சிந்துபாத்தின் ஏழாவது கப்பல் பயணம்
திருமணம் ஆகி விட்டது இனி எந்த ஒரு கப்பல் பயணத்தையும் மேற்கொள்ளாமல் இருக்கும் வாழ்க்கையை பொறுப்பாக ஓட்டினால் போதும் என்ற முடிவுக்கு வந்தான் சிந்துபாத். தனது புது மனைவியுடன் ஆனந்தமாக பொழுதை கழித்து வந்தான்.
இந்த சமயத்தில் பாக்தாத்தின் தளபதி நோய்வாய்ப்பட்டு உயிர் இழந்தார். "பொறுப்பான தளபதி இறந்து விட்டார். இனி போர்படையை யார் தலைமை ஏற்று நடத்துவார்கள்? அப்படிப் பட்ட ஒரு வீரம் மிகுந்த தளபதியை இனி எங்கு தேடுவது?" என்று கவலை அடைந்தார் பாக்தாத்தின் மன்னர். அமைச்சர்கள் மற்றும் மந்திரிகளை அழைத்து இது குறித்த ஆலோசனையை நடத்தினார். அப்போது சில மந்திரிகள் தளபதி பொறுப்பிற்கு சிந்துபாத்தின் பெயரை பரிந்துரைத்தனர். அங்கு கூடி இருந்த அனைவரும் அதுவே சரி என்ற விதத்தில் சம்மதம் தெரிவித்தனர்.
மன்னரும் கூட சிந்துபாத்தை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்து இருந்ததால் அவன் மீது ஒரு நல்ல அவிப்பிராயம் அவருக்கு இருந்து வந்தது. அதனால் சிந்துபாத்தையே தனது தளபதியாக நியமிக்க மன்னர் முடிவு செய்தார். மந்திரி சபை இதற்கு ஏகமனதாக ஒப்புக் கொண்டது.
அடுத்த நாள் காலை மன்னர் அழைப்பதாக சிந்துபாத்தின் வீட்டிற்கு வருகை தந்த சில உயர் அதிகாரிகள் கூற; உடனுக்குடன் சிந்துபாத் மன்னரைக் காணப் புறப்பட்டான்.
அரண்மனையை அடைந்த சிந்துபாத்தை வீரர்கள் சகல மரியாதையுடன் மன்னரிடம் அழைத்துச் சென்றனர். சிந்துபாத்தை மன்னர் வரவேற்று அவனிடம் விஷயத்தை கூறினார். மன்னரின் விருப்பத்தை சிந்துபாத்தும் ஏற்றுக் கொண்டான்.
ஒரு நல்ல நாளில் மௌலி "முகம்மது காஜி" சிந்துபாத்திற்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மௌலி "முகம்மது காஜி" யை பற்றி சொல்ல வேண்டும் எனில் பாக்தாத் மன்னரின் வலது கை அவர் தான். அதீத இறை அருள் பெற்றவர் என்று கருதப்படும் பெரியவர் அவர். யாக்கோப்பு சித்தரின் சீடர்கள் வழி வந்தவர். அதை விட இறை அருளால் முக்காலமும் உணர்ந்தவர். அவர் சிந்துபாத்தின் உடலில் இருந்த மூன்றாம் பிறையுடன் கூடிய நட்சத்திரக் குறியீட்டை பார்த்த மாத்திரத்தில் சிந்துபாத் இறை அருளாளன் என்பதை அறிந்து கொண்டார். மன்னர் சரியான ஆளிடம் சரியான பொறுப்பை தான் அளித்துள்ளார் என்று நினைத்து அகம் மகிழ்ந்தார்.
தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்ட சிந்துபாத் என்றும் சத்தியத்தை பாதுகாப்பதாக ராஜ்ய சபையில் வாக்குறுதி அளித்தான். அங்கு கூடி இருந்த அனைவரும் சிந்துபாத்தை வாழ்த்தி மகிழ்ந்தனர். அன்று மாலை வீடு திரும்பிய சிந்துபாத் தனது மனைவியிடம் தான் தளபதியான விஷயத்தை சந்தோஷத்துடன் கூற அதனைக் கேட்டு அவனது மனைவியான நதாஷா சந்தோஷம் அடைந்து சிந்துபாத்துக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.
சிந்துபாத் ராணுவத் தளபதியாக ஆன நாள் முதற்கொண்டு ராணுவத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தான். அதனால் பாக்தாத்தின் ஒட்டு மொத்த ராணுவமும் நவீனப் படுத்தப்பட்டது. அது மட்டும் அல்ல, புதிய போர் கருவிகளை வாங்கினான். போர் திறமையில் சிறந்து விளங்கும் பல நட்பு நாட்டு அரசர்களுடன் பேசி அவர்களது ஒத்துழைப்புடன் பாக்தாத்தின் வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியை தொடர்ந்து அளித்து வந்தான். இதனால் எந்நேரமும் ராணுவம் தயார் நிலையில் இருந்தது. அதனால் பாக்தாத்தை திரும்பிப் பார்க்கக் கூட எதிரிகள் துணியவில்லை. மேலும், சிந்துபாத்தின் இது போன்ற நவீன சீர்திருத்தத்தால் "சிந்துபாத்திற்கு என்ன தெரியப் போகிறது?” என்று கூறி அவனை எள்ளி நகையாடிய சில மூத்த அதிகாரிகள் கூட அவனது திறமையான செயல்பாட்டை அறிந்து வியந்தனர். இப்படியாக சிந்துபாத் தன்னிடம் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து வந்தான். அது மன்னருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது.
இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் மௌலி "முகம்மது காஜி" சிந்துபாத்தின் மாளிகைக்கு வந்தார். அவரை சிந்துபாத் நல்ல முறையில் வரவேற்றுப் பேசினான். அப்போது சிந்துபாத்தின் கைகளில் முன்பு வன தேவி அளித்திருந்த மோதிரம் மின்னிக் கொண்டு இருந்தது. அந்த மோதிரத்தை பார்த்த மாத்திரத்தில் அது சாதாரண மோதிரம் இல்லை என்பதை அறிந்து கொண்டார் மௌலி. அது பற்றி சிந்துபாத்திடம் மௌலி கேட்க. மௌலியிடம் உண்மையை மறைக்க விரும்பாத சிந்துபாத் சத்தியத்தை உள்ளது உள்ளபடி கூறினான். அத்துடன் தனக்கு முந்தய பயணத்தில் கிடைத்த அதிசய வாளையும் அந்தப் பெரியவரிடம் காண்பித்தான். அதனைக் கண்ட மௌலி," இது சாதாரண வாள் இல்லை, அநீதிகளை எதிர்க்கும் இறைவனின் வாள். சிந்துபாத் இதனை எப்போதுமே உன்னுடன் வைத்துக் கொள். இது உன்னைக் காக்கும்" என்று கூறினார். பிறகு சிந்துபாத்தையும் அவனது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
இப்படியாக சிந்துபாத்தின் வாழ்க்கை நல்ல படியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. பாக்தாத்தின் அரசர் சிந்துபாத்தை நல்ல முறையில் நடத்தினார்.
பாக்தாத்தின் அரசரைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனில் அவரது மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்து மன்னரிடம் கொடுத்து விட்டு சிறு வயதிலேயே இறந்து விட்டாள். அந்தப் பெண் குழந்தைக்கு "நூர்ஜகான்" என்று பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வந்தார் மன்னர். அப்பெண்ணும் பருவத்தை அடைந்து அழகுடன் காணப்பட்டாள்.
"நூர்ஜகான்" சிந்துபாத்தை அண்ணன் என்றே அழைத்து வந்தாள். சிந்துபாத்தும் அவளைத் தனது தங்கையைப் போலத் தான் பார்த்தான். நூர்ஜகான் அறிவில் மட்டும் அல்ல, அழகிலும் சிறந்து விளங்கினாள். ஆனால், அந்த அழகே எதிர்காலத்தில் அவளுக்கு எதிரி ஆக மாற இருக்கிறது என்பதை அவள் நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டாள். ஆம்! உலகத்தில் நல்லவர்களின் எண்ணிக்கையை விட தீயவர்களின் எண்ணிக்கை தானே அதிகம் உள்ளது. அந்த வகையில் நூர்ஜகான் என்னும் பேசும் ரோஜாவை கசக்கி எறிய நினைத்தான் மந்திரவாதி "உல் முல்க்”.
யார் இந்த "உல் முல்க்” வாருங்கள் பார்ப்போம்.
"உல் முல்க்” ஒரு மிகப் பெரிய மந்திரவாதி. மிகக் கொடியவனும் கூட. அவனிடத்தில் சகல சக்திகளும் இருந்தது. அவன் நினைத்தால் நெருப்பில் நீந்துவான், தண்ணீரில் நடப்பான், காற்றோடு காற்றாகக் கரைவான். அப்படிப் பட்ட அந்த மந்திரவாதி அழகான பெண்களைக் கண்டால் விடமாட்டான். அவன் "கொல்கொத்தா” என்னும் தீவில் வசித்து வந்தான்.
ஒரு முறை "உல் முல்க்” தனது மாயக் கண்ணாடியின் எதிரே நின்றபடி, ”இந்த உலகத்திலேயே வைத்து அழகான பெண் யார்?” என்று கேட்டான். உடனே அவனது மாயக்கண்ணாடி பாக்தாத்தின் இளவரசியான நூர்ஜகானை காண்பித்தது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவளது அழகில் மயங்கிப் போனான் "உல் முல்க்”. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் ஆகாய மார்க்கமாக பாக்தாத்தின் அரண்மனையை அடைந்தான்.
நூர்ஜகான் தனது தோழிகளுடன் நந்த வனத்தில் பொழுதை கழித்துக் கொண்டு இருந்தாள். அவளைக் கண்ட "உல் முல்க்” தனது மந்திர சக்தியால் நூர்ஜகானைத் தவிர அங்கு இருந்த அனைவரையும் மயங்கச் செய்தான். அனைவரும் மயங்கி விழுந்த மாத்திரத்தில் நூர்ஜகான் நடப்பதை அறியாது திகைத்து நின்றாள். அவளை நெருங்கிய "உல் முல்க்” ஆசை வார்த்தைகளை காட்டினான்.
ஆனால் நூர்ஜகான் அவனை வெறுத்து ஓடினாள். அதனைக் கண்டு கோபத்தில் சீறிப் பாய்ந்தான் "உல் முல்க்”. இளவரசியோ அவனை எச்சரித்துப் பேசினாள். பொறுமை இழந்த அந்த துஷ்ட மந்திரவாதி நூர்ஜகானை மலராக மாற்றி கழுத்தில் அணிந்து கொண்டு தனது தீவிற்கு ஆகாய மார்க்கமாக புறப்பட்டு விட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்த தோழிகள் நூர்ஜகானை காணாது தவித்தனர். ஓடிச் சென்று பாக்தாத்தின் சுல்தானிடம் நூர்ஜகான் காணாமல் போன விஷயத்தை கூற, திடுக்கிட்ட கலீபா தனது ஏவலர்களை நாலாபுறமும் அனுப்பி தமது அருமை மகளை தேடச் சொன்னார். ஆனால், மூன்று நாட்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை. சென்ற வீரர்கள் அனைவரும் வெறும் கையுடன் திரும்பினார். அதனைக் கண்ட கலீபா கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
அப்போது சிந்துபாத் மன்னரை அமைதிபடுத்தி," இது குறித்து நமது பெருமைக்குரிய மௌலியிடம் கூறுவோம். அவர் ஒருவரால் தான் இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ முடியும்" என்று கூறினான். மன்னரும் "அதுவே சரியான வழி" என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே "மௌலி" அழைக்கப்பட்டார். அவரிடம் நூர்ஜகான் காணாமல் போன விஷயத்தை சொன்னார் மன்னர். சற்று நேரம் யோசித்த ராஜ குரு (மௌலி) தனது ஞான திருஷ்டியால் நடந்த நிகழ்ச்சிகளை கண்டார். அதன் மூலம் "உல் முல்க்” என்ற மந்திரவாதியால் இளவரசி நூர்ஜகான் கடத்தப்பட்டு இருக்கும் விஷயத்தை மன்னருக்கு எடுத்துச் சொன்னார். மேலும் "உல் முல்க்” என்ற அந்த மந்திரவாதியின் ஆற்றலைப் பற்றியும் மன்னரிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
தனது மகளை ஒரு பொல்லாத மந்திரவாதி கடத்தி விட்டான் என்ற செய்தியை கேட்ட மாத்திரத்தில் மன்னர் ஒரு கணம் மயங்கி கீழே விழுந்தார். அங்கு இருந்த ராஜ விசுவாசிகள் மன்னரை ஆசுவாசப்படுத்தி நினைவு திரும்ப வைத்தனர். மீண்டும் மன்னர் பழைய நிலைக்கு திரும்பி தனது வீரர்களை அழைத்தார் அவர்களிடம்," உடனே மந்திரவாதி உல் முல்க்- யை எனக்கு முன்னாள் கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்று கூறினார்.
மன்னர் கூறிய வார்த்தையை கேட்ட மௌலி சிரித்துக் கொண்டே மன்னரிடம்," சுல்தான்! தாங்கள் பெற்ற அனுபவம் இது தானோ? "உல் முல்க்” என்ன சாதாரண திருடனா? தாங்கள் நினைத்த மாத்திரத்தில் அவனை பிடித்துக் கொண்டு வர! அவன் ஒரு ஆபத்தான மந்திரவாதி. அதிலும் ஆபத்துக்கள் நிறைந்த கொல்கொத்தா தீவில் இருக்கிறான். அதனால் அவனைப் போன்ற ஒருவனை பிடிக்க வேண்டும் என்றால் அது இறை அருள் பெற்ற ஒருவனால் தான் முடியும்" என்றார்.
"அப்படிப் பட்ட ஒருவனை நான் எங்கே தேடுவேன்?" என்றார் கலீபா.
"நீங்கள் எங்கேயும் தேட வேண்டாம். இதோ அது நமது சிந்துபாத் தான். இவனால் தான் அந்தக் கொடிய மந்திரவாதியை பிடிக்க முடியும்" என்று கூறினார் மௌலி.
பிறகு மௌலியின் ஆலோசனைப் படி சிந்துபாத்தின் தலைமையில் ஐந்நூறு வீரர்களைக் கொண்ட ஒரு சிறு படையை நியமித்தார் சுல்தான். அந்தப் படையில் இருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமை வாய்ந்தவர்கள். மொத்தத்தில் அப்படை சிறுசானாலும் அதன் கீர்த்தி பெருசு தான்.
மறுபுறம் மௌலி சிந்துபாத்திடம், "சிந்துபாத் இந்த முறை அவசியம் உன்னிடம் இருக்கும் அதிசய வாளையும், முன்பு அந்த வன தேவதை உனக்கு கொடுத்த மோதிரத்தையும் உடன் எடுத்துக் கொண்டு செல்ல மறக்காதே! அது இந்த முறை உனக்கு மிகுந்த உதவியாக இருக்கும். நான் சொல்வதைக் கேள்!" என்று கூற. மௌலி கூறியபடியே செய்தான் சிந்துபாத்.
பிரம்மாண்டமான கப்பல் ஒன்று தயார் ஆனது. அதில் வீரர்களுக்கு தேவையான கவசங்கள், பல் வேறு விதமான ஆயுதங்கள், உணவுப் பண்டங்கள், பலதரப்பட்ட சிறிய படகுகள் என அனைத்தும் ஏற்றப்பட்டது.
சிந்துபாத் கிளம்பும் சமயம் மீண்டும் மௌலியை பார்க்கச் சென்றான். அவனை ஆசிர்வதித்த மௌலி அவனிடம் "கொல்கொத்தா" தீவின் வரைபடத்தை கொடுத்து. கையில் ஒரு ரக்ஷையையும் கட்டினார். பிறகு சிந்துபாத் அதிசய வாளுடன் அந்தக் கப்பலில் தனது வீரர்கள் புடை சூழ நின்றபடி நாட்டுமக்கள் அனைவரிடமும் விடை பெற்றான். கப்பல் கொல்கொத்தா தீவை நோக்கிய தனது பயணத்தை துவங்கியது.
சிந்துபாத்தின் மனைவியும் கூட்டத்தில் மக்களுடன் நின்றபடி தனது கைகளை அசைத்து சிந்துபாத்திற்கு விடை கொடுத்தாள். அந்தப் பெரிய கப்பல் கடல் அலையில் மிதந்து வெகு தூரம் சென்று சிறிய கப்பலாக காண்போரின் கண்களில் உரு மாறி ஒரு புள்ளியாய் மறைந்து போனது. அதனைக் கறையில் இருந்து கண்ட பாக்தாத் பிரஜைகள் அனைவரும் மெல்ல கலைந்து சென்றனர். இப்படியாக இளவரசியை மீட்க சிந்துபாத்தின் ஏழாவது கப்பல் பயணம் ஆரம்பமானது.
சுமார் அறுபத்தி எட்டு நாட்கள் கடலில் மிதந்த கப்பல் கொல்கொத்தா தீவின் அருகே வந்து சேர்ந்தது. சிந்துபாத் நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தினான். உடனே சிறிய, சிறிய படகில் வீரர்கள் கொல்கொத்தா தீவை விரைவாக சென்று அடைந்தனர். சிந்துபாத்தும் தனது வீரர்களுடன் அந்தத் தீவில் காலடி எடுத்து வைத்தான்.
சிந்துபாத்தைப் பொறுத்தவரையில் இவ்வளவு எளிதாக எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தீவில் வந்து இறங்குவோம் என்பதை அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஒரு வேளை உண்மையிலேயே மந்திரவாதி அந்தத் தீவில் தான் உள்ளானா? அப்படி என்றால் ஏன் அவன் இதுவரையில் எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை என்பது போன்ற பல கேள்விகள் சிந்துபாத்தின் மனதினில் எழுந்தது. ஆனால், அவன் ஒன்றை அறியவில்லை இனிமேல் தான் அவனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும் ஆபத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அச்சுறுத்த காத்துக் கொண்டு இருக்கிறது என்பது தான் அது.
சிந்துபாத்தும் அவனுடன் வந்த வீரர்களும் தீவுக்குள் பல தொலைவு நடந்து சென்றனர். அந்தத் தீவில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் திடீரென சிந்துபாத்துடன் வந்த வீரர்கள் மணல் நிறைந்த ஒரு பகுதியில் நடந்து செல்லும் சமயத்தில் அதில் தங்கள் கால்களை பதிக்க அவர்கள் அப்படியே பூமிக்குள் புதையுண்டு போயினர். அப்போது தான் சிந்துபாத்துக்கு தெரிந்தது அது ஒரு புதை மணல் என்று. எனினும் அவன் சுதாரிப்பதற்குள் அவனுடன் வந்த பெரும்பாலான வீரர்கள் அந்த மண்ணில் புதையுண்டு போயினர். அவர்களது உடலைக் கூட கண்டெடுக்க இயலவில்லை.
உடனே சிந்துபாத் எஞ்சிய வீரர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களை தடுத்துப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினான். எனினும் அந்தப் புதை மணலை தாண்டினால் தான் மேற்கொண்டு தீவுக்குள் பிரவேசிக்க இயலும் என்கிற நிலை, எப்படித் தாண்டுவது என்று யோசித்த சிந்துபாத்தின் மூளை மிக வேகமாக அவனுக்கு ஒரு வழியை காட்டியது. அதன் படி அந்தப் புதை மணலின் இடை, இடையே சரியாக அளந்து வைத்ததை போல ஓர் அடி இடைவெளியில் கால்களை வைக்கும் அளவுக்குப் பாறைகள் இருந்தது. உடனே சிந்துபாத் தனது வீரர்களின் தலைப்பாகையை அவிழ்க்க செய்து அதனைக் கொண்டு கயிறு போல திரித்து அதனைத் தனது உடலில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு; அதன் மறுமுனையை ஒரு மரத்தில் கட்டி அருகில் இருந்த வீரர்களை பத்திரமாக பிடித்துக் கொள்ளுமாறு கூறி மெல்ல அந்த முதல் பாறையில் கால் வைத்தான். அவனுக்கு எதுவுமே நேரவில்லை. பிறகு மெல்ல அடுத்த பாறையில் கால் வைத்தான். அப்போதும் அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. பிறகு மூன்றாவது பாறை மீது நின்றபடி தனது இடுப்பில் கட்டி இருந்த தலைப்பாகையை அவிழ்த்து விட்டு தைரியமாக அந்தப் பாறைகளின் மீது நடந்து சென்றான். அதனைத் தொடர்ந்து சிந்துபாத்தின் வீரர்களும் புதை மணலில் கால்களை பதிக்காமல் பாறையின் மீது மட்டுமே மெல்லத் தங்களது கால்களை பதித்து எந்த விதமான ஆபத்தும் இன்றி நடந்து சென்றனர். இப்படியாக சிந்துபாத் உட்பட எஞ்சிய அனைவரும் புதை மணலைக் கடந்து புல்வெளி நிறைந்த ஒரு வனப்பகுதியை அடைந்தனர்.
சிந்துபாத்தின் சைன்யம் அந்தப் புல்வெளியை அடையும் சமயம். மாலை நேரம் கடந்து கொண்டு இருந்தது. எங்கும் இருட்டுப் பரவியது. இனியும் தீவுக்குள் பிரவேசிப்பது ஆபத்து என்று உணர்ந்த சிந்துபாத் அவ்விடத்திலேயே கூடாரங்களை அமைத்து தனது அடுத்த திட்டத்தை வீரர்களுடன் சேர்ந்து ஆலோசித்து முடித்தான். அன்றைய இரவு அந்தக் கூடாரத்தில் சில மணி நேரங்களுக்கு மட்டும் அனைத்து வீரர்களும் சற்றே களைப்பாற நினைத்தனர். சில வீரர்கள் பசியின் கொடுமையால் அங்கு நடமாடிய மான்களை கொன்று அதனை சுட்டுக் கொண்டு இருந்தனர். அதனைப் பார்த்து மற்ற வீரர்களும் மான்களை வேட்டையாடி அதனை சுட்டுத் தின்று பசி ஆறினார்கள். அப்போது மான்களின் மாமிச வாடையை நுகர்ந்த அந்த வனத்தில் இருந்த ராட்ச சிலந்திகள் தங்களது பிரம்மாண்டமான கூட்டில் இருந்து சரியாக அந்தப் புல்வெளிக்கு மோப்பம் பிடித்தபடி வந்து சேர்ந்தன. அப்போது மான் கறியை சுவைத்து உண்டு கொண்டு இருந்த ஒரு வீரனை ராட்சஸ சிலந்தி பிடித்து உண்டது. அது வரையில் வன விலங்குகளை மட்டுமே பிடித்து உண்டு பசியாறிய அந்த சிலந்திக்கு மனித மாமிமாசம் வித்யாசமாக இருந்தது. அதனால் அந்த வீரனின் எஞ்சிய பாகங்களை குதறி பூமியில் போட்டு விட்டு அடுத்த மனிதனை தேடிச் சென்றது. அதனைக் கண்ட மற்ற சிலந்திகளும் அவ்வாறே அங்கிருந்த வீரர்களை பிடித்து உண்டன. அது கண்ட மற்ற வீரர்கள் அலறினர். இன்னும் சிலர் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அந்த சிலந்திகளுடன் கடுமையாகத் துணிந்து போரிட்டனர். சிந்துபாத்தும் அந்த சிலந்திகளை தனது அதிசய வாள் கொண்டு வேட்டையாடினான். இப்படியாக அங்கு நர மாமிசம் தின்ற சுமார் எட்டு சிலந்திகளை சிந்துபாத் உட்பட அனைத்து வீரர்களும் வேட்டையாடி வெற்றி கண்டனர். பின்னர் அனைவரும் வெற்றிக் களிப்பில் இருந்தனர். சிறிது நேரத்தில் களைப்பின் மிகுதியால் ஓய்வு எடுக்க சென்றனர். அத்துடன் தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கியதாகக் கருதினர். ஆனால் அது வெறும் தொடக்கம் தான்.
நள்ளிரவு வேளை சிந்துபாத்தின் வீரர்களுள் ஒருவன் சிறுநீர் கழிக்கச் சென்றான். அப்போது அவன் அருகே முதுகின் பின்னால் யாரோ மூச்சு விடுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தான், அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது ஒரே ஒரு அலறல் தான். மயங்கி விழுந்தவனை ராட்ச சிலந்திப் பட்டாளம் இரு துண்டுகளாக வகுந்து உண்டது. வீரனின் அலறல் சத்தத்தை கேட்ட மற்ற வீரர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அதற்குள் ஆயிரக்கணக்கான ராட்ச சிலந்திகள் கூடி விட்டன. அவர்களின் பாசறையை அந்த சிலந்திக் கூட்டம் கபளீகரம் செய்து அழித்தது. எண்ணற்ற வீரர்கள் மடிந்தனர். இறுதியில் சிந்துபாத்துடன் எஞ்சிய வீரர்கள் வெறும் நான்கு பேர் தான்.
இனியும் சமாளிக்க முடியாது என்கிற நிலையில் சிந்துபாத் அவர்களை அழைத்துக் கொண்டு ஓடினான். ராட்ச சிலந்திகள் அந்தக் காரிருள் நேரத்தில் கூட மனிதர்கள் உடலில் இருந்து வந்த வெப்பக் கதிர்களைக் கொண்டு அவர்களை எளிதில் அடையாளம் கண்டன. அதன் காரணமாக சிந்துபாத்துடன் ஓடிக் கொண்டு இருந்த நான்கு வீரர்களையுமே அந்த சிலந்திகள் முந்திச் சென்று கொன்றன. சிந்துபாத் பயத்தில் அலறி அடித்து தனது அதிசய வாளுடன் அருகில் இருந்த ஆற்றங்கரையில் விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் சகதி இருந்ததால் அவனது உடல் முழுக்க சகதியால் நனைந்தது. இன்னும் சொல்லப் போனால் சகதியானது அவனது உடலை மறைத்து விட்டது. அவன் அருகே வந்த சிலந்தி அவனை ஒன்றும் செய்யவில்லை. மரம், செடி கொடி போல நினைத்து சிந்துபாத்தை விட்டு விட்டது. அப்போது தான் சிந்துபாத்திற்கு விஷயம் புரிந்தது. சகதியில் நனைந்தால் அந்தக் கொடிய சிலந்திகளின் கண்களுக்கு மனிதன் தெரியமாட்டான் என்ற தத்துவத்தை விளங்கிக் கொண்டு, மேலும் மேலும் அங்கு இருந்த சகதியை உடல் முழுக்க சிந்துபாத் பூசிக் கொண்டான். அதனால் அங்கு நடமாடிய ராட்ச சிலந்திகளின் கண்களில் இருந்து சிந்துபாத் தப்பினான். அவனது வெப்பக் கதிர்கள் குளிர்ந்த சகதியால் வெளிவராமல் போனது. சிறிது நேரத்தில் ராட்ச சிலந்திகள் மனிதர்கள் யாருமே அங்கு இல்லை என்று கருதி அவ்விடத்தை விட்டு தங்களது கூடுகளுக்கு சென்று மறைந்தன. விடியற் காலை பொழுதும் வந்தது.
சிந்துபாத் ஆற்றைக் கடந்து வெகு தூரம் சென்றான். ஓர் இடத்தில் நீர் வீழ்ச்சியைக் கண்டு அதில் குளித்து முடித்தான். எனினும் தன்னுடன் வந்த அனைவரும் இறந்து போனதால் மிகவும் துக்கம் கொண்டு அழுதான். பிறகு அவனையே அவன் தேற்றிக் கொண்டு இளவரசியை தேடும் பணியில் இறங்கினான். அந்தத் தீவில் எங்கு தேடியும் இளவரசியை காணாததால் தவித்தான். அப்போது ஒரு இடத்தில் காட்டுத் தீ எங்கும் பரவி இருப்பதைக் கண்டான்; உள்ளே இருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டது. தெளிவாக அந்தக் குரலை கேட்டான் சிந்துபாத் அது ஒரு ஆணின் குரல் தான்." ஒரு வேளை தன்னுடன் வந்த வீரர்களுள் யாரோ பிழைத்துக் கொண்டு இந்த வனத்தில் அதுவும் இந்தக் காட்டுத் தீயில் சிக்கி விட்டார்களோ?" என்று அவன் மனம் பதறியது. அடுத்த கணம் தனது உயிரைப் பணயம் வைத்து அந்தக் காட்டுத் தீயினுள் புகுந்தான் இருளை விட கருமை நிறம் கொண்ட ஒருவனை காப்பாற்றி அந்தக் காட்டுத் தீயில் இருந்து அவனை பத்திரமாக வெளியே கொண்டு வந்தான். அவன் பார்ப்பதற்கு வித்யாசமாக இருந்தான். சத்தியமாக அவனை யாரும் மனிதன் என்று சொல்ல முடியாது. முகத்தில் அப்படி ஒரு குரூரம். ஒரு கணம் சிந்துபாத்," நல்லதை செய்வதாக நினைத்து சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோமோ" என்று கூட சிந்தித்தான். அவ்வாறு சிந்தித்த மறுகணம் அவனது முகம் வியர்த்தது.
அதனைக் கண்ட அந்தக் காரிருள் தோற்றத்தவன் பலமாக சிரித்தான். அந்த சிரிப்பு சிந்துபாத்தின் பயத்தை மேலும் அதிகரித்தது. அத்துடன் அவனது முகம் கலவரம் அடைந்தது.
தனது உயிரை பேர் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மனிதனின் பயத்தை போக்க நினைத்த அந்தக் கருமை நிற ஆள் சிந்துபாத்திடம் பேசத் தொடங்கினான்.
"ஏ மனிதா! நீ என்னை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்டாய். நீ யார்? நான் உண்மையில் உனக்கு உதவ நினைக்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? கேள்" என்றான்.
அதனைக் கேட்ட சிந்துபாத் மறுமொழியாக," நான் பாக்தாத் நகரத்தின் படைத் தளபதி. என்னை எல்லோரும் "கடலோடி சிந்துபாத்" என்று அழைப்பார்கள். அது சரி தாங்கள் யார்? முதலில் அதனை சொல்லுங்கள். மேலும், தாங்கள் எப்படி எனக்கு உதவ முடியும்? இங்கு எப்படி வந்தீர்கள்? ஒரு வேளை தாங்கள் மந்திரவாதி உல் முல்கின் ஆளா? இல்லை தாங்கள் தான் அவனா?" என்று அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்டான்.
சிந்துபாத்தின் கேள்விக் கணைகளை கண்டு மீண்டும் ஒரு முறை பலமாக நகைத்த அந்த காரிருள் ஆள், " சிந்துபாத்! நான் இந்த வனத்தில் நடமாடும் கொடிய நாகங்களின் அரசன். நினைத்த நேரத்தில் நினைத்த ரூபத்தை எடுக்கக் கூடியவன் என்னை எல்லோரும் கஷ்டக் என்று அழைப்பார்கள். அது சரி நீ ஏன் உல் முல்க்- ஐ தேடுகிறாய்? அவன் மகா கொடியவன் ஆயிற்றே! அது மட்டும் அல்ல ஒரு விதத்தில் எங்களுக்கும் அவன் பகைவன் தான்" என்றான்.
கஷ்டக் கூறியதைக் கேட்ட சிந்துபாத்,"உல் முல்க் எங்கள் இளவரசியான நூர்ஜகானை கடத்தி இந்தத் தீவுக்கு கொண்டு வந்து இருக்கிறான். ஆனால் எங்கு இருக்கிறான் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. அது மட்டும் அல்ல என்னுடன் வந்த ஐநூறு வீரர்களும் பல்வேறு விபத்துக்களில் இறந்து போயினர். இப்போது நான் மட்டும் தான் மிச்சம். எனது லட்சியம், ஒன்று உல் முல்க் - யை கொல்ல வேண்டும். இல்லையேல் நான் மடிய வேண்டும். ஆனால் எடுத்த காரியத்தை மட்டும் முடிக்காமல் நான் இந்தத் தீவை விட்டுப் போகவே மாட்டேன்" என்றான்.
"சபாஷ் சிந்துபாத்! நீ சரியான ஆளிடம் தான் வந்து உள்ளாய். ஆனால் நீ நினைப்பது போல உல் முல்க் - யை கொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு உன்னிடம் இருக்கும் இந்த அதிசய வாள் மட்டும் போதாது. இதோ இந்த வில்லை வைத்துக் கொள். அத்துடன் இந்த அம்புறாத் துணியையும் தான். இதில் எண்ணற்ற திவ்ய அஸ்திரங்கள் உள்ளன. அது மட்டும் அல்ல, இதில் அம்புகள் எடுக்க எடுக்கக் குறையாது. மேலும், உல் முல்க் உனது கையால் சாக வேண்டும் என்பது தான் விதி போலும். உனக்கு அதற்கான தகுதியும் உண்டு. ஆனால் நீ உல் முல்க் - ஐ கொல்ல வேண்டும் எனில் முதலில் அவனது உயிர் ரகசியத்தை தெரிந்து கொள். அது தெரியாமல் நீ அவனை கொல்லவே இயலாது" என்று கூறி முடித்தான் கஷ்டக்.
"எனில் அந்த உயிர் ரகசியம் தான் என்ன? தாமதிக்காமல் உடனே சொல்லுங்கள்" என்று கெஞ்சினான் சிந்துபாத்.
கஷ்டக்கும் சிந்துபாத்தின் மீது அவன் கொண்ட பேர் அன்பினால் உல் முல்க் - யை கொல்லும் ரகசியத்தை கூறத் தொடங்கினான்.
"சிந்துபாத்! இதே பாதையில் சென்றால் இங்கிருந்து நான்கு மைல் தூரத்தில் ஒரு குகையைக் காண்பாய். அது தான் உல் முல்க்- கின் குகை அதற்குள் தான் இளவரசி இருக்க வேண்டும். அந்த குகைக்கு தெற்கே ஒரு மைல் தூரம் நடந்தால் ஒரு பளிங்கு மாளிகையை காண்பாய். அந்த மாளிகையை இரவும், பகலுமாக உல் முல்க்-கின் ஆட்கள் காவல் காத்து வருகின்றனர். காரணம் அந்தப் பளிங்கு மாளிகைக்குள் ஒரு கிளியின் உடலில் தான் உல் முல்க் - கின் உயிர் உள்ளது. அந்தக் கிளையை எடுத்துக் கொண்டு சென்று உல் முல்க் - கின் முன்னாள் அதன் கழுத்தை நெறித்தாள் போதும். அடுத்த கணமே உல் முல்க் மரணம் அடைவான். ஆனால், அது எளிதான காரியம் இல்லை" என்று கூறி மேற்கொண்டு சிந்துபாத்திடம் ஒரு மாயப் போர்வையையும், பறக்கும் கம்பளத்தையும் கொடுத்தான் கஷ்டக்.
அந்தக் கம்பளத்தையும், போர்வையையும் வாங்கி கொண்டான் சிந்துபாத். பிறகு மீண்டும் கஷ்டக் சிந்துபாத்திடம்,"சிந்துபாத் இந்தப் போர்வையை போர்த்திக் கொண்டால் நீ யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போவாய். அது மட்டும் அல்ல, இந்தப் பறக்கும் கம்பளம் உன்னை விரும்பிய இடத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லும். இது எத்தனை பேரை வேண்டுமானாலும் சுமக்க வல்லது. இனியும் நீ ஏன் தாமதிக்கிறாய்? சென்று வா! வென்று வா! " என்று வாழ்த்தி அனுப்பினான்.
பிறகு சிந்துபாத் அந்தப் பறக்கும் கம்பளத்தில் ஏறி அமர்ந்த மாத்திரத்தில் அந்தக் கம்பளம் அவனை உல் முல்க்-க்கின் குகைக்குள் அழைத்துச் சென்றது. அங்கிருந்து கஷ்டக் முன்பு சொன்ன அந்தப் பளிங்கு மாளிகையை நோக்கி சென்றான். அத்துடன் கஷ்டக் கொடுத்த போர்வையை போர்த்திக் கொள்ள சிந்துபாத் அங்கு காவல் காத்த வீரர்கள் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. மறுகணம் மறைந்திருந்தபடியே அம்புகளை எய்து அங்கு இருந்த வீரர்கள் அனைவரையும் கொன்றான். மேலும், அந்தப் பளிங்கு மாளிகைக்குள் நுழைந்து கஷ்டக் சொன்ன கிளியை எடுத்துக் கொண்டான். நேராக மந்திரப் போர்வையை போர்த்திய படியே பறக்கும் கம்பளத்தின் உதவியுடன் உல் முல்க்-க்கின் குகைக்குள் மேலும் பிரவேசித்தான்.
அங்கு இளவரசி நூர்ஜகான் தலைவேறு உடல் வேறாகக் கிடந்ததை பார்த்து சிந்துபாத் அதிர்ச்சி அடைந்தான். "ஒரு வேலை நூர்ஜகான் இறந்து விட்டாளா? பாவி மந்திரவாதி அவளைக் கொன்று விட்டானா?" என்றபடி எல்லாம் சிந்துபாத்தின் மனம் சிந்தித்தது. அந்த நேரம் மந்திரவாதி உல் முல்க் அவ்விடத்திற்கு வந்தான். நூர்ஜகானின் தலையை தனது கைகளால் பற்றி எடுத்தான். அதனை அவளது உடலுடன் பொறுத்தினான். பிறகு தனது மந்திரக் கோளின் நுனியில் இருந்த வேரை எடுத்து அவளது தலையும், உடலும் சேரும் இடத்தில் வைத்தான். அடுத்த கணம் துண்டான நூர்ஜகானின் உடலும், தலையும் ஒன்று இணைந்தது. அதனை தூரத்தில் இருந்து கண்ட சிந்துபாத் விஷயத்தை அறிந்து கொண்டான். அத்துடன் மந்திரவாதி நூர்ஜகானிடம் பேசிக் கொண்டு இருப்பதையும் பறக்கும் கம்பளத்தின் மீது அமர்ந்த படி அத்துடன் மந்திரப் போர்வையில் தன்னை மறைத்தபடி பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
மந்திரவாதி நூர்ஜகானிடம்," நூர்ஜகான்! என்னால் இனியும் பொறுக்க முடியாது. மரியாதையாக என்னை மணந்து கொள். இந்தத் தீவே என்னுடையது தான். உன்னை இங்கு ராணி போலவே நான் வைத்துக் காப்பாற்றுவேன். என்னை நம்பு. நீ ஒருவேளை மறுத்தால் எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்க விட மாட்டேன். புரியவில்லை! உன்னை இன்றே நான் வணங்கும் துர்தேவதைகளுக்கு பழி கொடுத்து விடுவேன்" என்று மிரட்டினான்.
அதனைக் கேட்ட சிந்துபாத் மந்திரப் போர்வையை போர்த்தியபடி பறக்கும் கம்பளத்தின் உதவியால் நூர்ஜகானிடம் மெல்ல வந்தான். அவளது காதுகளில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக "நூர்! நான் தான் அண்ணன் சிந்துபாத் வந்து உள்ளேன். நான் இங்கு வந்திருப்பதை காண்பித்துக் கொள்ளாதே! மந்திரவாதியை மணம் முடிக்க சம்மதம் என்று சொல். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
சிந்துபாத்தின் குரலை கேட்டுக், கேட்டு நூர்ஜகானுக்கு நன்கு பரிட்சயம் ஆகி இருந்ததால் நூர்ஜகானின் மனம் சிந்துபாத் தான் வந்திருக்கிறார் என்பதை வலிமையாக நம்பியது. ஆனால், அவளது மூளையோ ஒரு வேளை இது மந்திரவாதியின் தந்திரமாக இருக்குமோ என்று யோசித்தது. எனினும், அவளுக்கு உயிர் பிழைக்க அப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை. மறுத்தால் மந்திரவாதி அடுத்த நிமிடமே கொன்று விடுவான் என்ற நிலையில் சிந்துபாத் சொற்படி மந்திரவாதியை மணந்து கொள்வதாகக் கூறினாள்.
நூர்ஜகான் கூறியதைக் கேட்ட மந்திரவாதி மனம் மகிழ்ந்தான். உடனே அவளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றான். இது தான் சமயம் என்று சிந்துபாத் போர்வையை விளக்கி தன்னை நூர்ஜகானுக்கு வெளிப்படுத்தி அவளது பயத்தையும், சந்தேகத்தையும் போக்கினான். அப்போது தான் நூர்ஜகானுக்கு தைரியமே வந்தது.
திருமண ஏற்பாடுகளை செய்து முடித்து விட்டு மந்திரவாதி நூர்ஜகானை தேடி வந்தான். அப்போது அவளது அருகில் சிந்துபாத் இருப்பதைக் கண்டு அவனைக் கொல்ல மந்திரக் கோலை உயர்த்தி மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினான். சுதாரித்துக் கொண்ட சிந்துபாத் அந்த மந்திரக் கோலை தனது கையில் இருந்த அதிசய வாளால் இரு துண்டுகளாக உடைத்தான். அடுத்த கணமே அந்த மந்திரக் கோல் தனது சக்தியை இழந்தது. அந்த மந்திரவாதியின் முக்கால் பங்கு பலமே அந்த மந்திரக் கோல் தான். ஆனால் இப்போது அது உடைந்து விட்டது. கோபத்தில் அந்த துஷ்ட மந்திரவாதியின் கண்கள் சிவந்தது. தன்னிடம் இருந்த இதர மந்திர வித்தைகளை பயன்படுத்தி அதன் மூலம் சிந்துபாத்தின் மீது தனது துர் மந்திர சக்தியை பிரயோகித்தான். ஆனால், முன்பு மௌலி கொடுத்த ரட்சை சிந்துபாத்தின் கைகளில் இருந்ததால் அந்த மந்திரவாதியின் எந்த மந்திரமும் சிந்துபாத்தை ஒன்றும் செய்யவில்லை. இதனால் அவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச மந்திர சக்திகளையும் பறிகொடுத்தான். இறுதியாக பலத்தை பிரயோகித்து சிந்துபாத்துடன் துவந்த யுத்தத்தில் இறங்கினான் அந்த மந்திரவாதி.
சிந்துபாத்துக்கும், மந்திரவாதிக்கும் கடுமையாகப் போர் நடந்தது. கத்தியும், கத்தியும் மோதிக் கொள்ள எங்கும் அனல் பறந்தது. அதனால் அந்தத் தீவு அதிர்ந்தது. சிந்துபாத்தின் அதிசய வாள் மந்திரவாதியின் உடலில் பல இடங்களில் புகுந்து விளையாடியது. அதனால் ஒரு வரிக் குதிரையை போல காணப்பட்டான் மந்திரவாதி. அவனது உடலில் இருந்து குருதி பெருக்கெடுத்து ஓடியது. இப்படியாகப் பல மணிநேரம் நடந்த அந்த யுத்தத்தின் இறுதியில் மந்திரவாதி உல்- முல்க் ஐ சிந்துபாத் கொன்றான். அதனைக் கண்ட நூர்ஜகான் ஆனந்தம் கொண்டாள். ஓடி வந்து தனது உடன் பிறவா அண்ணன் சிந்துபாத்தை ஆறத் தழுவிக் கொண்டாள். பிறகு சிந்துபாத் நூர்ஜகானுடன் கஷ்டக் கொடுத்த பறக்கும் கம்பளத்தில் ஏறி வெற்றியுடன் பாக்தாத் நகரத்தை அடைந்தான். மன்னரிடம் நூர்ஜகானை ஒப்படைத்தான். தனது மகள் எந்த வித சேதாரமும் இல்லாமல் ஒரு கொடிய மந்திரவாதியின் பிடியில் இருந்து வந்திருக்கிறாள் என்றால் அதற்கு சிந்துபாத் தான் கரணம் என்று கூறி அவனைப் போற்றி புகழ்ந்தார் மன்னர். மேலும், அவனுக்குப் பரிசுகள் பல வழங்கினார். மூட்டை, மூட்டையாகப் பொற்காசுகளை கொடுத்தார். ஆனால் சிந்துபாத் அதனை ஏற்காமல் அந்தச் செல்வங்கள் அனைத்தையும் தன்னுடன் வந்து இறந்த போன அந்த ஐந்நூறு வீரர்களின் குடும்பங்களுக்கும் கொடுத்தான். அதனைக் கண்ட பாக்தாத் மக்கள் சிந்துபாத்தின் கருணையை போற்றிப் புகழ்ந்தனர்.
இப்படியாக கடலோடி சிந்துபாத்தின் ஏழு பயணங்களும் அவனுக்கு பல விதங்களில் வெற்றியை தேடித் தந்தது. இன்னும் சொல்லப் போனால் அவனுக்கு ஏழு விதமான அனுபவங்களையும் அவனது அந்த ஏழு விதமான கடல் பயணங்கள் பெற்றுக் கொடுத்தன. தனது ஒவ்வொரு பயணத்தின் போதும் இறைவன் அவன் உடன் இருப்பதை உணர்ந்தான் சிந்துபாத்.
இவ்வாறு ஷாரஜாத் சிந்துபாத்தின் கதையை பல இரவுகள் தொடர்ந்து சொல்லி முடித்தாள். ஷாரஜாத் கதையைக் கூறி முடித்தவுடனேயே அவளது தங்கை துன்யாஜாத் கணவனையும், மனைவியையும் தனியே விட்டுச் சென்று விட்டாள். எனவே மன்னர் ஷாரியர் ஷாரஜாத்தை அணைத்தும் முத்தமிட்டும் தழுவியும் மகிழ்ந்தார். ஷாரஜாத்தும் ஆனந்தக் கண்ணீருடன் அவரிடம் தன்னை ஒப்படைத்து விட்டாள். அவர் இழுத்த இழுப்புக்கு எல்லாம் அவள் ஈடுகொடுத்தாள் அவளும் தனது இதய ஆசையை தணித்துக் கொண்டாள்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தனது ஆடையை சரி செய்து கொண்டாள் ஷாரஜாத். அத்துடன் ஷாரியரிடம், "வேந்தே பெண்களால் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மைதான். ஆண்கள் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றாள். அந்த வார்த்தைகள் ஷாரியரின் கண்களைத் திறந்தது. அப்போதில் இருந்து அவன் பெண்களை மதிக்கத் தொடங்கினான். "சில பெண்கள் தான் தவறானவர்கள். எல்லாப் பெண்களும் அப்படி அல்ல" என்பதைப் புரிந்து கொண்டு தான் இதுவரையில் முதலிரவு முடித்து கொலை செய்த பெண்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டினான். அத்துடன் தனது அந்தச் செயலுக்காக தலை குனிந்தும் நின்றான்.
மன்னரின் இந்தக் குற்ற உணர்வை மானசீகமாக உணர்ந்த ஷாரஜாத், ஷாரியரைத் தேற்றினாள். அப்போது, "அடிமைத் தனத்தில் இருந்தும், அப்பாவிப் பெண்கள் தனது ராஜ்யத்தில் கொலை உருவதில் இருந்தும் பெண்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் ஷாரஜாத்தை எல்லாம் வல்ல அல்லா அனுப்பி வைத்து உள்ளார்" என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார் மன்னர் ஷாரியர்.
மறுநாள் காலையில் அரசவைக்குச் சென்றதும் அந்த அவையில் ஷாரஜாத்தின் தந்தைக்கு சிறப்பு மரியாதையை செய்தார் அரசர் ஷாரியர். பிறகு அவரிடம்,"மிகச் சிறந்த ஒரு பெண்ணை எனக்கு மணம் முடித்து வைத்துள்ளீர்கள். எனது வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்காளால் நான் பெண்களையே வெறுத்து வந்தேன். அத்துடன் மிருக வெறியுடன் சில பெண்களைக் கூட கொலை செய்ய ஆணை பிறப்பித்து உள்ளேன். ஆனால், தங்கள் மகளோ எனக்கு உண்மையை உணர்த்தி விட்டாள். அவள் உண்மையிலேயே பெரிதும் பாராட்டப் பட வேண்டியவள். இப்போது அவள் கர்ப்பம் அடைந்தும் உள்ளாள்" என்று கூற அந்த சபையே மன்னருக்கு வாழ்த்துக்களைக் கூறியது. பின்னர் அங்கு உள்ள மற்ற அமைச்சர்களையும் அரசர் ஷாரியர் கௌரவிக்கத் தவறவில்லை. பின்னர் அன்றைய தினம் மிகவும் களிப்புடன் அரசவை கலைந்தது. பிறகு ஷாரியர் கொடுத்த பிரத்தேயக விருந்தில் ஷாரஜாத்தின் தந்தையும், அவளது சகோதரியும் மன்னர் குடும்பத்தில் சிலரும் கலந்து கொண்டனர். அந்த விருந்தின் போது ஷாரஜாத்தின் தங்கையான துன்யாஜாத்தை தனது அருமைத் தம்பி ஷாஜமானுக்கு மணம் முடிக்க நினைப்பதாக ஷாரியர் ஷாரஜாத்தின் தந்தையிடம் கூற அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
ஷாஜமான் வர வழைக்கப்பட்டார். பின்னர் ஷாரஜாத்தின் குடும்பத்தின் பெருமையை ஷாஜமானிடம் எடுத்து உரைத்த ஷாரியர். துன்யாஜாத் கற்புக்கரசி என்று சொல்ல, தனது அண்ணனின் வார்த்தையின் மீது நம்பிக்கை கொண்ட ஷாஜமான் அவளை மணக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தான். அவன் மனதில் இருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கியது. தனது அண்ணன் எப்போதுமே தனக்கு நன்மையைத் தான் செய்வார் என்று ஷாஜமான் நம்பினார். துன்யாஜாத், ஷாஜமான் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.
அடுத்த சில தினங்களில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. அன்றைய தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்தார் மன்னர் ஷாரியர். அன்றைய தினம் அனைவருமே முழு மன நிறைவைப் பெற்றனர். ஷாரஜாத், மன்னர் ஷாரியருக்கு மட்டும் அல்ல அந்த நாட்டுக்கே ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தாள்.
