சிந்திபாத் வளர்த்த வல்லூறின் கதை

bookmark


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்திபாத் என்ற பேரரசர் இருந்தார். அவர் வேட்டையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். அது போல அவர் குதிரைகளை ஓட்டுவதிலும் வல்லவர். மேலும் அந்த சிந்திபாத் பல பறவைகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு வல்லூறையும் வளர்த்து வந்தார். அந்த வல்லூறை வேட்டைக்குச் செல்லும் சமயத்தில் எப்போதும் உடன் அழைத்துச் செல்வார். மேலும், அந்த வல்லூரின் கழுத்தில் ஒரு தங்கக் கிண்ணத்தையும் கட்டித் தொங்க விட்டு இருப்பார். அதில் அந்த வல்லூறுக்கு தேவையானவற்றை போட்டு வைத்திருப்பார். தேவைப்படும் போது அந்த வல்லூறு அதில் உள்ள தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும், அத்துடன் அதில் ஒரு பக்கத்தில் இருக்கும் நீரைக் கொண்டு தனது தாகத்தையும் தீர்த்துக் கொள்ளும். மேலும், மன்னர் எங்கு சென்றாலும் அவரை அந்த வல்லூறு நிழல் போலத் தொடரும். நன்றியுள்ள அப்பறவை மன்னரையே எப்போதும் சுற்றிச், சுற்றி வரும்.

அப்படி இருக்கும் சமயத்தில் தான் ஒரு நாள் சிந்திபாத் வேட்டை ஆடுவதற்காக தனது பெரும் படைகள் பின் தொடர வனத்திற்குச் சென்றார். ஒரு பெரிய காட்டாற்றின் கரையை அடைந்த மன்னர் அதனை அடுத்து உள்ள ஒரு சமவெளியில் வலையை விரிக்கச் செய்தார். அதன் படியே மன்னரின் காவலர்கள் அவ்விடத்தில் வலையை நன்றாக விரித்துக் கட்டினார்கள். அத்துடன் வன விலங்குகள் எதுவும் அந்தப் பொறியை அறியாதபடி வலையை நன்கு மறைத்தனர். எனினும், அப்பகுதிக்கு வந்த மான் ஒன்று அந்த வலையில் சிக்கிய பிறகும் கூட அதில் மாட்டாமல் சாதுர்யமாக துள்ளிக் குதித்துத் தப்பியது. அதனைக் கண்ட அரசர், தனது சேவகர்கள் சரியாக வலையை விரிக்க வில்லை என்று ஆத்திரம் கொண்டு அவர்களிடம் கத்தினார்.

உடனே சேவகர்கள் பின்னாலேயே துரத்திச் சென்று அந்த மானை பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களுடன் மன்னரும் தனது குதிரையில் அந்த மானை துரத்திக் கொண்டு சென்றார். சேவகர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கூட அந்த மான், அவர்கள் கைகளில் வைத்திருந்த வலையில் அகப்படாமல் போனது. இவ்வளவுக்கும் மன்னரால் கூட அந்த மானை அது அருகில் வந்த சமயத்தில் கூட பிடிக்க முடியாமல் போனது. அப்போது மன்னருடன் சென்று இருந்த அவர் வளர்த்த வல்லூறு, மானை எப்படியாவது மன்னரிடம் பிடித்துத் தர வேண்டும் என்று சித்தம் கொண்டது.

மறுபுறம் அந்த மான் துள்ளிக் குதித்து ஒரு மலை அடிவாரத்தை அடைந்தது. அங்கு நின்று சற்று நேரம் இளைப்பாறியது. மன்னருடன் சென்ற வல்லூறு இது தான் சமயம் என்று பறந்து சென்று மானின் கண்களில் தன்னுடைய கால் நகங்களைச் செலுத்திப் பார்வை இல்லாமல் செய்தது. அதற்குப் பிறகு அந்த மானால் ஓட முடியவில்லை. உடனே மன்னர் அவ்விடத்திற்கு சென்று மிகச் சுலபமாக அந்த மானை வேட்டை ஆடினார்.

அந்த சமயம் உச்சி வேளை நெருங்கிக் கொண்டு இருந்தது. தண்ணீர் தாகத்தால் மன்னர் தவித்துப் போனார். எங்கு தேடியும் தண்ணீரும் கிடைக்க வில்லை. அந்த சமயத்தில் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றார். அந்த மரத்தில் இருந்து பால் போன்ற வெள்ளை திரவம் வெளிப்பட்டுக் கொட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதனைப் பருகி தனது தாகம் தீர்க்க வேண்டும் என்று மன்னர் ஆசை கொண்டார். அதன் படியே தன்னைத் தொடர்ந்து வந்த வல்லூரின் கழுத்தில் இருந்த கிண்ணத்தை எடுத்து மரத்தில் இருந்து வடிந்து கொண்டு இருந்த திரவத்தை அதில் நிரப்பி அதனை ஆசையுடன் பருகச் சென்றார் மன்னர் சிந்திபாத். அப்போது திடீர் என்று அந்த வல்லூறு தனது கால்களால் அந்தக் கிண்ணத்தை தட்டி விட்டது.

அதைக் கண்ட மன்னர், மீண்டும் அந்தக் கிண்ணத்தை மரத்தின் பால் கொண்டு நிரப்பினார். அதனைப் பருகவும் கையில் எடுத்தார். இந்த முறையும் அந்த வல்லூறு பாய்ந்து சென்று அந்தக் கிண்ணத்தை தட்டி விட்டது. இப்படி மூன்று முறை நடந்தது. கோபத்தின் எல்லையைக் கடந்தார் மன்னர்.

ஒரு கட்டத்தில் அதீத ஆத்திரம் கொண்ட அரசர், "என்னைக் குடிக்க விடாமல் இந்த மரத்தின் பாலை இப்படி வீணடித்து விட்டாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கூறிய வண்ணம் அந்த வல்லூரின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினார்.

அப்போது அந்தப் பறவை அந்த நிலையிலும் கூட மன்னரைத் தனது அழகால் தேய்த்த வண்ணம் மரத்தைப் பார்த்தது. இவ்விதம் அந்த வல்லூறு அந்த மரத்தை மீண்டும், மீண்டும் பார்க்கிறதே, எதையோ நமக்கு அது உணர்த்த எண்ணுகிறது போலும் என்று எண்ணியவராய் மரத்தின் மேலே என்ன இருக்கிறது என்று தலையை உயர்த்திப் பார்த்தார் சிந்திபாத். அங்கு ஒரு விரியன் பாம்பு கிளைகளில் இருந்த படி விஷத் துளிகளை அந்த மரத்தின் பாலில் சிந்திக் கொண்டு இருப்பதைக் கண்டார். அப்போது தான் சிந்திபாத்துக்கு எல்லாமே புரிந்தது.

அதாவது அந்த விஷத் துளிகளைத் தான் அருந்தி விடக் கூடாது என்பதை உணர்த்தத் தான் அந்த வல்லூறு அவ்விதம் நடந்து கொண்டது என்பதை அவர் அப்போது தான் உணர்ந்தார். அதனால் கண்கள் கலங்கி நின்றார். ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்னும் பழமொழி தனது விஷயத்தில் நிஜமானதை எண்ணி, எண்ணி வருந்தினார்.

பிறகு தனது குதிரையில் ஏறி வல்லூறுடன் முகாமுக்கு வந்து சேர்ந்த மன்னர் மான் இறைச்சியைச் சமையல் செய்யச் சொல்லிவிட்டு காயமடைந்த வல்லூறைத் தனது கைகளில் வைத்துக் கொண்டு வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தார்.

"வல்லூறு மூன்று முறை உணர்த்தியும் கூட அதனை உணராமல் அதன் இறக்கைகளை வெட்டி விட்டோமே, அவசரப்பட்டு இந்தச் செயலை செய்து இப்போது துன்பத்தையும், பாவத்தையும் ஒரு சேர சேர்த்துக் கொண்டு விட்டோமே" என்றெல்லாம் சிந்திபாத் மன வேதனையை அடைந்து கொண்டு இருந்த சமயம் அந்த வல்லூறு தனது உடலில் இருந்த ரத்தம் எல்லாம் வடிந்து போன நிலையில் அக்கணமே துடி, துடித்து இறந்தது.

"இது தான் மன்னர் சிந்திபாத்தின் கதை" என்று மன்னர் யூனான் மேற்கண்ட கதையை தனது பொறமை கொண்ட அமைச்சனிடம் கூறி முடித்தார்.

பிறகு மீண்டும் அந்த அமைச்சரிடம் அரசர் யூனான், "இதே போலத் தான், தான் வளர்த்த அருமைக் கிளியை முட்டாள் தனமாகத் தானே கொன்ற வியாபாரியின் கதையும் உண்டு. அதையும் கேள். அப்போது தான் நீ இது போன்ற கெட்ட அறிவுரைகளை என்னிடம் கூற மாட்டாய்" என்று கூறியபடி அந்தக் கதையையும் கூறத் தொடங்கினார்.