சிந்துபாத்தின் மூன்றாவது கப்பல் பயணம்
கப்பல் புறப்பட்டுப் பல கடல்களையும், நகரங்களையும் கடந்து சென்று கொண்டு இருந்தது. ஒவ்வொரு துறைமுகத்திலும் சிந்துபாத் மட்டும் இன்றி மற்ற வர்த்தகர்களும் தங்களது சரக்குகளை விற்றும், புதிய சரக்குகள் பலவற்றை வாங்கியும் தங்களது பயணத்தையும், வியாபாரத்தையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருந்தனர்.
இப்படியாக அந்த வணிகக் கப்பல் போய்க் கொண்டு இருந்த நிலையில் பல நாட்கள் எந்தத் தீவுகளையும் காணாமல் கடலில் சென்று கொண்டு இருப்பதை உணர்ந்தான் கப்பல் தலைவன். அதனை உணர்ந்த மாத்திரத்தில் பதற்றம் அடைந்தான். அப்போது தான் கப்பல் தவறான திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதையே அவன் அறிந்தான். தன்னுடன் வந்த மாலுமிகளிடம் விஷயத்தை சொல்லி இந்தத் தவறு எப்படி நடந்தது என்று ஆலோசித்தான். அப்போது மாலுமிகளில் ஒருவன்," தலைவா! தெரிந்தோ தெரியாமலோ தவறு நேர்ந்து விட்டது. கப்பல் தனது இலக்கை மாறி பயணித்துக் கொண்டு இருப்பதை வணிகர்கள் அறிந்தால் பதற்றம் அடைவார்கள். அதனால் நமது வேலையும் கெடலாம். அதனால் இது வணிகர்களுக்கு தெரியக் கூடாது. அவர்களிடம் நாம் ஏதேனும் சொல்லி சமாளிக்க வேண்டும். அத்துடன் இதே திசையில் நாம் இன்னும் சில தூரங்களுக்கு சென்று பார்ப்போம் நிச்சயம் நமக்கு ஏதேனும் ஒரு வழி பிறக்கும்" என்றான்.
கப்பல் தலைவனும் "அது தான் சரி" என்று முடிவு செய்து அமைதி காத்தான். கப்பல் பயணமும் தொடர்ந்து கொண்டு இருந்தது. நாளுக்கு நாள் கப்பலில் இருந்த உணவுப் பண்டங்கள் குறைந்து வருவதை வணிகர்கள் கப்பல் தலைவனிடம் சொல்ல, "இதோ அங்கு ஒரு நிலப் பகுதி தென்படுகிறது கவலை வேண்டாம். அதோ சீக்கிரத்தில் அங்கு ஒரு தீவை நெருங்கி விடுவோம்" என்றெல்லாம் தினம், தினம் எதையேனும் கூறி சமாளித்து வந்தான் கப்பல் தலைவன். இருந்தாலும் அவன் மனதிலும் ஒரு வித பயம் இருந்து வந்தது உண்மை தான். இந்நிலையில் ஒரு நாள் தூரத்தில் ஒரு தீவு தெரிவதை கண்ட மாலுமிகள் சந்தோஷமாக ஓடிச் சென்று கப்பல் தலைவனிடம் அது பற்றிக் கூறினர். அதைக் கேட்ட கப்பல் தலைவன் விரைந்து அந்தத் தீவை நோக்கி கப்பலை செலுத்துமாறு ஆணை பிறப்பித்தான். கப்பலும் அந்தத் தீவை நோக்கி விரைந்து செலுத்தப்பட்டது.
பிறகு தீவை நெருங்கியதும் நங்கூரம் பாய்ச்சப்பட்டது. கப்பலில் இருந்து அனைவரும் இறங்க பலகைகள் போடப் பட்டது. எனினும் சிந்துபாத் உட்பட சில வணிகர்கள் மட்டும் கப்பலிலேயே இருக்க பல வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த சரக்குகளுடன் இறங்கினர். ஆனால், உண்மையில் அந்த வணிகர்கள் எதிர்பார்த்தபடி அந்தத் தீவில் மக்கள் நடமாட்டமே இல்லை. இருந்தும் எங்காவது மக்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்தத் தீவுக்குள் தனித் தனி குழுக்களாகப் பிரிந்தபடி நடந்து சென்றனர். அப்போது ஒரு குழுவினர் பெரிய வெள்ளை நிற மண்டபத்தின் பக்கம் சென்றனர். அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது பளிங்கு மண்டபம் போலத் தான் தெரிந்தது. ஆனால், அருகில் செல்லச் செல்ல வெள்ளைப் பாறை போல தோற்றம் அளித்தது. ஆனால், அது பாறையும் அல்ல, அதனால் அது என்ன என்பதை அறிய விரும்பிய வணிகர்கள் சிலர் அருகில் இருந்த சில பெரிய கற்களை எடுத்து அந்த வெள்ளை பளிங்குக் கல்லின் மீது வீசினார்கள். ஆனால், அது அவர்கள் நினைத்தது போல பளிங்குக் கல் எல்லாம் இல்லை. அது ஒரு ராட்சஸப் பறவையின் முட்டை. வணிகர்கள் கல் கொண்டு அடித்ததால் அந்த முட்டை சிதைந்து அதில் இருந்த தண்ணீர் வெளியே ஓடியது.
சிந்துபாத் கப்பலில் இருந்ததால் இந்த விஷயம் அவனுக்கு முதலில் தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்து கத்த ஆரம்பித்தான். சிந்துபாத்துக்கு ஏற்கனவே அந்தப் பறவையை பற்றிய அனுபவம் உள்ளது. அதனால் அவனுக்குத் தெரியும் இனி அந்த ராட்ச பறவை யாரையும் உயிருடன் விடாது என்று. எனினும் சிந்துபாத் அந்தப் பறவையைப் பற்றி அனைவரிடமும் எச்சரிப்பதற்குள் அந்தப் பிரம்மாண்டப் பறவை தனது ஜோடியுடன் அவ்விடத்திற்கே வந்து விட்டது. அதன் இறகுகள் சூரியனின் ஒளிக் கதிர்களையே மறைக்கும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக இருந்தது.
முட்டை உடைந்து கிடந்ததைக் கண்ட அந்தப் பறவை பெரிய அளவில் இரைந்து கத்தியது. அதனைக் கண்ட அதன் துணையான ஆண் பறவையும் மிகவும் துயர் கொண்டு வருந்திக் கத்தியது. அந்த இரண்டு பறவைகளும் கப்பலில் வந்த புதியவர்கள் தான் முட்டைக்கு சேதத்தை விளைவித்து இருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக அனுமானித்துக் கொண்டன. உடனே அந்தக் கப்பலை நோக்கிப் பறந்து வந்தன. அதனைக் கண்ட கப்பல் தலைவன் அலறி அடித்த படி அபாய சங்கை ஒலிக்கச் செய்தான். தீவில் இருந்த வணிகக் குழுக்கள் அந்த அபாய ஒலியை கேட்டு தங்களது கப்பலை நோக்கி அதிவேகமாக விரைந்தனர். கப்பல் தலைவன் மிகவும் சிரமப்பட்டு பாதியளவு வணிகர்களை கப்பலில் ஏற்றி விட்டான். எனினும் அந்தத் தீவில் மனிதர்களை உண்ணும் தாவரங்களும் இருந்ததால் பலர் அந்தத் தாவரங்களிடம் சிக்கி இறந்தனர். அப்போது தான் வணிகர்கள் அனைவருக்குமே அந்தத் தீவைப் பற்றிய பயங்கரங்கள் தெரிய வந்தன.
இந்நிலையில் அந்தப் பிரம்மாண்டப் பறவை சிந்துபாத்தும் மற்ற வணிகர்களும் இருந்த அந்தக் கப்பலை தனது துணையுடன் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டது. மேலும் கப்பலில் இருந்த அனைவரையும் தனது தூண் போன்ற கூர்மையான அலகால் கொத்திக் கொன்றது. இன்னும் சிலரை உண்டே களித்தது. இதனைக் கண்ட கப்பல் தலைவன் சற்றே சமாளித்து விரைந்து கப்பலை செலுத்தத் தொடங்கினான். கப்பல் அதுவரையில் வரலாறு காணாத வேகத்தில் செல்லத் துவங்கியது. எனினும் அந்த ராட்ச பறவைகள் விடாமல் அந்தக் கப்பலை வெகு தொலைவு தூரம் வரையில் துரத்திக் கொண்டு சென்றன. கப்பலும் நடு கடலை கடந்து கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட பல மணி நேரம் தங்களது கப்பலை வெகுவாக இயக்கிய மாலுமிகள் அனைவரும் சோர்ந்து போயினர். ஒரு கட்டத்தில் கப்பலின் வேகம் குறைந்ததால் அந்தக் கப்பலை ராட்சஸப் பறவைகள் மிக எளிதாகத் துரத்தித் தாக்கின. அது மட்டும் அல்லாமல் அந்தக் கப்பலில் இருந்து சில மைல் தூரத்தில் காணப்பட்ட இன்னொரு தீவில் இருந்து பெரிய பெரிய பாறைகளை தத்தமது கால் விரல்களால் பற்றிப் பிடித்த வண்ணம் வந்து கப்பலின் மீது போட்டன. இதனால் கப்பலின் பல பாகங்கள் சிதிலம் அடைந்தன. மேலும் அந்தப் பாறைகள் சில தவறி கடலில் விழுந்த படியும் பெரிய, பெரிய அலைகளை தோற்றுவித்தன. இதனால் அந்தக் கப்பலை கட்டுப் படுத்த இயலாமல் மாலுமிகள் திணறினார்கள். ஒரு கட்டத்தில் கப்பலில் சிதிலங்கள் மேலும் அதிகமாக அதன் உள்ளே கடல் நீர் புகுந்தது. அதைக் கண்ட பறவைகள் உற்சாகம் அடைந்து அந்தக் கப்பலை சீக்கிரத்தில் மூழ்கடித்து அனைவரும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மேலும், மேலும் மலைகளில் இருந்து பாறைகளை கொண்டு வந்து தனது கால் நகங்கள் மூலம் ஏற்கனவே மூழ்கிக் கொண்டு இருந்த அந்தக் கப்பல் மீது கோபத்துடன் வீசின.
இதனால் கப்பல் முழுவதுமாக மூழ்கி அதில் இருந்த அனைவரும் தத்தளிக்கத் துவங்கினர். சிந்துபாத் உட்பட இன்னும் சிலர் கப்பலில் இருந்து உடைந்து கடலில் மிதந்த உதிரி பாகங்களை பிடித்த வண்ணம் தங்களால் இயன்றவரையில் நீச்சல் அடித்து ஒரு தீவின் கரையை அடைந்தனர். அந்தத் தீவில் ஏராளமான மரங்கள் வரிசை வரிசையாக நிற்கக் கண்டனர். அந்த மரங்களில் சுவையான பழங்கள் பழுத்து கேட்பார் இன்றிக் குலுங்கிக் கிடந்தன. சிந்துப்பாத் உட்பட அவனுடன் வந்த அனைவரது வயிற்றுப் பசியையும் தீர்க்க அந்தப் பழங்கள் போதுமானதாக இருந்தன. அந்தத் தீவில் சுவையான நன்னீர் ஊற்றுகளும் காணப்பட்டன. அந்த ஊற்றுகளில் உள்ள நீரைப் பயன்படுத்தி அனைவரும் தாகம் தீர்ந்தனர், இந்நிலையில், மாலைப் பொழுது மெல்ல அகன்று இருள் அந்தத் தீவை கவ்விக் கொண்டு இருந்தது. சிறிது தூரம் சிந்துபாத்துடன் அந்தத் தீவுக்குள் நடந்த வணிகர்கள் அனைவருமே ஒரு வித பய உணர்வில் தான் இருந்தனர். காரணம் அந்தத் தீவில் எந்த வகையான ஆபத்து இருக்குமோ என்று அவர்கள் சிந்தனை செய்தது தான். எனினும் வெகு தூரம் நடந்து வந்த களைப்பினால் சிந்துபாத்தும் அவன் உடன் வந்தோரும் சற்று நேரம் கண் அயர அங்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி இறுதியில் கண்டு அடைந்தனர். அனைவரும் அவ்விடத்தில் உறங்கத் தொடங்கினார்கள். சிந்துபாத்தும் அவ்விடத்தில் நன்கு உறங்கி ஓய்வு எடுத்தான். இரவு மெல்லக் கழிந்தது. விடியும் நேரமும் வந்தது. அந்தத் தீவில் இருந்த கொடிய சர்ப்பங்களைக் (பாம்புகளைக்) கண்டு சில வணிகர்கள் அலறிக் கத்தினர். பயந்து போன வணிகர்கள் விஷயத்தை அறியாமல் ஆங்காங்கே சிதறி ஓடினர். சிந்துபாத்தும் அப்போது கண் விழித்து ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி ஒடத் துவங்கினான். அவ்வாறு ஓடிய சிந்துபாத் இறுதியில் ஒரு கிணற்றின் அருகே வந்து நின்றான். அந்தக் கிணற்றை ஒட்டி ஒரு வாய்க்காலும் காணப்பட்டது. அந்தக் கிணற்றின் கரையில் ஒரு முதியவர் அமர்ந்து இருந்தார். அவர் பனை மட்டை நாரினாலான உடையை உடுத்தி இருந்தார்.
அவரைப் பார்த்ததும் சிந்துபாத் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அந்த முதியவரும் சிந்துபாத்தை பதிலுக்கு வணங்கினார். அந்த முதியவரும் உடைந்த கப்பலில் நம்முடன் வந்த வணிகர்களுள் ஒருவராக இருப்பாரோ என்ற சந்தேகம் சிந்துபாத்திற்கு வந்தது. சிந்துபாத் இவ்வாறு அந்த முதியவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்த முதியவர் சிந்துபாத்திடம் எதையோ கூற எண்ணியவராய்ச் சைகை செய்தார். ஆனால் அவர் வாய் திறந்து எதுவும் பேசவே இல்லை.
அந்த முதியவரை ஒரு துறவி என்று எண்ணிக் கொண்ட சிந்துபாத்," துறவி அவர்களே, எதற்காகத் தாங்கள் இங்கு அமர்ந்து உள்ளீர்கள்?" என்று கேட்கவும். அதற்கு அந்தத் துறவி சிந்துபாத்திடம் மறுமொழியாக," என்னை உனது தோளில் தூக்கிக் கொண்டு வாய்க்காலின் அக்கரைக்குப் போ" என்று அதிகாரக் குரலில் ஆணை பிறப்பித்தார்.
அவரை ஒரு துறவி என்ற விதத்தில் மதித்துப் போற்றிய சிந்துபாத், இவருக்கு எழுந்து நடமாட முடியாத நிலை போலும், ஒருவேளை நாம் இவருக்கு உதவினால் அதனால் நிச்சயமாக இறைவனின் கருணையை பெற முடியும் என்று மனதினில் எண்ணியவராய் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றான். பல தொலைவு நடந்து அந்த முதியவர் சொன்ன இடத்திற்கு அவரை சரியாக அழைத்துச் சென்ற சிந்துபாத்," ஐயா! பெரியவரே இங்கு தானே தாங்கள் இறங்க வேண்டும்" என்று கேட்டான். ஆனால் அதற்கு அந்த முதியவர் எந்த ஒரு பதிலையும் கூறாமல் அமைதியாக சிந்துபாத்தின் முதுகில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தார். சிந்துபாத் இறங்குமாறு கேட்டுக் கொண்டும் அந்த முதியவர் இறங்க மறுத்தார். "இவரிடம் இரக்கம் காட்டி இருக்கவே கூடாது" என்று மனதினில் எண்ணிய சிந்துபாத்திற்கு இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. அந்த வயோதிகன் தன்னுடைய முரட்டுக் கரங்களால் சிந்துபாத்தின் கழுத்தை இருக்க ஆரம்பித்தான் . "இனியும் இந்தக் கிழவனிடம் நாம் இரக்கம் காட்டவே கூடாது" என்று எண்ணிய சிந்துபாத் அந்தக் கிழவனை கீழே தரையில் தள்ளிவிட்டு அவனிடம் இருந்து தான் தப்பிக்க முயற்சி செய்தான். ஆனால், சிந்துபாத் எவ்வளவு முயன்றும் கூட அது அவனால் முடியவில்லை. அத்துடன் அந்தக் கிழவன் தனது குதிகால் கொண்டு சிந்துபாத்தை முரட்டுத் தனமாக தாக்க ஆரம்பித்தான். அந்தத் தாக்குதலில் சிந்துபாத் சற்றே நிலை குலைந்து போனான்.
பிறகு வேறு வழி இன்றி அந்தக் கிழவன் சொல்வதை எல்லாம் கேட்க ஒப்புக் கொண்டான். அந்தக் கிழவன் சிந்துபாத்தை பழங்கள் பழுத்துக் குலுங்கும் மரங்களின் பக்கம் எல்லாம் தூக்கிக் கொண்டு போகச் செய்தான். ஒருவேளை சிந்துபாத் அந்தக் கிழவன் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்தால் குதி கால்களால் மீண்டும், மீண்டும் சிந்துபாத்தை பலமாக உதைக்கத் தொடங்கிவிடுவான். இப்படியே அன்றைய தினம் போய்க் கொண்டு இருந்தது. சிந்துபாத்தின் முதுகை விட்டு அந்தக் கிழட்டுப் பிசாசு இறங்குவதாகத் தெரியவில்லை. பலத்தை விட புத்தியை பிரயோகிக்க சித்தம் கொண்ட சிந்துபாத் அந்தக் காட்டில் ஆங்காங்கே விளைந்து இருந்த போதை மூலிகைகளை அடையாளம் கண்டு அதனை எடுத்து வைத்துக் கொண்டான். அதனைப் பார்த்த கிழவன் அதனை ஏதோ உண்ணும் பொருள் என்று நினைத்து தனக்கும் தருமாறு சிந்துபாத்திடம் கேட்டான். "ஆடு தானாக தலையை வெட்டக் கொடுக்கிறதே" என்று மனதிற்குள் கூறி சந்தோசம் அடைந்த சிந்துபாத் மிகப் பணிவுடன் அந்த போதை மூலிகைகளை அந்தக் கிழட்டுப் பிசாசிடம் கொடுத்தான். அதனை உண்ட அந்தக் கிழவன் அதன் சுவையை விரும்பி மேலும், மேலும் சிந்துபாத்திடம் அதனைக் கேட்டுக் கொண்டே இருக்க, சிந்துபாத்தும் மறுக்காமல் அந்த போதை மூலிகைகளை மேலும், மேலும் கண்டறிந்து பறித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறிய அந்தக் கிழவன் செயலற்று மயங்கி சிந்துபாத்தின் தோளில் சாய்ந்தான். அந்த சமயத்திற்காகத் தான் சிந்துபாத்தும் காத்துக் கொண்டு இருந்தான்.
தனது தோளில் மயங்கிய நிலையில் இருந்த அந்தக் கிழவனை தரையில் இறக்கிய சிந்துபாத். "இவன் போன்ற ஒருத்தனை உயிருடன் விட்டால் தான் பாவம். கொன்றால் அது பாவம் இல்லை" என்ற முடிவுக்கு வந்தவனாய். அருகில் இருந்த ஒரு மிகப் பெரிய பாறையை எடுத்து அந்தக் கிழவனின் தலையில் ஒரே போடாகப் போட்டான். அந்த இடத்திலேயே அந்தக் கிழவன் துடி, துடித்து இறந்தான். பிறகு சிந்துபாத் தனது கால் போன போக்கில் எங்கெங்கோ தன்னுடன் வந்தவர்களை தேடித் சென்றான். ஆனால் யாரையும் காணமால் வருந்தினான்.
இறுதியில் தீவின் மறுபுறத்தை அடைந்த சிந்துபாத் அங்கு ஒரு பிரம்மாண்டமான கப்பல் நிற்பதையும். அதில் இருந்து சிறு, சிறு படகுகளில் சிலர் அந்தத் தீவை நோக்கி வந்து கொண்டு இருப்பதையும் கண்டான். அவ்விடம் நோக்கி விரைந்தான். படகில் வந்தவர்களிடம் தனது இக்கட்டான நிலையை எடுத்துக் கூறி உதவி கேட்டு நின்றான். படகில் வந்த அனைவருமே அந்தத் தீவில் காணப்படும் அறிய வகை வாசனை திரவியங்களையும், எங்கும் காணக் கிடைக்காத மூலிகைகளையும் எடுக்க வந்ததை அறிந்து அவர்களது வேலை முடியும் வரையில் காத்திருந்து பிறகு அவர்களுடனேயே படகில் ஏறி தொலைவில் நின்று இருந்த அந்தப் பிரம்மாண்டக் கப்பலை அடைந்தான். அந்தப் பிரம்மாண்டக் கப்பலில் எறிய மாத்திரத்தில் கப்பல் தலைவன் சிந்துபாத்தை பற்றி விசாரித்த போது, சிந்துபாத் தன்னைப் பற்றியும் அத்துடன் அந்தத் தீவில் நடந்த நிகழ்ச்சிகளையும் இறுதியில் முதியவர் ஒருவரிடம் சிக்கித் தான் பட்ட துன்பத்தையும் எடுத்துக் கூறி வருந்தினான்.
சிந்துபாத் சொன்னதைக் கேட்ட கப்பல் தலைவன் மறுமொழியாக," சிந்துபாத்! நீ வருத்தப் படாதே, உனது தோளில் ஏறிச் சவாரி செய்தவன் மிகவும் கொடியவன். அவனது பெயர் "ஷேக் அலி பஹர்". அவன் மிகவும் பொல்லாதவன்; முதலில் நடக்க முடியாதபடி நடித்து தன்னை தோளில் சுமந்து செல்லுமாறு கூறுவான். நாம் அதற்கு இசைந்து அவனை தூக்கிச் சென்றால், பிறகு இறங்க மறுத்து தனக்கு முதுகில் ஏற இடம் கொடுத்தவனையே அடித்துக் கொன்று விடுவான். நான் கண்டதில் நீ ஒருவன் தான் அவனிடம் இருந்து தப்பித்து வந்து உள்ளாய். சாமர்த்தியசாலி தான் நீ!" என்று பாராட்டினான். பிறகு சிந்துபாத்துக்கு உணவும், உடையும் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்தக் கப்பல் இறுதியில் ஒரு பட்டணத்தை அடைந்தது. அதற்கு மேல் கப்பல் செல்லாது என்று கூறிய கப்பல் தலைவன் சிந்துபாத்தை பத்திரமாக அந்தப் பட்டணத்தில் இறக்கி விட்டான். பிறகு தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் சிந்துபாத்தை அறிமுகம் செய்து வைத்தான். அந்தப் பெரியவருக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் சிந்துபாத்தை தனது மகனாகவே பார்த்தார். அவனிடம் அன்பாகப் பழகினார். அந்தப் பெரியவரின் பெயர் "முகம்மது ர ஃ பி". அவர் மூலமாகத் தான் சிந்துபாத் அந்தப் பட்டணத்தின் வரலாற்றை அறிந்து கொண்டான். அது குரங்குகள் நிறைந்த ஒரு பட்டணம் ஆகும். அடிக்கடி குரங்குகள் நகரத்தின் வீதிகளில் புகுந்து பயங்கரமாக அட்டகாசம் செய்யும். இருந்தாலும் அந்த பட்டணத்தில் உள்ள மக்கள் குரங்குகளை கொல்லாமல் கல் கொண்டு எறிந்தும், தப்பட்டைகளை முழங்கியும், வெடி பொருள்களை வெடிக்கச் செய்தும் விரட்டி அடிப்பார்கள். ஏனெனில் குரங்குகளை கொன்றால் இறந்த பிறகு நரகத்தில் தான் இடம் கிடைக்கும் என்று அப்பட்டணத்து மக்கள் வலுவாக நம்பினர். அந்தப் பட்டணம் பெரும்பாலும் காடுகள் நிறைந்த ஒரு பட்டணம் ஆகும். அந்த ஊர் மக்களுக்கு வாழ்வாதாரமே அந்தக் காடுகள் தான். இப்படியாக அனைத்து விஷயங்களையும் "முகம்மது ர ஃ பி” சிந்துபாத்திடம் கூறி முடித்தார். பிறகு அன்றைய இரவு அந்த நல்ல மனம் கொண்டப் பெரியவரின் இல்லத்திலேயே சிந்துபாத் படுத்து உறங்கினான்.
அடுத்த நாள் காலை விடிந்தது. பட்டணத்தில் இருந்த சிலர் காட்டுக்குள் தங்கள் தொழிலைப் பார்க்கச் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பெரியவர் முகம்மது ர ஃ பி இல்லத்திற்கு வந்து நின்று அவரையும் உடன் அழைத்தனர். ஆனால், முகம்மது ர ஃ பி தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிந்துபாத்தை அன்றைய தினம் வனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார். மேலும் சிந்துபாத்தைப் பற்றி அவர்களிடம் நல்லவிதமாகக் கூறி பத்திரமாக அவனைப் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டினார்.
பிறகு சிந்துபாத் அந்தப் பெரியவரிடம் விடை பெற்று வனத்திற்கு செல்லும் சமயம். அப்பெரியவர் சிந்துபாத்தை சற்றே நிற்கச் சொல்லி ஒரு பை நிறைய கூழாங் கற்களைக் கொடுத்து "இவை உங்களுக்குப் பெரிதும் பயன்படும்; அத்துடன் தக்க சமயத்தில் இவை உங்களுக்கு நல்ல வருமானத்தையும் கொண்டு வந்து தரும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு உங்கள் ஊருக்கு தாங்கள் செல்லலாம்" என்று கூறவும், பதில் ஏதும் பேசாமல் அவைகளை மிகுந்த மரியாதையுடன் பெற்றுக் கொண்டான் சிந்துபாத். பிறகு மீண்டும் அந்தப் பெரியவர் சிந்துபாத்திடம்," உங்களுடன் வருபவர்கள் அனைவரும் என்ன செய்கிறார்களோ அதைப் போலவே நீங்களும் வனத்தில் செய்ய வேண்டும்" என்று கூற அவர் கூறிய அனைத்தையும் சிந்துபாத் பவ்யமாக செவிமடுத்து அதன் படியே நடப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு அந்தப் பட்டணத்து மக்களுடன் வனத்திற்குச் சென்றான்.
சிந்துபாத்துடன் சென்ற பட்டணத்து நண்பர்கள் வனத்தில் இருந்த ஒரு வளமான பகுதியை அடைந்தார்கள். அங்கே பெரிய, பெரிய மரங்கள் காணப்பட்டன. அவற்றின் கிளைகள் மென்மையாகப் படர்ந்து காணப்பட்டது. அப்படிப் பட்ட உயர்ந்த மரத்தை சிந்துபாத் அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தான். அதில் யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் ஏறிவிட முடியாது. அந்த மரத்தின் அடியில் தூங்கிக் கொண்டு இருந்த மனிதக் குரங்குகள் சிந்துபாத்தையும் அவருடைய நண்பர்களையும் கண்டதும் மரக்கிளைகளில் ஏறி, அமர்ந்து கொண்டன. சிந்துபாத்தின் நண்பர்கள் வேண்டும் என்றே அந்தக் குரங்குகள் மீது தங்களிடமுள்ள கற்களை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர். குரங்குகள் அடிபடவும் அந்த மரங்களில் உள்ள பழங்களை பறித்துப் பதிலுக்கு வீசி எறிந்தன. அப்படி வீசப்ப பட்ட பழங்கள் யாவும் கொக்கோ விதைகளை கொண்டு இருந்தது. ஆம்! அவை அனைத்தும் கொக்கோப் பழங்கள் ஆகும். சிந்துபாத்தும் தனது கைகளில் இருந்த கூழாங்கற்களை எடுத்து அந்தக் குரங்குகள் மீது வீசினான். அவன் மீதும் அந்தக் குரங்குகள் கொக்கோ பழங்களை வீசின. தன்னுடன் வந்தவர்களைப் போலவே சிந்துபாத்தும் அந்தப் பழங்களை பொறுக்கிக் கொண்டான். அதன் பின்னர் சிந்துபாத் தனியே சென்று ஒரு பெரிய மரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அந்தக் குறிப்பிட்ட மரத்திலும் கூட நிறைய குரங்குகள் இருந்தன. அந்தக் குரங்குகளை குறிபார்த்த சிந்துபாத் தனது கையில் இருக்கும் கூழாங்கற்களை வீசி எறிந்தார். அதனைக் கண்ட அந்தக் குரங்குகளும் பழக்க தோஷத்தில் மரத்தில் இருந்த கொக்கோ விதைகளை பதிலுக்கு வீசி எறிந்தன; சிந்துபாத் அவைகளை பத்திரமாக சேகரித்துக் கொண்டார்.
பிறகு வீடு திரும்பிய சிந்துபாத் தான் கண்டு எடுத்த அந்த விதைகளை தனக்கு அடைக்கலம் கொடுத்தப் பெரியவர் முகம்மது ர ஃ பி அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தான். ஆனால், பெருந்தன்மையில் சிறந்து விளங்கிய அந்தப் பெரியவர் சிந்துபாத் கொண்டு வந்து கொடுத்த விதைகளில் ஒன்றைக் கூட வாங்க வில்லை. மாறாக அவற்றை சிந்துபாத்திடமே கொடுத்து விட்டார். அத்துடன் புன்னகை தவழ்ந்த முகத்துடன் சிந்துபாத்திடம்,” சிந்துபாத் இவைகள் யாவும் தங்களுடையவை, இவை அனைத்தையும் விற்று தாங்களே பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், இந்த விதைகள் யாவும் அதிக அளவில் விலை போகக் கூடியவை. அதனால் இதைப் போலவே தினமும் தாங்கள் சென்று விதைகளை பொறுக்கிக் கொள்ளுங்கள். அதில் குறிப்பாக முதலில் மோசமானவற்றை தேர்ந்தெடுத்து அதனை விற்க முயலுங்கள். நல்ல விதைகளை சேர்த்து வைத்து நீங்கள் ஊர் போகும் சமயத்தில் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். அவை உங்களுக்கு நல்ல பணத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார். அந்த நல்ல மனம் கொண்டவர் சொன்னது போலவே சிந்துபாத்தும் செயல்பட்டார்.
இவ்விதம் தனக்கு நல்வழி காட்டிய அந்த நல்ல மனம் படைத்தவருக்கு மீண்டும் நன்றி கூறியதோடு, நாள் தோறும் சென்று விதைகளை சேகரித்தார் சிந்துபாத். உயர்தரமான விதைகள் உள்ள மரங்களை சிந்துபாத்திற்கு காட்டும் படியாக ஒருவர் மாறி ஒருவரிடம் அந்த நல்ல மனிதர் ஆணையிட்ட வண்ணம் இருந்தார். இவ்விதம் அந்தப் பெரியவர் கூறவும் நல்ல எண்ணம் கொண்ட மற்றவர்களும் சிந்துபாத்துக்கு உதவி செய்து வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சிந்துபாத்திடம் அதிக அளவில் விதைகள் சேர்ந்து விட்டன. அவை அனைத்துமே தரமானதாகத் தான் இருந்தது. இதனை நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கலாம் என்ற எண்ணம் சிந்துபாத்திடம் வந்தது.
இப்படி இருக்க சிந்துபாத்தின் விதியும் அவனுக்கு உதவ முன்வந்தது. அதன் காரணமாக ஒரு நாள் கப்பல் ஒன்று அந்த ஊர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. அந்தக் கப்பலில் வர்த்தகர்கள் பலர் வந்து இறங்கினார்கள். தாங்கள் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் விற்றார்கள். அத்துடன் சிந்துபாத்திடம் கூட அவன் வைத்திருந்த உயர்தரமான கொக்கோ விதைகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக பண்ட மாற்று மூலம் வேறு சில உயரிய பொருட்களை அவர்கள் கொடுத்தார்கள். அத்துடன் அவர்களுடன் நல்ல முறையில் சிந்துபாத் பழகியதால், சிந்துபாத்தை பாக்தாத் நகரத்தில் கொண்டு சென்று விட அவர்கள் உதவுவதாக வாக்களித்தனர். அதனைக் கேட்ட சிந்துபாத் அகம் மகிழ்ந்தான்.
பிறகு பாக்தாத் நகரம் செல்ல விரும்பிய சிந்துபாத் அது நாள் வரையில் தனக்கு அடைக்கலம் கொடுத்தப் பெரியவரிடம் நன்றி தெரிவித்து செல்ல முடிவு செய்தான். உடனே முகம்மது ர ஃ பி அவர்களை சந்தித்தான். அவரும் சிந்துபாத் கூறியதை கேட்டு சந்தோஷம் அடைந்தார். அத்துடன் நல்வார்த்தை சொல்லி சிந்துபாத்தை அனுப்பி வைத்தார்.
கப்பலில் சிந்துபாத்தின் அனைத்துப் பொருட்களும் ஏற்றப்பட்டன. கப்பலும் புறப்பட்டது. எண்ணற்ற தீவுகளையும், கடல்களையும் கடந்து கப்பல் சென்று கொண்டு இருந்தது. கப்பல் நிறுத்தப்பட்ட ஊர்களில் எல்லாம் கொக்கோ விதைகளை விற்று நல்ல லாபம் பார்த்தான் சிந்துபாத். இன்னும் சொல்லப் போனால் அவன் பொருள்களை இழந்ததற்கு மேலாகவே ஏதோ ஒரு வழியில் இறைவன் வழிகாட்ட கொக்கோ விதைகளின் மூலம் கணிசமான வருமானத்தை பார்த்தான். அத்துடன் சிந்துபாத் இறங்கிய ஒரு தீவில் கிராம்பு, இலவங்கம், மிளகு போன்றவை ஏராளமாக இருந்தன. அவைகள் அனைத்தையும் நல்ல முறையில் கொள்முதல் செய்து விற்றான். அதன் மூலமும் கணிசமான அளவு லாபத்தை அடைந்தான் சிந்துபாத். பிறகு அல்- உசிராத் என்னும் தீவை அடைந்த சிந்துபாத் அங்கு முத்து குளிக்கும் நபர்களிடம் கொக்கோ விதைகளை கொடுத்து தனக்காக நல்ல முத்துக்களை மூழ்கி எடுத்து வருமாறு வேண்ட. அவர்களும் உடனுக்குடன் நல்ல முத்துக்களை மூழ்கி சிந்துபாத்திற்காக கடலில் இருந்து எடுத்து வந்து கொடுத்தனர். அதனை வாங்கிக் கொண்ட சிந்துபாத் தனது பயணத்தை தொடர்ந்தான். அப்பயணம் ஆண்டவன் அருளால் இனிதாக முடிந்தது. பாக்தாத்தை அடைந்த சிந்துபாத் தான் சம்பாத்தித் ஏரளாமான செல்வத்தை எடுத்து வந்து நல்ல முறையில் தான தருமங்கள் செய்தான். அத்துடன் இதற்குக் காரணமான தனது அன்பு நண்பர் அக்கீம் அவர்களையும் அழைத்து அவரையும் நல்ல முறையில் கவனித்து தனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். இப்படியாக சிந்துபாத்தின் ஒவ்வொரு கடல் பயனும் ஒரு வகையில் அவனுக்கு கஷ்டத்தை அளித்தாலும் இறுதியில் அவனுக்கு நல்ல லாபத்தையும், சுகத்தையும் ஈட்டிக் கொடுத்தன. இப்படியாக சிந்துபாத் அந்த ஊரிலேயே வைத்து மிகப் பெரும் புள்ளியாக போற்றப்பட அந்தப் பயண அனுபவங்கள் முழு முதல் காரணமாக இருந்தது.
