வேண்டும். அதுபோலவே மாதாமசனுடைய சிரார்த்தத்தையும் பக்தியுடன் தேவ வரணத்தோடு கூடியதாக செய்ய வேண்டும். பிதுர் சிரார்த்தம், மாதாமக சிரார்த்தம் ஆகிய இவ்விரண்டுக்கும் ஒரே விசுவதேவ வரணம் செய்யவும் கூடும் பிதுர்வர்க்க மாதாமகவர்க்கங்களை சேர்ந்த தேவ ஸ்தானத்து பிராமணரை கிழக்கு முகமாகவும், பிதுர் ஸ்தானத்துப் பிராமணரை வடக்கு முகமாகவும் உட்கார வைத்து போஜனமளிக்க வேண்டும். இவ்விருவருக்கும் சிரார்த்தத்தை தனித்தனியே செய்ய வேண்டும் என்று சில முனிவர்கள் கூறுகிறார்கள். மற்றுமுள்ள ரிஷிகள் ஓரிடத்தில் ஒரு பாகத்தினாலேயே செய்யலாமென்று சொல்கிறார்கள். இருக்க தருப்பையைக் கொடுத்து அர்க்கிய விதியோடு பூஜித்து, அவர்களுடைய அனுக்கியையினாலே ஆவாஹனம் செய்ய வேண்டும். யவோதகத்தினால் தேவர்களுக்கு அர்க்கியம் கொடுத்து, கந்த, புஷ்ப, தூப தீபங்களினால் பூஜிக்க வேண்டும். பிதுர்க்கள் விஷயமாக செய்வதையெல்லாம் அப்பிரதக்ஷிணமாக செய்ய வேண்டும். அந்த பிதுர்க்களிடம் அனுக்கியை பெற்று இரட்டிப்பான தருப்பைகளை ஆசனத்தில் போட்டு மந்திர பூர்வமாக ஆவாகனம் செய்து திலோதகத்தினாலே அர்க்கியம் முதலானவற்றை கொடுத்து மற்ற உபசாரங்களையும் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் யாராவது ஒருவன் அன்னம் வேண்டி அதிதியாக வந்து விட்டால், முன்பு அழைக்கப்பட்ட பிரம்மம் உணர்ந்தவர்களிடம் அங்கீகாரம் பெற்று அவனுக்கும் அமுதளிக்கலாம். சில யோகிகள் தம்முடைய சொரூபம் இன்னதென்று அறியாத வகையில் மனிதருக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் சிரார்த்த காலத்தில் உணவு வேண்டி வந்தவர்களை நல்முறையில் உபசாரம் செய்ய வேண்டும். அரசனே சிரார்த்தம் செய்யும் பொழுது வருகின்றவர்களை உபசரிக்காவிட்டால் சிரார்த்தம் செய்த பயன் எல்லாம் அழிந்து போகும். பிறகு அக்னியிலே தூய்மையான வஸ்துக்களை கொண்டு படைக்கப்பட்ட அன்னத்தை பிரம்மம் உணர்ந்தவர்களிடம் அங்கீகாரத்தைப் பெற்று, அக்னிக்கும், சோமனுக்கும், யமனுக்கும், மந்திரங்களோடு மும்முறை ஆகுதி செய்ய வேண்டும். இவ்விதமாக ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தைப் பிராமணருக்குரிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாகப் பாகம் செய்யப்பட்டு சுவையாயும், இஷ்டமாயும் உள்ள அன்னங்களை சம்பூர்ணமாக அந்த பிரம்மம் உணர்ந்தவர்களுக்கு பரிமாறி, இதை தேவரீரது திருவுள்ளம்படி அங்கீகரிக்க வேண்டும்! என்று கீழ்ப்படிதலான வார்த்தைகளால் ஆராதிக்க வேண்டும். அவர்களும் மௌனத்துடனும், முகமலர்ச்சியுடனும் அங்கீகரித்து நன்றாக அமுதுண்ண வேண்டும். கர்த்தாவும், கோபதாபமின்றியும், துரிதப்படாமலும் வேண்டியவற்றையெல்லாம் அன்போடு பரிமாற வேண்டும். பிறகு, மந்திரத்தை படித்து பூமியில் எள்ளை பரப்பி, அந்த பிராமணரைத் தனது பிதுர்க்களாகப் பாவிக்க வேண்டும். இவ்விதமாக செய்யும் சிரார்த்தங்களில் அந்தந்த தருணத்தில் பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது பிரணவத்தின் உட்பொருளை அறிந்தவர்களின் உடல்களில் இருந்துகொண்டு என்னால் திருப்தியடைவாராக! பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது எனது ஓமத்தால் ஆப்பியாயனம் செய்யப்பட்ட மூர்த்திகளாக திருப்தியடைவார்கள். பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் நான் இப்பொழுது பூமியில் இட்டப் பிண்டத்தினால் திருப்தியடையக் கடவர். பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் நான் சொன்ன இந்த வார்த்தைகளால் திருப்தி அடைவார்களாக. யக்ஞங்களுக்கு ஈஸ்வரனும், விகாராதிகளில்லாத ஸ்வரூபமுடையவனுமான ஸ்ரீஹரியே இங்கு சகல அவியங்களையும், கவியங்களையும் அமுது செய்து கொண்டு எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமானுடைய சான்னியத்தியத்தினால் சகலமான ராட்சதரும், அசுரர்களும் உடனே ஓடிப்போவார்களாக! என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டும். பின்பு பிரணவத்தின் உட்பொருளை அறிந்தவர் அமுது செய்து திருப்தியடைய வேண்டும். பிறகு, அவர்கள் தமது கை, கால்களை சுத்தம் செய்துகொள்ள தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தர வேண்டும். பிறகு அவர்களது நியமனம் பெற்று எள்ளோடும் கூடிய அன்னப்பிண்டங்களைச் சாந்த சித்தனாகப் போட்டு பிதுர்த் தீர்த்தத்தினால் திலோதகம் விட வேண்டும். தெற்கு நுனியாகப் போடப்பட்ட தருப்பைகளில் புஷ்ப தூபாதிகளால் பூஜிக்கப்பட்ட பிண்டங்களை சுவாமிகள் அமுது செய்த பாத்திரத்தின் அண்மையில் முதன்மையாக பிதாவுக்கும் பிறகு முறையே பிதாமகனுக்கும், பிரபிதாமகனுக்கும் போட வேண்டும். பிண்டத்துக்காகப் பரப்பப்பட்ட தருப்பைகளின் அடியில் நாலாவர் முதலானவர்களை லேபகர்ஷணங்களினால் மகிழ்விக்க வேண்டும். இதுபோலவே மாதாமஹரையும் வாசனைத் திரவியங்களோடும், மலர்களுடனும் கூடிய பிண்டங்களினால் திருப்தி செய்விக்க வேண்டும். வேந்தனே முதலில் பிதுர்க்களுக்கு அன்புடன் ஸ்வதாகாரம் செய்து, அந்த பிதுர்க்கள் ஸ்வதாங்கீகாரத்துடன் ஆசிர்வதிக்க, இயன்ற அளவு அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுக்க வேண்டும். பிறகு தேவ திருப்தியை காட்டும்படியான வாக்கியங்களை அவர்களை சொல்லும்படி செய்து, அவர்களுடைய ஆசிகளை பிரார்த்தித்து பெற்றுக்கொண்டு, முதலில் பிதுர்க்களுக்கும், பிறகு தேவர்களுக்கும் விசர்ச்சனம் செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு இனிமையும், தாழ்மையும் உள்ள வசனங்களால் அவர்களை மேன்மைப்படுத்தி, வாசல் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் விடை கொடுக்கத் திரும்பி வந்து வைசுவதேவக் கிரியை செய்து, தனக்குப் பூஜ்யரும், பந்துக்களும், பிருத்தியருமானவர்களுடன் போஜனம் செய்ய வேண்டும். இப்படியாக பிதுர் சிரார்த்த மாதாமக சிரார்த்தங்களை செய்வதால் அவனுக்கு பிதுர்க்களின் அனுக்கிரகத்தினால் சர்வாபீஷ்ட சித்தியும் உண்டாகும். சிரார்த்தத்தில் தவுகித்திரன், குதம்பம், திலம், இம்மூன்றும் பவித்திரங்கள். மேலும் வெள்ளியைப் பற்றி சொல்வதும், கொடுப்பதும், காட்டுவதும் பவித்திரங்கள். சிரார்த்தம் செய்தவனுக்கும், புசித்தவனுக்கும், குரோதம், வழிநடை, துரிதம் ஆகிய மூன்றும் கூடாதவை. விசுவதேவரும், பிதுர்க்களும், மாதாமகரும் சிரார்த்தம் செய்பவருடைய குலம் எல்லாவற்றையும் போஷிப்பார்கள். பிதுர்க்களுடைய கணமானது சோமனை ஆதாரமாக கொண்டது. அந்த சந்திரனோ யோகத்தை ஆதாரமாக கொண்டிருப்பவன். ஆகையால் சிரார்த்தத்திலே யோகியை நிமந்திரிப்பது மிகவும் சிறப்புடையதாகும். இவ்விடத்தில் மன்னருக்கு சிரார்த்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றி சில ஐயங்கள் தோன்றின. அந்த ஐயங்களை முனிவரிடம் கேட்டார். முனிவரும் அதை பற்றிய விளக்கங்கள் தர துவங்கினார். முனிவர் சிரார்த்தம் செய்வதற்கு மிகவும் விசேஷமான பொருட்களைக் கூறுகிறேன். காலசாகம் என்ற ஒருவகைக் கீரையும், நல்ல தேனும், பிரசாந்திகங்கள் என்ற ஒருவகைக் காட்டுத் தானியமும், செந்நெல்லும், வெண்சாமை, கருஞ்சாமைகளும், வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், நவதானியங்களும், உளுந்தும், கோதுமையும், நல்ல நெல்லும், எள்ளும், மலையகத்தியும், கடுகும், பாகல், பலா, கதலி, அவரை முதலியவைகளும் சிறந்தவை. கயா என்னும் திவ்யத் தலத்தை அடைந்து, அங்கு செய்யும் சிரார்த்தமானது மிகவும் சிறப்புடையது. அதனால் ஜன்மசாகில்யமாம். இனி சிரார்த்தத்துக்கு தேவையில்லாத பொருட்களை பற்றி கூறுகிறேன். ஆக்கிரயணம் என்னும் சடங்கு செய்யாமல் அறுத்த தானியமும், காராமணியும், அணுவென்ற அற்பதானியமும், மசூரங்களும், சுரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி போன்றவையும், காந்தாராகம் என்ற சம்பாவும், கரம்பம் என்ற தானியமும், பிரத்தியக்ஷமான உப்பு மிகுந்த பொருட்களும், உவர் நிலத்தில் உண்டான பொருட்களும், சிவப்பில்லாத பிசின்களும், உப்பும், வாயினால் சொல்ல நன்றாக இராதவைகளும், கண்ணுக்கு இனிமையற்றவைகளும், இரவில் கொண்டு வந்து வைத்த ஜலம் முதலியவைகளும், கன்றில்லாத பசுவின் பாலும், பசுமாடு குடித்து திருப்தியடையக் கூடாத அற்ப ஜலமும், யாரும் கையாளாமல் விட்டு வைத்திருக்கும் கிணற்றின் தண்ணீரும், துர்க்கந்தமுள்ள தண்ணீரும், நுரைத்த நீரும், ஒற்றைக் குளம்புடைய மிருகங்களின் பாலும், ஒட்டகத்தின் பாலும், ஆட்டுப்பாலும், எருமைப்பாலும், மான் பாலும் இவையெல்லாம் சிரார்த்த காரியங்களுக்கு உபயோகிக்கத் தகாதவையாகும். மேலும் நபும்ஸகன், குலத்தாரால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷாண்டன், அருவருக்கத்தக்க ரோகமுடையவன், வேத தருமங்களை விட்டவன் ஆகிய இவர்களாலும் கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி ஆகிய இவைகளினாலும், ராஜஸ்வலையான ஸ்திரீ சவுசாசாரஹீனன், பிணம் தூக்கிப் பிழைப்பவன் ஆகியவர்களால் பார்க்கப்பட்ட இடங்களிலே பிதுர்க்களும், தேவர்களும் அமுது செய்யமாட்டார்கள். ஆகையால் யாரும் பார்க்கக்கூடாத மறைவிடத்திலே மிகுந்த பக்தியுடன் பூமியில் எள்ளை இறைத்து இராக்கதர்களை ஓட்டி சிரார்த்தம் செய்ய வேண்டும். ரோமம், பூச்சி முதலானவைகளுடனும், கஞ்சி முதலியவைகளுடனும் கூடிய பழையது அல்லாத அன்னத்தைப் பக்தி சிரத்தையோடு நமது கோத்திரங்களைச் சொல்லி இடுவோமானால் அந்த அன்னம் பிதுர்க்கள் உண்கின்ற அமிர்தாதி உணவாகத் திகழும். வேந்தனே கலாபக் கிராமத்தின் உபவனத்தில் மனுபுத்திரனான இஷ்வாகு மாமன்னனுக்கு பிதுர்க்கள் பாடித் தந்த கீதம் ஒன்று வழங்குகிறது. அதாவது எவர் ஒருவர் கயைக்கு சென்று நமக்கு பிண்டம் போடுவார்களோ, அத்தகைய யோக்கியர் நம்முடைய குலத்தில் பிறப்பார்களா? எவர் பாத்திரபத கிருஷ்ணத்திரயோதசியிலும், மகா அமாவாசையிலும் தேன், நெய்யுடன் பாயாசான்னம் கொடுப்பார்களோ, அப்படிப்பட்டவர் நமது குலத்தில் பிறப்பார்களா? எவர் கௌரி என்ற பத்து வயது கன்னியை நல்ல பாத்திரத்தாற் தானம் செய்து திருமணம் செய்விப்பார்களோ, நீலம் (நீலம்-உடல் முழுவதும் சிவந்து முகமும், வாலும் வெண்மையாய், கொம்பும், குளம்பும் சிறிது வெளுத்திருக்கும் எருது) என்ற காளையை விடுவார்களோ, விதிப்படி தக்ஷிணை கொடுத்து அசுவமேதமாவது செய்வார்களோ அத்தகையோர் நமது குலத்தில் பிறப்பார்களா? என்று இவ்விதமாக தமது மனோ விருப்பங்காட்டி அவற்றை சிறப்பித்திருக்கிறார்கள். பராசர முனிவர் தமது சீடரை நோக்கி, மைத்ரேய முனிவரே! பூர்வத்தில் சகர மாமன்னனுக்கு அவுர்வ முனிவர் எடுத்து கூறிய அனைத்து கருத்துக்களை பற்றி யான் உமக்குக் கூறுகிறேன். இந்த கருத்துக்களில் இருக்கக்கூடிய செயல்களில் எவரேனும் செய்ய தவறும் பட்சத்தில் அவர்கள் யாவரும் நலன்களை பெறமாட்டான் என்று கூறினார். மற்ற உயிரினங்களை விட சிறந்த உயிரினமாக விளங்கக்கூடிய மனிதராக பிறந்தவர்கள் என்னென்ன செயல்கள்... என்னென்ன கர்மங்கள் செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக எடுத்துரைத்த, தனது குருநாதரை வணங்கிய வண்ணமாக குருவே! தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனக்கு மட்டுமின்றி இனி வரப்போகின்ற அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இனி தங்களிடமிருந்து அரசர்களுடைய வம்சத்தைப் பற்றி நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். ஆகவே தாங்கள் கிருபை செய்து அவற்றை எமக்கு விளக்க வேண்டும் என்று வேண்டினார். குருவான பராசர முனிவரும் அவர் வேண்டியபடி அரசர்களின் வம்சத்தின் விவரத்தை எடுத்துரைக்க துவங்குகின்றார்.
