சிந்துபாத்தின் இரண்டாவது கப்பல் பயணம்

சிந்துபாத்தின் இரண்டாவது கப்பல் பயணம்

bookmark

ஒரு பெளர்ணமி தினத்தில் சிந்துபாத் தனது உல்லாசமான அடுத்த கப்பல் பயணத்தை தொடங்கினார். உடன் சிந்துபாத்தின் வேலை ஆட்கள் நூறு பேர் துணைக்குச் சென்றனர். அவர்களுக்கும் கூட எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான் சிந்துபாத்.  கப்பலில் ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாட்டமாகத் தான் இருந்தது. சுமார் நாற்பது நாட்கள் கப்பல் பயணத்தை செய்த சிந்துபாத் பல நாடுகளுக்கும் சென்றார். பல நாடுகளின் கலாச்சாரத்தையும் அறிந்தார். அதன் மூலம் பல புதிய அனுபவங்களையும் பெற்றார். "பாடிய வாயும், ஓடிய காலும் சும்மா இருக்காது" என்பார்களே! அதே போலத் தான் சிந்துபாத்தின் நிலையும். ஒவ்வொரு நாட்டிலும் உல்லாசப் பயணத்தை மேற்கொள்ளச் சென்று இருந்தாலும் அந்த நாடுகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கி அது அறிதாகக் கிடைக்கும் நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து அதன் மூலம் தனது வழிச் செலவுக்கான பொருள்களை வேண்டிய மட்டும் சம்பாதித்துக் கொண்டார். இதனால் சிந்துபாத்தின் கரங்களில் சற்று அதிகமாகவே பணம் தவழ்ந்தது. இதனால் தன்னுடன் வந்தவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றினார். இப்படியாக சிந்துபாத்தின் பயணம் அவரது சொகுசுக் கப்பலில் எந்த விதக் குறையும் இல்லாமல் தான் நடந்து வந்தது. ஆனால், வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே போல இருக்காது அல்லவா? அப்படித் தான் ஒரு நாள் சிந்துபாத்தின் உல்லாசக் கப்பல் யாழித் தீவை நெருங்கும் சமயத்தில் கடல் கொந்தளிப்பால் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போனது. சிந்துபாத் உட்பட கப்பலில் இருந்த அவரது வேலை ஆட்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடல் அலைகள் சிலரை இழுத்துச் சென்று பாறைகளில் கொண்டு போய் மோதியது. அதில் பலர் இறந்தனர். வெறும் நாற்பது பேர் மட்டுமே யாழித் தீவை அடைந்து கரை ஏறினார்கள். அவர்களில் சிந்துபாத்தும் ஒருவர்.

யாழித் தீவில் எண்ணற்ற கொடிய வன விலங்குகள் நடமாடி வந்தன. எனினும் அந்தத் தீவு மிகவும் செழிப்பாக இருந்தது. பழங்கள் நிறைந்த எண்ணற்ற மரங்களைக் கொண்டு அந்தத் தீவு காணப்பட்டது. ஆறுகளுக்கும் பஞ்சம் இல்லை. அந்த மரங்களில் இருந்த பழங்களை பறித்துத் தின்று சிந்துபாத்தும் அவன் உடன் வந்தவர்களும் பசி ஆறினார்கள். இரவு நேரம் நெருங்கிய சமயம் குளிர் அனைவரையும் வாட்டி எடுத்தது. குளிரை போக்கிக் கொள்ள அங்கிருந்த சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வந்து தீ மூட்டினர். இதனால் சற்றே இதம் அடைந்தனர். பிறகு நடு இரவு வரை சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கண் அசரத் தொடங்கினார்கள்.

அப்போது பூமி குலுங்கியது. அந்த அதிர்ச்சியை உணர்ந்து எழுந்தவர்கள். வானம் உயர நின்று இருந்த ஒரு அரக்கனைக் கண்டார்கள். அவன் கருமை நிறம் கொண்டு காணப்பட்டான். முதலில் சிந்துபாத்தை தான் அந்த அரக்கன் பிடித்தான். அரக்கனின் கரங்களில் மாட்டிக் கொண்டு சிந்துபாத் உயிருக்காக போராடிக் கொண்டு இருந்த சமயம். சிந்துபாத்தின் விசுவாசம் நிறைந்த ஊழியர்கள் அந்த அரக்கன் மீது ஓரளவு பெரிய, பெரிய கற்களை தேர்ந்தெடுத்து வீசி எறிந்தனர். ஆனால், அவை அனைத்தும் அந்த அரக்கனுக்கு எம்மாத்திரம்? எனினும் எரிச்சல் அடைந்த அந்த அரக்கன் சிந்துபாத்தை தூக்கி எறிந்து விட்டு மற்றவர்களை கபலி கரம் செய்யத் தொடங்கினான். மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிந்துபாத்துக்கு விதி துணை நிற்க அவன் அடர்ந்த புல் வெளிகள் நிறைந்த புதரில் போய் விழுந்தான். ஆனால் அவனுடன் வந்தவர்களில் சிலர் அரக்கனின் கால்களால் மிதிக்கப்பட்டும், இன்னும் பலர் அரக்கனின் பற்களில் அரைபட்டும் மடிந்து போயினர். இப்படியாகப் பல நாட்கள் மிகுந்த பசியில் இருந்த அரக்கன் அன்றைய தினம் நன்றாக மனித மாமிசத்தை உண்டு களித்தான். பிறகு தனது இருப்பிடமான ஒரு குகைக்குள் சென்றான்.

மறுநாள் காலை விடிந்தது, மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்த சிந்துபாத் ஆங்காங்கே சிதறிக் கடந்த தனது வேலை ஆட்களின் பிணத்தைக் கண்டு அதிர்ந்தான். இவை அனைத்துமே அந்த அரக்கனின் வேலை தான் என்பதை  உணர்ந்தான். தன்னை நம்பி வந்தவர்களைத் தன்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து, நினைத்து அழுதான். அன்றைய தினம் உணவைத் தவிர்த்தான். இரவு வரை அழுது கொண்டே இருந்தான். அதனால் அவனது முகம் வாடியது. நா வறண்டது. அவனது நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்த அந்த வனத்தின் தேவதை அவனுக்கு முன்னாள் தோன்றினாள். திடீர் என்று தனக்கு முன்னாள் ஆயிரம் சூரிய ஒளி தோன்றியது போல ஒரு அழகு நங்கை தோன்றியதைக் கண்டு முதலில் அச்சம் கொண்டான் சிந்துபாத். எனினும் தேவதை போன்ற அந்தப் பெண்ணால் தனக்கு எந்தத் தீங்கும் நேராது என்பதை அவன் மனம் நம்பியதால் அந்த வன தேவியிடம் அவளைப் பற்றிய அறிமுகத்தைக் கேட்டான். அந்த வன தேவியும் சிந்துபாத்திடம் தன்னைப் பற்றிக் கூறி அவன் அழுததன் காரணத்தை அவனது திருவாய் மொழி மூலம் அறிந்து கொண்டாள். பிறகு சிந்துபாத்துக்கு ஆறுதல் அளித்தாள். அத்துடன் அந்த அரக்கனின் உயிர் ரகசியத்தையும் சிந்துபாத்திடம் கூறத் தொடங்கினாள்.

"சிந்துபாத்! எந்த அரக்கன் உனது சகாக்களின் உயிரைப் பறித்ததாகக் கூறினாயோ அந்த அரக்கன் மிகவும் கொடியவன். பல நூற்றாண்டுகளாக இந்த வனத்தில் உள்ள மிருகங்களை கொன்று தின்று வந்துள்ளான். அவனது அட்டகாசத்தால் இந்த வனத்தின் அழகே சிதைந்து வருகிறது. ஆனால் நீ நினைத்தால் அந்த அரக்கனை உன்னால் கொல்ல முடியும். காரணம் நீ இறைவனின் அருள் பெற்றவன். நீ இறைவனின் அருள் பெற்றவன் என்பதற்கு உனது வலது கையில் இருக்கும் மூன்றாம் பிறை நட்சத்திரத்துடன் கூடிய மச்சமே சாட்சி. எனினும் அந்த அரக்கனை சாதாராண ஆயுதங்களால் கொல்ல முடியாது. நீ நேராக நான் காட்டும் பாதையில் நடந்து சென்றாய் என்றால் யாழி குகை தென்படும். அது தான் அந்த அரக்கனின் இருப்பிடம். அந்த யாழி குகையின் தெற்கே இன்னொரு குகை இருக்கும் அதற்குள் சென்றால் ஒரு புனித வாளை நீ காண்பாய். அந்த வாள் ஐந்து உலோகங்கங்களால் செய்யப்பட்ட அதி சக்தி வாய்ந்த வாள். பல நூற்றாண்டுகளாக உனக்காகவே அது அங்கு வைக்கப்பட்டு ஐந்து தலை நாகத்தால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அந்த வாளை நீ இலக்கை நோக்கி வீசினால் அது அந்த இலக்கை அழித்து விட்டு மீண்டும் உன்னிடமே வந்து சேர்ந்து விடும். அந்த வாளைக் கொண்டு தான் இந்த அரக்கனைக் கொல்ல இயலும். இதோ இந்த மோதிரத்தை வைத்துக் கொள். இது உனக்கான எனது பரிசு.  இது உனது கையில் இருந்தால் இந்த வனத்தில் இருக்கும் எந்த ஜீவ ராசியாலும் உனக்கு ஆபத்து வராது. அது மட்டும் அல்ல, உலகத்தில் இருக்கும் பறவைகள், விலங்குகள் போன்ற ஏனைய உயிர் இனங்களும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என்பதை நீ அறிந்து கொள்வாய். அத்துடன் இந்த மோதிரத்தை உரச நான் உனக்கு முன்னாள் வந்து வேண்டிய ஆலோசனைகளை உனக்குச் சொல்லுவேன்.  சென்று வா மகனே! வென்று வா!" என்று ஆசீர்வாதம் கூறி அனுப்பினாள் வன தேவி.

வன தேவியின் ஆசிர்வாதத்தை மோதிரத்தின் வாயிலாகப் பெற்ற சிந்துபாத் கம்பீரமாக அவள் திருவாய் மலர்ந்த அந்தக் குகையை நோக்கி வீர வாளைப் பெற வீர நடை போட்டுச் சென்றான். குகையின் வாயிலை மூடி இருந்த பாறையை மிகவும் சிரமப்பட்டு நகர்த்தினான். உள்ளே எண்ணற்ற விஷப் பாம்புகள் காணப்பட்டன. ஆனால், வன தேவி கொடுத்த மோதிரம் சிந்துபாத்தின் விரல்களில் மின்னிக் கொண்டு இருந்ததால் அவைகள் அவனை தீண்டுவதற்கு அஞ்சி ஓடி ஒழிந்தன. எந்த வித எதிர்ப்புமே இல்லாமல் சிந்துபாத் வாள் இருக்கும் இடத்தை அடைந்தான் அந்த வாளை ஒரு ஐந்து தலை நாகம் அதன் மீது தனது உடலைப் பரப்பிய படி பாதுகாத்து வந்தது. சிந்துபாத்தைக் கண்டதும்,”இவனே இந்த அற்புத வாளின் சொந்தக்காரன் என்பதை உணர்ந்து” அதுவாகவே அந்த வாளை விட்டு அகன்றது. சிந்துபாத் அந்த வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த வாளின் கணம் அவனை பிரமிக்க வைத்தது. குகையை விட்டு வெளியில் வந்த சிந்துபாத் தனது அடுத்த கட்ட வேலையாக யாழி குகையின் வாயிலை அடைந்தான். அரக்கன் உள்ளே தான் இருக்கிறான் என்பதை சிந்துபாத்திற்கு அவ்வரக்கனின் குறட்டை சத்தமே காட்டிக் கொடுத்தது. தனது சகாக்களின் கொடூரமான மரணத்தை சற்றே நினைத்துப் பார்த்த  சிந்துபாத்தின் உள்ளம் குமுறியது. அதனால் அவனது கண்கள் சிவந்தது. அந்தக் கோபத்துடனேயே குகைக்குள் சென்ற சிந்துபாத் தனது கையில் இருந்த அற்புத வாள் கொண்டு அரக்கனின் கழுத்தை வெட்டினான். ரத்தம் வெள்ளமாகப் பாய அந்த இடத்திலேயே அந்த அரக்கன் அலறித் துடித்து மாண்டு போனான். பிறகு அந்த அரக்கனின் தலையைக் கொண்டு வந்து வன தேவிக்கு அர்ப்பணம் செய்தான் சிந்துபாத். வன தேவியும் கொடியவன் இறந்ததால் மனம் மகிழ்ந்தாள். அத்துடன் அந்தத் தீவை விட்டு செல்லும் வழியையும் சிந்துபாத் வேண்ட, அவனுக்கு அதனைக்  காண்பித்தும் கொடுத்தாள்.

வன தேவி சொன்னது போலவே சிந்துபாத் அவள் கூறிய மார்க்கத்தில் வனத்தில் இருந்த காய்ந்த சுள்ளிகளை பொறுக்கியபடி  நடந்து சென்றான். வன தேவி குறிப்பிட்ட அதே நேரத்திலேயே சிந்துபாத் கடற்கரையை அடைந்து இருந்தான். அப்போது சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கி இருந்தான். எனினும் இருள் அந்தக் காட்டை இன்னும் முழுவதுமாக ஆக்கிரமிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஓரளவு வெளிச்சத்தில் சிந்துபாத்  தான் கொண்டு வந்த கணிசமான சுள்ளிகளை பக்குவமாகப் பற்ற வைத்தான். அதில் இருந்து அதிகளவில் புகை வெளிப்பட்டது. அதே சமயத்தில் சற்று தொலைவில் ஒரு கப்பல் வருவதைக் கண்டான். அருகில் இருந்த அடர்த்தியான மரங்களின் கிளைகளை வேகமாக ஆட்டியபடி கூக்குரல் இட்டு அழைத்தான். அந்தக் கப்பலில் இருந்த தலைவன் சிந்துபாத்தின் கூக்குரலை கேட்டு அவ்விடம் நோக்கி கப்பலை திருப்பினான். அத்துடன், தூரத்தில் புகையையும் அருகில் நிராதரவாக ஒரு மனிதன் (சிந்துபாத்) நிற்பதையும் கண்டு இரக்கம் கொண்டு கப்பலை அந்தத் தீவை நோக்கி மிக வேகமாக  செலுத்தினான். கப்பலும் தீவின் கரையை அடைந்தது. சிந்துபாத்துக்கு கப்பலில் இருந்த மற்றவர்கள் உதவ அவன் தான் கொண்டு வந்த வாளுடன் கப்பலில் பத்திரமாக ஏறிக் கொண்டான். உடனே அந்தக் கப்பல் புறப்பட்டது. கப்பலில் உள்ள அனைவரும் சிந்துபாத்தின் கதையைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். இருந்தாலும் அந்தத் தீவில் அப்படி ஒரு அரக்கன் இருப்பதைப் பற்றி ஏற்கனவே அவர்கள் கேள்விப்பட்டு இருந்ததால், சிந்துபாத் கூறியது அனைத்தும் உண்மையாகத் தான் இருக்கும் என்று அவர்கள் தீர்க்கமாகவே நம்பினார்கள்.

ஓர் இரவு, ஓர் பகல் என சிந்துபாத் அந்தக் கப்பலில் அவர்களுடனே தங்கி மகிழ்ந்தான். பிறகு அவர்களின்  கப்பல் "யுரேசியா” என்னும் இடத்தை அடைந்தது. அது தான் கப்பலில் வந்தவர்களின் சொந்தத் தீவு. கப்பலின் தலைவன் தனது தீவில் இறங்கியவுடன் முதல் வேலையாக சிந்துபாத்தை அவனது அரசரான "ஷா அப்பாஸிடம்” கொண்டு சென்று அறிமுகம் செய்து வைத்தான். அத்துடன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அரசரிடம் மறைக்காமல் கூறி முடித்தான். சிந்துபாத்தின் கதையை கேட்ட அரசர் மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். "இப்படி எல்லாம் கூட இந்த உலகத்தில் ஆச்சர்யங்கள் உண்டா?” என்று எண்ணி வியந்தார். எனினும், சிந்துபாத்தின் கதைகளுக்கு அவனது கையில் இருந்த வீர வாளே ஒரு சாட்சியாக இருந்ததால் அரசரால் அவன் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை. பிறகு சிந்துபாத்தை கௌரவித்து அரசர் ஷா அப்பாஸ் அவனுக்கு ஆசனம் கொடுத்து அமரச் செய்தார்.

சிந்துபாத்தை பார்த்த மாத்திரத்திலேயே ஷா அப்பாஸுக்கு அவனை மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதனால் தனது அரண்மனையிலேயே அவனை தங்க வைத்து தனது அந்தரங்க செயலாளர் ஆக நியமித்துக் கொண்டார். சிந்துபாத்தும் அரசர் கொடுத்த பொறுப்புகளை நல்ல முறையில் கவனித்து வந்தான். அதனால் சிந்துபாத் மீது அரசருக்கு இருந்த மதிப்பு கூடியது. எனவே அனைத்து முக்கியப் பொறுப்புகளுமே சிந்துபாத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது. ராஜாங்க விஷயமாய் சிந்துபாத் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியும் இருந்தது. அந்த ஊர் மக்கள் அனைவருக்குமே சிந்துபாத்தை பிடித்துப் போய் விட்டது. அவர்கள் அனைவரும் சிந்துபாத்தை தன் வீட்டுப் பிள்ளையாகவே  நினைக்கத் தொடங்கினார்கள். சிந்துபாத்தும் மக்களின் உள்ளக் கருத்தையும் அவர்களது தேவைகளையும் உடனுக்குடன் அறிந்து அதனை அரசர் மூலமாகவே நிறைவேற்றிக் கொடுத்தான். அதனால் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றான். பெண்கள் உட்பட அங்குள்ள மக்கள் அனைவருமே குதிரை சவாரியில் சிறந்து விளங்கினார்கள். மலைகள் மற்றும் காடுகள் நிறைந்து காணப்பட்ட அந்த வளமான பகுதியில் அனைவருக்குமே குதிரைகள் தான் முக்கிய போக்குவரத்து சாதனமாக விளங்கியது. எனினும் அங்கு உள்ள மக்கள் யாருமே சேணத்தை உபயோகிக்காமல் குதிரை மீது பயணம் செய்து வந்தனர். இதனை கவனித்தான் சிந்துபாத்.

ஒரு நாள் சிந்துபாத்  மன்னருடன் பேசிக் கொண்டு இருந்த சமயத்தில்," பிரபுவே, தாங்கள் குதிரையில் சவாரி செய்யும் சமயத்தில் சேணத்தை உபயோகித்தால் நலமாக இருக்கும்; சவாரி செய்வதற்கும் தங்களுக்கு இலகுவாக இருக்கும். அப்படி இருக்க தாங்கள் ஏன் அதனைப் பயன்படுத்தக் கூடாது?" என்று கேட்டான்.

சேணத்தைப் பற்றி எதுவுமே தெரியாத மன்னர் உண்மையில் சிந்துபாத் சொன்னதைக் கேட்டு வியந்தவராய் அதனைப் பற்றி விபரமாகக் கூறக் கேட்டுக் கொண்டார். உடனே சிந்துபாத் அது பற்றி விபரமாக மன்னரிடம் எடுத்துக் கூறினார்.

அதனைக் கேட்ட மன்னர்," சிந்துபாத்! அந்த சேணம் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டார்.

"நானே ஒரு சேணத்தைத் தயாரித்துத் தருகிறேன். தாங்கள் அதனை தங்கள் குதிரையின் மீது போர்த்தி சவாரி செய்தால் அதன் அருமையைத் தெரிந்து கொள்ளலாம்" என்று மறுமொழி கூறி மன்னரின் அனுமதியுடன் சேணத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான் சிந்துபாத்.

ஏற்கனவே முன்பு குதிரை காரர்களிடம் சேணத்தை நன்கு செய்ய பயிற்சி எடுத்த சிந்துபாத் சில வாரங்களிலேயே ஒரு அழகான சேணத்தை தயார் செய்து அதில் கால்மிதிகளை  இட்டு, அழகாக குஞ்சங்களையும் கட்டி மன்னரின் பட்டத்து குதிரை மீது போர்த்தி அதற்கு கடிவாளத்தை இட்டான்.

பிறகு மன்னரின் பட்டத்து குதிரையை அலங்காரத்துடன் மன்னரிடம் வாத்தியங்கள் முழங்க கூட்டிச் சென்றான். தனது குதிரையின் புதுமையான தோற்றத்தைக் கண்ட மன்னர் வியந்து போனார். ஆச்சர்யம் அடைந்தார். தாமதிக்காமல் குதிரை மீது ஏறி அந்தச் சேணத்தில் கச்சிதமாக அமர்ந்தார். அது அவருக்கு மிகவும் வசதியாக இருந்தது. சிந்துபாத்தின் அற்புதமான உழைப்பை பாராட்டி மன்னர் அவனுக்கு வெகுமதிகளை அளித்தார்.

இப்படியாக மன்னரின் குதிரைக்குச் சேணம் பொருத்தப் பட்டதுமே, பிரபுக்கள் சிலர் அதனைக் கண்டு தங்களுக்கும் அதே போல ஒரு சேணத்தை செய்து தருமாறு சிந்துபாத்திடம் வேண்டினர். அவர்களுக்கும் சிந்துபாத் சேணத்தை தயார் செய்து கொடுத்தான். இதனால் அவர்களும் குதிரை மீது மிகவும் சொகுசாக எறித் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். அதை பார்த்த அரசு அதிகாரிகள் பலர் அவர்களுக்கும் சேணத்தை செய்து தர வேண்டும் என்று கேட்க. சிந்துபாத் சேணம் செய்வதை ஒரு தனித் தொழிலாகவே ஆக்கிக் கொண்டார். இப்படியாக அந்த ஊரில் உள்ள அனைவருமே சேணத்தை உபயோகிக்க கற்றுக் கொண்டனர். சிந்துபாத் அந்த ஊரில் இருந்த வேலை இல்லாத இளைஞர்கள் பலருக்கும் சேணம் செய்யக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவர்கள் அனைவருமே ஒரு தொழிலைக் கற்று பொறுப்புடன் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இதனால் சிந்துபாத்துக்கு இன்னும் அதிகமாகவே அந்த ஊரில் மதிப்பு கிடைத்தது. சிந்துபாத் எது கேட்டாலும் அந்த ஊரில் இல்லை என்று சொல்லாமல் மக்கள் கொடுக்கத் தொடங்கினார்கள். அரசு அதிகாரிகள் மூலமாகவும் சிந்து பாத்திற்கு பல சலுகைகள் கிடைத்தது.

எனினும் ஒருவன் நன்றாக வளர்வது ஒரு சிலருக்கு பிடிக்காது என்பார்கள். அந்த வகையில் சிந்துபாத்தையும் உயர் குடி பிரபுக்களைக் கொண்ட ஒரு கூட்டம் வெறுத்தது அவனது வளர்ச்சியை பார்த்துப் பார்த்து பொறாமைத் தீயில் வெந்தது.

"எங்கிருந்தோ இருந்து வந்து நமது ஊரில் இவன் கொடி கட்டிப் புகழுடன் இருக்கிறானே! நம்மை விட மக்கள் இவனை மதிக்கின்றனரே!" என்று பொருமித் தள்ளியது அந்தக் கூட்டம். இது சிந்துபாத்துக்கும் தெரியும் எனினும் அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான்.

பொறாமை கொண்ட அந்தக் கூட்டம் மன்னரிடமும் சிந்துபாத்தைப் பற்றி தவறாகக் கூறியது. ஆனால், சிந்துபாத் மீது பெரிய அளவில் மதிப்பு வைத்து இருந்த மன்னர் அதைப் பற்றி எல்லாம் காதில் வாங்கவே இல்லை. இப்படியே சில காலம் சென்றது.

ஒரு நாள் மன்னர் சிந்துபாத்திடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் சிந்துபாத்திடம்," எங்களில் நீயும் ஒருவனாக ஆகி விட்டாய்.; இனி நீ எங்களுடன் தான் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல நான் ஒரு திட்டத்தை வைத்து உள்ளேன். அதற்கு நீயும் இசைவு தெரிவிப்பாய் என்று நம்புகிறேன்" என்றார்.

மன்னர் கூறியதைக் கேட்ட சிந்துபாத் குழம்பிப் போனான்.

"மன்னர் என்ன திட்டத்தை வைத்து இருக்கிறாரோ தெரிய வில்லையே சரி நாமே கேட்டு விடலாம்" என்று சிந்தித்தவனாய் மன்னரிடம்," அரசே! தங்களது திட்டம் எதுவானாலும் அது நிச்சயம் எனக்கு நன்மையைத் தான் செய்யும். அதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனினும் அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ள நான் ஆவலாக உள்ளேன்" என்றான்

சிந்துபாத் மேற்கண்டவாறு சொன்னதைக் கேட்ட மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். புன்னகைத்த முகத்துடன்," சிந்துபாத் உனக்குத் தான் என் மீது எவ்வளவு நம்பிக்கை! நிச்சயம் உனது நம்பிக்கை வீண்  போகாது. நீ சொல்வது உண்மை தான். நல்லதொரு திட்டத்தை தான் நான் உனக்காக வைத்து உள்ளேன். எத்தனை காலம் தான் நீயும் தனியாக இருப்பாய்? உனக்கும் ஒரு துணை வேண்டாமா? அந்தத் துணை உன்னைப் போலவே ஒரு புத்திசாலிப் பெண்ணாக இருந்தால்! அதிலும் அவள் உனது மனைவியாக இருந்தால்! ஆம் சிந்துபாத் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து உனக்கு நான் திருமணத்தை நடத்த ஆசை கொண்டு உள்ளேன். வெளிப்படையாகவே  கேட்கிறேன் எனது மகள் பாத்திமாவை நீ திருமணம் செய்து கொள்ளத் தயாரா? அவளும் உன்னை மனதார விரும்புகிறாள்" என்றார்.

மன்னரே இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் சிந்துபாத்துக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அதே சமயத்தில் மன்னர் கூறியதை ஏனோ அவனால் மறுக்கவும் முடியவில்லை. சில மணி நேர யோசனைக்குப் பிறகு அவன் இதற்கு சம்மதம் தெரிவித்தான். சிந்துபாத்தின் சம்மதத்தைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார்.

ஆனால் மறுபுறம் பொறாமைத் தீயில் ஏற்கனவே வெந்து கொண்டு இருந்த பிரபுக்கள் சிலர் மன்னரின் முடிவைக் கேட்டு மேலும் வெந்து நொந்தார்கள்.

ஆனால் அரசர் தனது பெண்ணை சிந்துபாத்துக்குத் தரத் தீர்மானித்தே விட்டார். ஒரு நல்ல நாளில் சிந்துபாத்- பாத்திமா திருமணம் நடந்தேறியது. அதில் ஊரே கலந்து கொண்டு தம்பதியர் இருவரையும் வாழ்த்தி மகிழ்ந்தது.

பாத்திமாவுடனான சிந்துபாத்தின் மண வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருந்தது. அரசனின் மகளாகவே பாத்திமா இருந்தாலும் அவளிடம் சிறிது கூட "தான்" என்ற அகந்தை எல்லாம் இல்லை. சந்தோஷமாக சிந்துபாத்துக்கு வேண்டிய பணி விடைகளை எல்லாம் செய்தாள். சிந்துபாத்தும் பாத்திமாவை மிகவும் நேசித்தார். அவளை எப்படியாவது நேரம் பார்த்து மன்னரின் அனுமதியுடன் பாக்தாத்துக்கு தன்னுடன் அழைத்துச் சென்று விட வேண்டும் என்பதில் சிந்துபாத் சித்தமாக இருந்தாலும் அதை பற்றி ஏனோ தனது மனைவியிடம் கூட அவர் கூறவில்லை. காலம் வரட்டும் என்று காத்துக் கொண்டு இருந்தார். ஆனால், காலம் தான் உருண்டு ஓடியதே தவிர அதற்கான சந்தர்ப்பத்தை சிந்துபாத்துக்கு அது (காலம்) கடைசி வரையில் கொடுக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்கும் சமயத்தில், ஒரு நாள் அந்த ஊரில் இருந்த பரப்புக்களில் ஒருவரும் சிந்துபாத்தின் நெருங்கிய நண்பருமான அப்சலின் மனைவி ஈரா பேகம் இறந்து போனாள். தனது அந்த நல்ல நண்பரின் மனைவி இறந்து போனதை அடுத்து சிந்துபாத் பெரிதும் வேதனை அடைந்தார். அத்துடன் அப்சலின் வீட்டிற்கு சென்று அவனுக்கு ஆறுதலும் அளித்தார்.

அங்கு வந்திருந்த தனது நண்பர்கள் பலருடன் பேசிக் கொண்டு இருந்த சிந்துபாத்துக்கு அப்போது தான் அந்த நாட்டில் இருந்த ஒரு வழக்கம் தெரிய வந்தது. அதவாது அந்த வழக்கம் அந்த நாட்டில் பல தலைமுறைகளையும் தாண்டி இருந்து வரும் பழக்கம். அது யாதெனில், பெண்களுக்கு முன்னுரிமை தரும் அந்த நாட்டில் ஒரு வேளை கணவனுக்கு முன்னாள் மனைவி இறந்து விட்டாள் எனில் அவளை புதைக்கும் சமயத்தில் உயிருடன் இருக்கும் அவளது கணவனையும் சேர்த்து கல்லறையில் தள்ளி விட்டு கல்லை கொண்டு கல்லறையை மூடி விடுவார்களாம். அதாவது வேறு வகையில் இதனை சொல்ல வேண்டும் எனில் மனைவி இறந்து உயிர் வாழும் கணவரை உயிருடன் மனைவின் கல்லறையிலேயே புதைத்து விடுவார்களாம்!

இதனைத் தனது நண்பர்கள் வாயிலாக கேட்ட சிந்துபாத் அதிர்ந்து போனார். இந்தப் பழக்கம் அவ்வளவு நாகரிகமான பழக்கம் இல்லை என்றும் மேலும் அப்பழக்கம் சீக்கிரத்தில் ஒழிந்து விட வேண்டும் என்றும் மனதினில் தீர்மானித்துக் கொண்டார். அப்சலை அவனது மனைவியின் கல்லறையில் புதைக்கப் போவதாக பறை அறிவிப்பும் முறைப்படி வெளியானது. அதனைக் கேட்டு அப்சலின் நண்பர்கள் அவனுக்கு கடைசியாக பிரியா விடை கொடுக்க முன் வந்தனர். பலர் அவனுக்காகவும் அனுதாபம் கொண்டு கதறினர்.

இறந்துபோன பெண்ணை ஒரு சவப் பெட்டியில் பக்குவமாகக் கிடத்தினார்கள். பின்னர் பெட்டியை மூடி அதைச் சுமந்து கொண்டு சென்றவர்கள், அவளுடைய கணவனையும் அழைத்துச் சென்றார்கள். நகரத்தை விட்டுத் தொலைவான இடத்தில் உள்ள கடற்கரையை ஒட்டி உள்ள மலையின் அருகில் சென்று, மூடப்பட்ட பெரியதொரு பாறாங்கல்லைப் புரட்டினார்கள். அதன் கீழ் குகை போல ஆழமாகச் செய்யப்பட்டு இருந்த ஒரு மிகப் பெரிய அறை இருந்தது. அது மிகவும் ஆழமானது. இன்னும் சொல்லப் போனால் அது ஒரு கிணறு போன்ற அமைப்பைக் கொண்டது. அதில் இன்னும் கூட ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் புதைக்கலாம் அவ்வளவு பெரியதாக இருந்தது. அந்த ஆழமான பள்ளத்தில் அந்தப் பெண்ணின் பிணத்தை பத்திரமாக சேதாரம் இல்லாமல் இறக்கினர்.

பிற்பாடு இறந்து போன அப்பெண்ணின் கணவனான அப்சலின் இரண்டு தோள்களிலும் பனை நார் கொண்டு கட்டி உள்ளே இறக்கினார்கள். உடன் ஒரு ஜாடி நிறைய நல்ல குளிர்ந்த நீரையும் அந்தப் பள்ளத்தில் கயிறு கொண்டு உள்ளே இருந்த அப்சல் அருகில் இருக்குமாறு இறக்கினர். பிறகு பிரார்த்தனை செய்வதற்காக ஏழு மெழுகுத் திரிகளையும், அவைகளை வைக்கும் ஒரு தாங்கியையும் உள்ளே இருந்த அப்சலிடம் கொடுத்தார்கள் அவ்வூர் மக்கள். இப்படியாக அனைத்துப் பொருள்களும் கொடுக்கப்பட்டு விட்டதா என்று பார்த்த பின்னர், அந்தக் கல்லறை வாயிலைப் பெரியதொரு பாறாங்கல்லைக் கொண்டு மூடினார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிந்துபாத்திற்கு இவை எதுவுமே பிடிக்க வில்லை. இது என்ன பழக்க வழக்கமோ தெரியவில்லையே என்று சிந்துபாத் உண்மையில் பெரிதும் வருந்தினார். ‘இதே நிலை நாளைக்கு தனக்கும் வந்து சேர்ந்தால் என்ன செய்வது?’ என்று யோசித்த போது சிந்துபாத்தின் தலையே சுற்றியது. இப்படிப் பட்ட ஊரிலே ஏன் பெண் எடுத்தோம் என்று தன்னைத் தானே முதல் முறையாக நொந்து கொண்டார். பிறகு மாளிகைக்கு சென்ற சிந்துபாத் அன்றைய இரவு உறக்கம் வராமல் தவித்தார்.

சிந்துபாத்தின் நிலையைப் பற்றிக் கேட்ட அவனது மனைவி விஷயத்தை அறிந்து கொண்டாள். பிறகு சிந்துபாத்தை பல விதங்களில் சமாதானம் செய்ய முயற்சி செய்தாள். ஆனால், சிந்துபாத் சமாதானம் ஆகாமல் அப்பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சாடினான்.

ஒரு பெண் இறந்ததும் கணவன் அவளது பிணத்துடன் சேர்த்து வைத்து  புதைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை என்றான். அதனை ஆண்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்றான். அதைக் கேட்ட பாத்திமா சிரித்தாள். பிறகு கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்த சிந்துபாத்திடம்," ஊருக்கு ஊர் இது போன்ற ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கத் தான் செய்யும். இவ்வளவு ஏன்? தங்களுக்கு தெரியுமா? ஆசியக் கண்டத்தில் பாரத தேசம் என்ற நாடு உள்ளதாம் அங்கு கணவன் இறந்து விட்டால் இறந்த உடலை எரிக்கும் போது அவனது உயிர் உள்ள மனைவியையும் சேர்த்து எரியும் சிதையில் தள்ளி எரித்து விடுவார்களாம். அதே போலத்  தான் இதுவும். அது மட்டும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? எங்கள் ஊரில் அது ஆண்களுக்கு நடக்கிறது. அவ்வளவு தான்" என்றாள்.

இதைக் கேட்ட சிந்துபாத்," ஆணோ! பெண்ணோ! யாருடைய உயிரையும் யாருக்கும் எந்த வகையிலும் எடுக்க உரிமை இல்லை. தற்கொலை செய்து கொள்வது கூட ஒரு பாவச் செயல் தான் என்கிறது அறிஞர்கள் சபை. அப்படி இருக்கும் போது இது போன்ற ஒரு அநீதியை இனி நான் இருக்கும் வரையில் இந்த ஊரிலே  நடக்க விட மாட்டேன். உடனே இதை பற்றி நாளையே நான் மன்னரிடம் பேச இருக்கிறேன்" என்றான்.

"அதைப் பற்றி நாளை பார்ப்போம். இப்போது நடக்க வேண்டியதை, இப்போது பார்ப்போம்" என்று கூறி சிரித்தபடி விளக்கை அணைத்தாள் பாத்திமா. அன்றைய இரவுப் பொழுதும் இனிதாகக் கழிந்தது. அடுத்த நாள் காலையும் விடிந்தது. அப்புதிய விடியலைக் கண்டு பூக்கள் சிரித்தன. பறவைகள் பாடின. சில கணங்களில் செவ்வானம் நீல வானமாக மாறியது. அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் புறப்பட்டனர். சிந்துபாத் முதல் வேலையாக மன்னரைக் காணச் சென்றான்.

மன்னரும் சிந்துபாத்தை நல்ல முறையில் வரவேற்றார். சிந்துபாத் மன்னருடன் சாதாரணமாக பேச்சை தொடங்கினார். மன்னரும் நல்ல மனநிலையில் தான் இருந்தார். அதனால் சிந்துபாத்துடன் நன்றாகத் தான் பேசினார். இதுவே சரியான சமயம் என்று உணர்ந்த சிந்துபாத்,"மன்னர் பெருமானே! நமது நாட்டில் மனைவி இறந்த பிறகு உயிருடன் இருக்கும் கணவரையும் கல்லறையில் சேர்த்து இறக்குகின்றோமே இந்தப் பழக்கம் சரிதானா? இதனை நாம் நினைத்தால் மாற்றலாமே!" என்று கேட்டான்.

"சிந்துபாத் இது இந்த நாட்டில் பத்து தலைமுறைகளைக் கடந்து இருக்கும் தொன்று தொட்டப் பழக்கம். இதில் எல்லாம் தாங்கள் தலையிடக் கூடாது. மேலும் இந்த நாட்டின் சட்டமே இப்பழக்கத்தை ஆதரிக்கிறது. மக்களின் ரத்தத்திலும் கூட இந்தப் பழக்கம் ஊறிப் போய் விட்டது. இனி ஒரு பேச்சுக்கே நான் இதனை மாற்ற நினைத்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் அது எனக்கே ஆபத்தை தரும். மக்கள் அதனை விரும்பவும்  மாட்டார்கள். மேலும் இந்தப் பழக்கம் எல்லோருக்கும் பொதுவானது. ஏன் எனக்கும், உங்களுக்கும் கூட நாளைக்கு மனைவி இறந்தால் இதே நிலை தான். புரிந்து கொள்ளுங்கள். இனி தாங்கள் இதை பற்றி என்னிடம் மட்டும் அல்ல, யாரிடமும்  பேசக்கூடாது. இது அரச கட்டளை" என்று உறுமினார் மன்னர். அதைக் கேட்ட பொறாமைக்கார பிரபுக்களின் கூட்டம் சிந்துபாத்தை அழிக்க இதுவே ஏற்ற ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கருதினர்.

மறுபுறம், மன்னர் இவ்வாறு கூறிய வார்த்தைகள் சிந்துபாத்தை கதி கலங்க வைத்தது என்னமோ உண்மை தான். ஏனெனில்,  இதே நிலை தான் நாளை சிந்துபாத்துக்கும். அதனால் மனைவியின் ஆயுளுக்காக இறைவனை வேண்டிக் கொண்டார்.

இது இப்படி இருக்க, ஒரு நாள் இரவு சிந்துபாத்தை அழிக்க முடிவு செய்த பொறாமைக்கார பிரபுக்களின் கூட்டம் காலிங்க நாகம் என்னும் விஷ நாகத்தை அவனது அரண்மனைக்குள் படுக்கை அறை அருகே பாம்பாட்டிகளின் துணை கொண்டு விட ஏற்பாடு செய்தது. பாம்பாட்டிகளும் கச்சிதமாக வேலையை முடித்தனர்.

சிந்துபாத்தின் படுக்கை அறைக்குள் நுழைந்தது காலிங்க நாகம். ஆனால், இதனை அறியாத சிந்துபாத்தும் அவனது மனைவியும் வழக்கம் போல சந்தோஷமாக நேரத்தை செலவழித்தனர். காலிங்க நாகமோ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் அருகே மல்லிகை வாசனையை மோப்பம் பிடித்து வந்து விட்டது.

சிந்துபாத்தும் அவனது மனைவியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். காலிங்க நாகம் சிந்துபாத்தின் அருகே வந்தது. அவனைத் தீண்டத் தயார் ஆனது. தீண்டும் நேரம், சிந்துபாத்தின் மனைவி பாத்திமா ஆழ்ந்த உறக்கத்தில் அவன் மீது தனது கையைப் போட பாம்பு சிந்துபாத்தை தீண்டாமல் தவறுதலாக பாத்திமாவைத் தீண்டி விட்டது. அவள் அலறித் துடித்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிந்துபாத் திடுக்கிட்டு எழுந்தான். பாத்திமாவின் நிலையைக் கண்டு செய்வதறியாது துடித்தான். பாம்பு கடித்த சில மணி நேரத்திற்குள் பாத்திமா வாயில் நுரை தள்ளி மாண்டு போனாள்.

அடுத்த நாள் காலை விஷயம் அரசரின் காதுகளை அடைந்தது. தனது ஆருயிர் மகள் இறந்து போன விஷயத்தை கேட்டு துடித்துப் போனார் அரசர். விஷயத்தை அறிந்த பிரபுக்கள் சிந்துபாத் சாகவில்லையே என்பதை அறிந்து கவலை கொண்டனர். எனினும் அந்த ஊர் வழக்கப்படி சிந்துபாத்தும் இறந்து போன மனைவியுடன் சேர்த்து புதைக்கப்படுவது உறுதி என்று எண்ணிய பிரபுக்கள் அகம் மகிழ்ந்தனர்.

பிரபுக்களின் எண்ணம் போலத் தான் எல்லாம் நடந்தது. பாத்திமாவின் உடல் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. சிந்துபாத்தையும் மாப்பிள்ளை போல அலங்கரித்து பாத்திமாவின் சவ ஊர்வலத்துடன் அழைத்துச் சென்றனர். வேறு வழி தெரியாமல் சிந்துபாத்தும் தனது அதிசய வாளை எடுத்துக் கொண்டு சென்றார். உடன் அரசரும் புறப்பட்டார். பிறகு கடல் அருகே அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர். பாத்திமாவை அடக்கம் செய்ய நேர்த்தியாக அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டது. கடைசியாக மன்னர் பாத்திமாவுக்காக சேர்த்து வைத்த நகைகளை அவளுடனே கூட புதைத்து விடுமாறு சொல்ல அதன் படியே செய்யப்பட்டது. கயிறு கட்டி குகைக்குள் பாத்திமாவுடன் கூடிய அவளது சவப் பெட்டியை இறக்கினர். உடன் சிந்துபாத்தையும் அவனது கடைசி விருப்பப் படி முன்பு அவன் பெற்ற அதிசய வாளுடன் அந்தக் கல்லறைக் குகைக்குள் கயிறு கட்டி இறக்கினர். உடன் ஒரு ஜாடி நிறைய தண்ணீரும் அனுப்பி வைக்கப்பட்டது. எல்லாம் முடிந்த பிறகு கல்லறையின் வாயில் பெரிய பாறை ஒன்றைக் கொண்டு மூடப்பட்டது. சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருமே தத்தமது வழியே தங்கள், தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.

வானில் சூரியன் அஸ்தமித்துக் கொண்டு இருந்த சமயம். சிந்துபாத் அந்தப் பிணவாடையைத் தாங்கிய வண்ணம் கொஞ்சம் தாக்குப் பிடித்தவனாய், களைத்துப் போன நிலையில் கொஞ்சம் நீரருந்திக் கொண்டு அங்கு ஏதேனும் புதுமை தெரிகிறதா என்று சிறிது தூரம் நடந்து சென்று பார்த்த சமயத்தில் கொஞ்சம் தொலைவில் ஒரு துவாரத்தின் வழியே சில் என்று காற்று வருவதை உணர்ந்தான். அப்போது அந்தக் குகையில் இருந்த சின்னஞ்சிறு விலங்கு ஒன்று அந்த துவாரத்தின் வழியே வெளியே சென்றது. அதையும் சிந்துபாத் பார்த்தான்.

உடனே சிந்துபாத்தின் மூளை சற்று அதிகமாகவே வேலை செய்தது. "இது தான் இந்தக் குகையிலேயே வைத்து மிகவும் பலவீனமான பகுதி போலக் காணப்படுகிறது. கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் நாம் இங்கிருந்து எளிதில் தப்பி விடலாம்" என்று தனது மனதினில் அவன் சொல்லிக் கொண்டான். பிறகு தனது கையில் இருந்த கனமான அதிசய வாள் கொண்டு அந்தத் துவாரத்தை ஓங்கி மூன்று முறை அடித்தான். பாறை இடுக்கில் இருந்த எஞ்சிய கற்கள் அனைத்தும் உருண்டு கிழே விழுந்தது. ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு துவாரம் பெரிதானது. "இனி கவலை இல்லை இந்தத் துவாரம் போதும், இதன் வழியே நாம் வெளியே சென்று விடலாம்" என்று மீண்டும் தம் மனதினில் எண்ணிய சிந்துபாத் ஓடிச் சென்று தனது வழிச் செலவுக்கு வேண்டி தனது மனைவின் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அதனை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டான். பிறகு தான் முன்பு ஏற்படுத்திய அந்த துவாரத்தை பயன்படுத்திக் கொண்டு மெல்ல குகையை விட்டு வெளியே வந்தான். அந்த சமயம் நன்கு இருட்டி இருந்தது.

குகையை விட்டு இவ்விதம் வெளியே வந்த சிந்துபாத் அந்தப் பொந்தை மீண்டும் துவாரம் வெளியே மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் நன்கு மூடினான். பிறகு தான் குகையில் இருந்து தப்பி வந்த சுவடே தெரியாத வண்ணம் மணலில் கால் பதிக்காமல் புள் வெளியில் கால் பதித்து அக்குறுக்கு வழி காட்டும் பாதையில் நடந்து சென்று கடற்கரையை அடைந்தான். அங்கு மேட்டுப் பகுதியான ஒரு இடத்தில் நின்றபடி ஏதேனும் கப்பல் வருகிறதா என்று சிறிது நேரம் பார்த்தான். ஆனால், பல மணி நேரம் நின்று பார்த்தும் கப்பல் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. சற்று நேரம் யோசித்த சிந்துபாத் அக்கடலில் அலைகளின் வேகம் அந்த அளவுக்கு இல்லை என்பதை உணர்ந்து அருகில் இருந்த மரங்களைக் கொண்டு கச்சிதமாக ஒரு தெப்பத்தை செய்து கொண்டான். தெப்பத்தை கடலில் விட்டுப் பார்த்தான். அவன் நினைத்ததை விட அது நன்றாகவே கடலில் மிதந்தது. அதனைக் கொண்டு கடலில் சில தூரம் பயணம் செய்தான். ஒரு இடத்தில் நிறுத்தினான் அதற்கு மேல் சென்றால் ஆபத்து என்பதை உணர்ந்து வேறு ஏதேனும் கப்பல் வருகிறதா என்று பார்த்தபடி காத்திருந்தான். அதிகாலைப் பொழுதும் விடிந்தது. வானம் பளிச்சென்று காணப்பட்டது. எனினும் சிந்துபாத்தின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை.

பிறவியிலேயே இறை அருள் பெற்ற சிந்துபாத்திற்கு சிறு வயதில் இருந்தே விதி சாதகமாக எப்போதுமே இருந்து வந்தது. அதனால் அதிர்ஷ்டம் அடிக்கடி அவனது கரங்களை முத்தம் இட்டது. அதே போலத் தான் இந்த முறையும் நடந்தது. ஆம்! சிந்துபாத்தின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் எதிர்பார்த்தபடியே அவன் தெப்பத்தில் இருந்த அந்த இடத்தில் இருந்து சற்று வெகு அருகில் அந்த வழியாக ஒரு படகு சென்றது. மீனவர்கள் பலர் பாடிக் கொண்டும் துடுப்பை போட்டுக் கொண்டும் வழக்கம் போலத் தங்கள் மீன் பிடித் தொழிலை செய்ய விரைந்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி சிந்துபாத் பலமாகக் கூக்குரல் எழுப்பினான். கைகளை பலமாகத் தட்டினான். தனது வாளைக் கொண்டு நீரில் சலசலப்பை ஏற்படுத்தினான். அவனது முயற்சிகள் அனைத்தும் ஒரு சேர அவனுக்குப் பலன் அளித்தது. படகில் இருந்த மீனவத் தலைவன் சிந்துபாத்தை கண்டு கொண்டான். உடனே சிந்துபாத் இருக்கும் திசையை நோக்கிப் படகை செலுத்தச் சொன்னான். படகு விரைவாக செலுத்தப்பட்டது. சிந்துபாத்தின் அருகில் வந்து சேர்ந்தது. சிந்துபாத்துக்கு அந்தப் படகில் இருந்த நல் மனம் கொண்ட பலர் உதவ பத்திரமாகப் படகில் ஏறிக் கொண்டான் அவன்.

படகும் மதிய வேளையில் "ஜாவா" என்னும் தீவை அடைந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் மீனவத் தலைவனிடம் சிந்துபாத் தனது கதையை கூறி முடித்தான். சிந்துபாத்தின் மனைவி இறந்ததைக் கேட்ட மீனவத் தலைவன் அதற்காக மிகவும் வருந்தினான். பிறகு தன்னை நம்பி வந்த சிந்துபாத்தை பத்திரமாக ஜாவாவில் இருந்த ஒரு பெரிய துறைமுகத்தில் கொண்டு சென்று சேர்த்தான் அந்த மீனவத் தலைவன். அந்தத் துறை முகத்திற்கு பாக்தாத் செல்லும் சில வணிகக் கப்பல்களும் வாரத்திற்கு ஒரு முறை வந்து போகும். அன்றைய தினம் மாலையும் ஒரு கப்பல் வரும் என்று அனைவரும் ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். உரிய நேரத்தில் பாக்தாத் செல்லும் அந்தக் கப்பலும் வந்து சேர்ந்தது. அதில் சிந்துபாத்தை ஏற்றி விட்டான் மீனவத் தலைவன். அந்த உதவிக்கு பிரதிபலனாக சிந்துபாத் அந்த மீனவத் தலைவனுக்கு இறந்து போன தனது மனைவியின் சில நகைகளை கொடுக்க முன் வந்தான். ஆனால் பேராசை இல்லாத மீனவத் தலைவன் சிந்துபாத் கொடுத்த நகைகளை கையில் வாங்கி மனம் கேட்காமல் அதனை சிந்துபாத்திடமே திருப்பிக் கொடுத்து," தாங்கள் இதனை தங்களது இறந்த மனைவியின் ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கண்டிப்பாகக் கூறி விட்டான். சிந்துபாத்தும் மீனவத் தலைவனின் பெருந்தன்மையை பாராட்டி பல முறை நன்றி கூறினான். பிறகு மீனவத் தலைவன் விடை பெற்றான். பாக்தாத்திற்கு செல்ல வேண்டிய அந்தக் குறிப்பிட்ட வணிகக் கப்பலும் புறப்பட்டது.

சிந்துபாத் இறந்த தனது ஆருயிர் மனைவியை நினைத்துக் கொண்டே இரவும் பகலுமாக கப்பலில் காலத்தை கழித்தான். பாத்திமாவுடன் அவன் கழித்த காலங்கள் இனி திரும்பி வரப் போவதில்லை என்பதை உணர்த்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டான் சிந்துபாத். எனினும் ஏனோ அவன் மனம் மேலும், மேலும் நடந்து முடிந்த பழைய சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து அழுதது. தன்னுடன் முன்பு புறப்பட்டு வந்த வேலை ஆட்கள் நூறு பேரும் இறந்த அந்தச் சம்பவம் வேறு சிந்துபாத்தின் மனதை உலுக்கியது. பாக்தாத் அடைந்த பிறகு இறந்த உறவினர்களிடம் தான் என்ன சொல்லப் போகிறோம் என்பதை சிந்துபாத் நினைத்த போது அவன் நா துக்கத்தில் வறண்டது.

பல நாட்கள் பிரயாணத்திற்குப் பிறகு சிந்துபாத் வந்த கப்பல் பாக்தாத் நகரத்தை அடைந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தனது ஊருக்கு வந்து சேர்ந்தான் சிந்துபாத். அதனைக் கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் உடனுக்குடன் அவனை வந்து பார்த்தனர். அவர்களிடம் சிந்துபாத் தனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். அவனுடன் சென்ற வேலை ஆட்கள் நூறு பேருமே இறந்து விட்டனர் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தான் சிந்துபாத். அத்துடன் அந்த  நூறு பேரின் குடும்பத்துக்கும் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பொன்னையும் பொருளையும் தார்மீக ரீதியாக கொடுத்துத் தீர்த்தான். இதனால் அவனது செல்வம் பெரும் அளவில் செலவானது. உண்மையில் அந்த நூறு பேரும் உயிருடன் இருந்திருந்தால் கூட அவ்வளவு தினார்களை தங்களது குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு சிந்துபாத் இறந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தன்னால் ஆன பொருள் உதவிகளை செய்தான். சிந்துபாத்தை பொறுத்த வரையில் பணம் பெரிய விஷயமாக இருக்க வில்லை. காரணம் அந்த நூறு வேலையாட்களும் அவனிடம் விசுவாசத்துடன் நடந்து கொண்டவர்கள்.

இப்படியாகத் தனது எல்லா கடமைகளையும் முடித்து விட்ட சிந்துபாத் அவனது மாளிகையிலேயே சில காலம் தங்கினான். பாத்திமாவை நினைத்து, நினைத்து மனதிற்குள் வருந்தினான். "அவள் இருந்திருந்தால் தன்னை இப்படி பசியுடன் விட்டு இருக்க மாட்டாளே!" என்று நினைத்து, நினைத்து பல நாட்கள் அவன் அழுதான். சில சமயங்களில் பாத்திமா தனது பெயரை சொல்லி அழைப்பதைப் போல உணர்வான். அதனால் அக்கணம் மகிழ்வான். அது பிரமை என்று அறிந்த மறு கணம் அழுவான். தன்னந்தனியான அந்த மாளிகையில் தன்னைத் தானே அவன் தேற்றிக் கொள்வான். பல சமயங்களில் நிலவின் குளிர்ந்த காற்று கூட அவனை சுட்டு எரித்தது. சில சமயங்களில் இறந்து விடலாமா? என்று கூட சிந்துபாத் நினைப்பான். ஆனால் தான் இறந்தால் தன்னுடன் இருக்கும் பாத்திமாவின் நினைவுகளும் சேர்ந்து இறந்து விடுமே என்பதால் தனது முடிவை உடனுக்குடன் மாற்றிக் கொள்வான். இப்படியே மனதில் வலியை சுமந்து கொண்டு தன்னைக் காண வருபவர்களிடம் தனது வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளம் அழுதாலும் உதடுகளாவது சிரிக்கட்டுமே என்ற படி தனது வாழ் நாளை ஒட்டி வந்தான் சிந்துபாத். ஆம்! இப்படித் தான் சிந்துபாத்தின் காலங்கள் அவன் பார்த்துப் பார்த்து கட்டிய அந்த ஆடம்பர மாளிகையில் அமைதியாகக் கழிந்தது.

சிந்துபாத்தின் இந்த நிலையை அறிந்த அவனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான அக்கீம், "இப்படியே நண்பன் சிந்துபாத்தை விட்டு விடக் கூடாது. அவனுக்கு நல்லதொரு வழியை காட்ட வேண்டும்" என்று முடிவு செய்தான். கடல் பயணத்தின் மீது சிந்துபாத்திற்கு இருந்த மோகத்தை பயன்படுத்தி தன்னுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய கப்பலில் வருமாறு சிந்துபாத்துக்கு அழைப்பு விடுத்தான். முதலில் சிந்துபாத் இதற்கு மறுப்பு தெரிவித்தான். ஆனால் அக்கீம் சிந்துபாத்திடம்," சிந்துபாத்! நான் உன்னை மீண்டும் ஒரு செல்வந்தனாக பார்க்க விரும்புகிறேன். அத்துடன் உன்னைப் போன்ற நல்லவர்கள் செல்வத்தை சேர்த்துக் கொண்டால் தான் அது உரிய நேரத்தில் ஏழைகளின் கரங்களுக்கு சென்று அவர்களின் பசியை போக்கும். அதற்காக வேண்டியாவது மீண்டும் உனது வியாபாரத்தை தொடங்கு!" என்று கூறி மிகவும் வற்புறுத்தினான். சிந்துபாத்தும் தன்னிடம் இருந்த எஞ்சிய பொருள்களை விற்று அவற்றையே மூலதனமாக்கி வியாபாரத்திற்கு வேண்டிய சரக்குகளை வாங்கினான். அதனைக் கப்பலில் ஏற்றினான். ஆனால் சிந்துபாத்தின் நண்பனான அக்கீமால் அவன் சொன்னபடி சிந்துபாத்துடன் வர முடியாமல் போகவே அவனது பொருள்களையும் தானே விற்றுக் கொடுக்க தீர்மானித்து அதனையும் கப்பலில் ஏற்றிக் கொண்டான் சிந்துபாத்.

சிந்துபாத் மீண்டும் தனது வியாபாரத்தை தொடங்கியதைக் கண்ட மற்ற வணிகர்கள் அகம் மகிழ்ந்து அவனை வரவேற்றார்கள். எல்லோரும் சந்தோஷமாக பேசி மகிழ குறிப்பிட்ட நேரத்தில் கப்பல் புறப்பட்டது. இவ்வாறாக சிந்துபாத்தின் மூன்றாவது கப்பல் பயணம் தொடங்கியது.