உலக நாயகனும், நாயகியும்

bookmark

உலக நாயகனும், நாயகியும் மைத்ரேய முனிவரே! பூர்வத்தில் (ஆதிகாலத்தில்) ஸ்ரீதேவியானவள் பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையிடத்தில் அவதரித்திருந்தாள் என்று உமக்கு நான் ஏற்கனவே உரைத்து இருக்கின்றேன் அல்லவா! பின்பு அமிர்தம் கடைந்த காலத்தில் திருப்பாற்கடலிலும் அவதரித்து இருக்கின்றாள். அதுமட்டுமல்லாது உலகநாயகனான ஜெகன் நாயகன் எப்போதாவது உலகங்களில் நீதியை நிலைநாட்டுவதற்காக அவதரிக்கின்றார் எனில் அப்பொழுது எல்லாம் ஸ்ரீதேவியும் அவர் எடுத்து இருக்கக்கூடிய அவதாரத்தின் நோக்கமானது பயன்பெறும் வகையில் அவருடனே அவதாரம் செய்து அருள்புரிவாள்.ஸ்ரீமந் நாராயணன் அதிதியின் குமாரனாக அவதாரம் எடுத்த பொழுது ஸ்ரீதேவியானவள் பதுமை என்ற திருநாமத்துடன் அவருக்கு துணையாகவே அவதாரமும் எடுத்தார்கள்.ஸ்ரீமந் நாராயணன் பரசுராமராக அவதாரம் எடுத்திருந்த பொழுது ஸ்ரீ தேவியானவள் தரணியாக அவதரித்து இருந்தார்கள்.ஸ்ரீமந் நாராயணன் சக்கரவர்த்தியின் திருமகனான ராமராக அவதரித்து இருந்த பொழுது அவருக்கு துணைவியாக ஸ்ரீதேவியானவள் சீதாபிராட்டியாக அவதாரம் செய்திருந்தார்கள்.ஜெகன் நாயகன் ஜகத்தில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து மானுடர்களுக்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்து கூறக்கூடிய கண்ணனாக அவதாரம் செய்திருந்த பொழுது அவருக்கு துணையாக ஸ்ரீ தேவியானவள் ருக்மணியாக அவதாரம் எடுத்து இருந்தார்கள்.இதுபோன்று பலவிதமான அவதாரங்களிலும் எம்பெருமானுக்கு துணையாகவும், அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் அவருடனே அவருக்கு துணையாக அவதாரம் எடுத்து இருந்தார்கள். ஜெகன் நாயகன் தேவ ரூபத்தோடு அவதாரம் செய்து இருந்தால் திருமகளான அவள் தெய்வீக தன்மையுடன் அவதரிப்பாள். ஜெகன் நாயகன் மானிட ரூபத்தோடு அவதரித்திருந்தால் ஸ்ரீதேவியும் மனுஷ ரூபத்தோடு அவதரிப்பாள். மைத்ரேயரே! ஸ்ரீ மகாலட்சுமியின் இந்த திரு அவதாரத்தை எவனொருவன் மிகுந்த பக்தியுடனும், ஒருமித்த எண்ணத்துடனும் பாராயணம் செய்கின்றாரோ அல்லது யார் பக்தியுடன் கேட்கிறார்களோ, அவர்களுடன் ஸ்ரீ தேவியானவள் எந்த நிலையிலும் பிரியாமல் எழுந்தருளி இருப்பாள்.எந்த இல்லங்களில் ஸ்ரீதேவியின் சரித்திரமானது தினம்தோறும் படிக்கப் படுகின்றதோ அந்த இல்லங்களில் துன்பத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய வறுமை என்பது ஏற்படாது.உலகில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களின் ஐஸ்வர்யங்களின் காரணமாக இந்திரனால் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை யாரெல்லாம் தினம்தோறும் மிகுந்த பக்தியுடன் படிக்கிறார்களோ அவர்கள் எந்த நிலையிலும் துன்பத்தை அடைய மாட்டார்கள். சர்வ பீஷ்டங்களும் (அதிஷ்டஸ்கள்) நிறைவேறி மகிழ்ச்சியுடனும், சிறப்பாகவும் வாழ்வார்கள் என்றார் பராசர முனிவர்.