கைகேயி சூழ்வினைப் படலம் - 1650
அரசர் கூட்டம் வருகை
1650.
இமிழ் திரைப் பரவை ஞாலம்
எங்கணும் வறுமை கூர,
உமிழ்வது ஒத்து உதவு காதல்
உந்திட, வந்தது அன்றே -
குமிழ் முலைச் சீதை கொண்கன்
கோமுடி புனைதல் காண்பான்,
அமிழ்து உணக் குழுழுகின்ற அமரரின்.
அரச வெள்ளம்.
அரச வெள்ளம் - அரசர்களின் பெருந்திரள்; குமிழ் முலைச் சீதை
கொண்கன் -குவிந்த நகில்களையுடைய சீதைக்குக் கணவனாகிய
இராமபிரான்; கோமுடி புனைதல் காண்பான்- அரசுக்குரிய மகுடம்
சூட்டிக்கொள்ளுவதைக் காண்பதற்கு; உமிழ்வது ஒத்து உதவுகாதல்
உந்திட - (உள்ளே நிறைந்து) புறம்பே வெளிப்படுவது போன்று மிகுகின்ற
விருப்பம்தம்மைத்தூண்ட; அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் -
அமுதத்தை உண்பதற்கு ஆவலோடுதிரண்ட தேவர்களைப் போல;
இமிழ்திரைப் பரவை ஞாலம் - ஒலிக்கும் அலைகளையுடையகடலால்
சூழப்பட்ட உலகம்; எங்கணும் வறுமை கூர - எல்லா இடத்தும்
வெறுமையடையும்படி;வந்தது - வந்து கூடிற்று;
அரசர் கூட்டத்திற்குத் தேவர் கூட்டத்தை உவமை கூறினார்.
உவமை அணி. பரவை - பரவிஇருப்பது; ஐ - வினைமுதல் விகுதி.
அன்று, ஏ - அசைகள். 71
