தான் வளர்த்த கிளியைத் தானே கொன்ற ஒரு வியாபாரியின் முட்டாள் தனம்

bookmark

ஒரு ஊரில் பெரிய வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் பெரும் தன வந்தன். அவனுக்கு ஒரு ஆசை இருந்தது, அது யாதெனில், தனக்கு வரும் மனைவி நல்ல அழகு படைத்தவளாக இருக்க வேண்டும் என்பதே. அத்துடன் தனது இந்த விருப்பத்தை தனது தாயிடம் கூறினான் அவன். ஆனால் அவனது தாயோ, "உன்னை விட அழகான மனைவியை நீ திருமணம் செய்து கொண்டால், இறுதியில் அது உனக்கே ஆபத்தாக முடியும்" என்று எத்தனையோ முறை எடுத்துச் சொன்னார்கள். இருந்தாலும் அந்த வியாபாரி தாயின் வார்த்தையை அலட்சியம் செய்தான். இறுதியில் தான் விரும்பியபடியே ஒரு பேரழகியை அவன் மணந்து கொண்டான். அத்துடன் அந்த அழகிய பெண்ணை அவன் விட்டுப் பிரியாமல் அவளுடனேயே இருந்து வந்தான். அவள் எதைக் கேட்டாலும் அவன் மறுக்காமல் வாங்கிக் கொடுத்தான். இன்னும் சொல்லப் போனால் அவளது பேரழகில் மயங்கிக் கிடந்தான். இதனால் நாளடைவில் செல்வங்கள் கரைந்தன. அதனால் தனது வியாபாரத்தை மேம்படுத்த அவன் வெளிநாடு செல்லத் திட்டம் தீட்டினான். அதன் படியே வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்தது. அவன் வெளிநாட்டுக்கு புறப்படும் முன்னர் ஒரு பேசும் கிளியை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து தனது வேலையாட்களை பார்த்துக் கொள்ளுமாறு பணித்தான். அத்துடன் அவன் வாங்கி வந்த கிளியின் விசேஷ அம்சம் யாதெனில் அந்தக் கிளி சொன்னதை சொல்லும் கிளி அல்ல, தான் பார்த்ததை அப்படியே பார்த்தபடி சொல்லும் இயல்பு கொண்டது. அதனால் தான் அந்த குறிப்பிட்ட கிளியை வியாபாரி தனது வீட்டில் வேவு பார்க்க வாங்கி வந்து வைத்து விட்டுப் போனான். ஆனால், அந்தக் கிளியின் அபூர்வ சக்தியைப் பற்றி அவனது மனைவி அறியவில்லை. உண்மையில், இவ்வளவு அழகு படைத்தவள் இறுதிவரையில் தன்னுடன் இருப்பாளா என்ற சந்தேகத்தால் தான் அந்த வியாபாரி அந்தக் கிளியையே வாங்கி வந்து வீட்டில் வைத்தான். மேலும், அந்தக் கிளியை நம்பித் தான் அவன் வெளியூர் செல்லவே தீர்மானித்து இருந்தான். பிறகு குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்த வியாபாரி தனது வெளிநாட்டு பயணத்துக்கு கிளம்பினான்.

வியாபாரி வெளிநாடு சென்று மூன்று வருடங்கள் வெகுவாக நகர்ந்தது. எத்தனை நாட்கள் தான் அவனது அழகு படைத்த மனைவி காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டு இருப்பாள். வியாபார விஷயமாக வியாபாரி வெளி நாட்டுக்குச் செல்லவும், வியாபாரியின் தாய் இறந்து போனாள். இது அவனது மனைவிக்கு சாதகமாகப் போனது. இனி தன்னைக் கேட்க யாரும் இல்லை என்றே அவள் நினைத்தாள். அதன் படியே ஒரு வாலிபன், அந்த வியாபாரியின் மனைவியின் அழகில் மயங்கிப் போனான். அவளும் அப்படித் தான் அந்த வாலிபனைக் கண்டதும் தனது மனதைப் பறிகொடுத்து அவனை வீட்டுக்கு அழைத்து இன்பத்தை அனுபவித்தாள்.

இப்படி பல நாட்கள் இந்த இருவரும் கள்ளக் காதலிலும், இன்பத்திலும் சந்தோஷமாக ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் அந்த வியாபாரி வெளியூரில் இருந்து வந்தான். 'உன்னை விட அழகான மனைவி அமைந்து விட்டால், அது ஆபத்தைத் தான் தரும்' என்று அவனது தாயார் சொன்னது அந்த வியாபாரியை உறுத்திக் கொண்டே இருந்தது.

வெளியூரில் இருந்து திரும்பிய அந்த வியாபாரி முதல் வேலையாக தான் வளர்த்த அந்தச் செல்லக் கிளியுடன் பேசத் தொடங்கினான். அந்தக் கிளியும் அந்த வியாபாரியைக் கண்ட மாத்திரத்தில் அவனது தோலின் மீது ஏறி விளையாடியது. பிறகு அந்த வியாபாரியிடம், அது உண்மையைக் கூறத் தொடங்கியது. அதன் மூலம் அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் ஒரு வாலிபன் அவனது மனைவியைக் காண அடிக்கடி இரவு வேளையில் தனது வீட்டுக்கு வந்து போவதை அந்த வியாபாரி அறிந்து கொண்டான். விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த வியாபாரி கொதித்துப் போனான். அத்துடன் அவன் தனது மனைவியிடம், இது பற்றிக் கேட்டான். ஆனால், வியாபாரியின் மனைவியோ அவனை சிறிதும் மதிக்காமல் எதிர்த்துப் பேசினாள். அது அவனது ஆத்திரத்தை மேலும் தூண்டி விட்டது. அதனால் தனது மனைவியை அந்த வியாபாரி நைய்யப் புடைத்தான். அத்துடன் கோபத்தில் சற்று நேரம் வீட்டை விட்டும் வெளியேறினான்.

மறுபக்கம், அந்த வியாபாரியின் மனைவியின் மனதினில், 'தனது ரகசியத் தொடர்பு எவ்வாறு தனது கணவனுக்குத் தெரியவந்தது?' என்ற ஒரு கேள்வி எழுந்தது. முதலில் அவளுக்கு கிளியின் மீது சந்தேகம் வரவில்லை. தனது வேலையாட்களில் தான் யாரோ சொல்லி இருக்க வேண்டும் என்று நினைத்து அனைவரையும் அழைத்து மிரட்டினாள். அப்போது தான் தனது ஒரு வேலைக்காரியின் மூலமாக கிளிதான் தன்னைப் பற்றிய உண்மையை கணவனிடம் சொன்னதை அறிந்து கொண்டாள். அத்துடன், அப்போதே அந்தக் கிளியைக் கொல்லத் தீர்மானித்தாள். அதன் படியே அவள் ஒரு அற்புதத் திட்டத்தை வகுத்தாள்.

அன்று இரவு அவள் கணவன் பக்கத்து ஊருக்குப் போய்விட்டான். தன்னுடைய முக்கியமான பணிப் பெண்களில் இருவரை அழைத்து அவர்களில் ஒரு பெண் கிளிக் கூண்டின் அருகே அமர்ந்து இருக்கையில் அரிசியை அரைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றாள். இன்னொருத்தி முகம் பார்க்கும் கண்ணாடியைக் கிளிக் கூண்டின் பக்கத்தில் அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இடை இடையே அவள் கொஞ்சம், கொஞ்சமாகத் தண்ணீரை மேல் இருந்து கீழாக ஊற்றிக் கொண்டே இருக்கவும் வேண்டும்; அதாவது அந்தக் கிளியானது பாக்கும் வண்ணம் தண்ணீர் இடையிடையே ஊற்றப்பட வேண்டும் என்றாள்.

அந்த வேலைக் காரப் பெண்களும் கூடுதல் பணம் தங்களுக்குக் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அவ்வாறே நடந்து கொண்டார்கள்.

பக்கத்து ஊருக்கு சென்று விட்டுத் திரும்பிய கணவன் வழக்கம் போலக் கூண்டில் இருந்து கிளியை எடுத்து அதனிடம் பேச்சுக் கொடுத்தான்.

அப்போது அந்தக் கிளி, "நேற்றைய இரவு இடி இடித்தது; அத்துடன் மின்னல் வேறு மின்னியது; விட்டு விட்டு மழை வேறு பெய்தது" என்று கூறியது. அதனைக் கேட்ட அந்த வியாபாரி ஆத்திரத்தின் உச்சிக்கே போனான்.

"சித்திரை மாதம் நகர் முழுவதும் கடுமையான வெயில் காய்கிறது. இந்த அறிவு கெட்டக் கிளி என்னவென்றால், இடியுடன் மழை பெய்ததாக ஏதேதோ  கூறுகிறதே! இப்படித் தான் இதற்கு முன்னாலும் இந்தக் கிளி சொன்னதை உண்மை என்று எண்ணித் தானே நமது அன்பு மனைவியை அடி, அடி என்று அடித்தோம், அவள் அவ்வளவு அடிபட்டும் கூடத் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினாளே! நாம் அதனை எல்லாம் நம்பாமால் மிகக் கொடுமையாக அவளிடம் நடந்து கொண்டோமே! அனைத்திற்கும் காரணம் இந்த அறிவு கெட்டக் கிளி தான் இதனை நாம் இன்னமும் விட்டு வைத்தால், நமது குடும்ப வாழ்க்கையை ஏதாவது சொல்லி கெடுத்து விடும்" என்று நினைத்தபடியாக அந்தக் கிளியின் கழுத்தை அந்த வியாபாரி திருகிக் கொன்றான். அந்தக் கிளியும் அப்போதே துடி துடித்து இறந்து போனது.

என்ன தான் இருந்தாலும் பாசமாக சில நாட்கள் பழகிய கிளி யாயிற்றே. இந்த நிலையில் தான் கிளியை கொன்ற விஷயத்தை தனது நம்பிக்கைக்கு உரிய பணிப் பெண் ஒருத்தியிடம் வருத்தமாகக் கூறிக் கொண்டு இருந்தான் அந்த வியாபாரி. அப்போது வியாபாரியின் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட அந்தப் பணிப் பெண், மெல்ல அந்த வியாபாரியிடம் விஷயத்தைக் கூறத் தொடங்கினாள்.

அப்போது தான் அந்த வியாபாரிக்கு அனைத்து உண்மைகளும் புரிந்தது. தனது கிளியின் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். அத்தனை தவறுகளுக்கும் காரணம் தனது மனைவியும் அவளது கள்ளக் காதலனும் தான் என்பதை காலம் கடந்து அந்த வியாபாரி உணர்ந்து கொண்டான். அத்துடன் சத்தியத்தைப் பேசிய அந்தக் கிளியைக் கொன்று விட்டோமே என்று அந்த வியாபாரி குற்ற உணர்வில் அதனைப் பற்றி நினைத்து நினைத்து அழுதான்.

எனினும், தனது  மனைவியிடம் இது பற்றி எதையுமே கேட்காமால் அவளைக் கையும், களவுமாக படித்து விட வேண்டும் என்று அந்த வியாபாரி சித்தம் கொண்டான்.

வியாபாரியின் பணிப் பெண் கூறியது போலவே, ஒரு நாள் இரவு அவன் நேரம் கழித்து வரவும் அவனுடைய மனைவியின் அறையில் இருந்து அவள் கள்ளக் காதலன் வெளியே செல்வதைக் கண்ட அந்த வியாபாரி. கோபத்தின் உச்சிக்கே சென்று அவனைக் கொன்றான். அத்துடன் தன்னை இத்தனை நாட்கள் ஏமாற்றிக் கொண்டு இருந்த தனது மனைவியையும் அந்த வியாபாரி அடித்துக் கொன்றான்.

இப்படியாகக் கதையைத் தனது அமைச்சரிடம்  சொல்லி முடித்தார் மன்னர் யூனான். அந்தக் கதையை முழுமையாகக் கேட்ட பொறாமைக்கார அமைச்சர், அரசர் யூனானிடம்," அரசே! நான் ஒன்றும் அந்த ஞானிக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை. நான் எல்லாவற்றையும் தங்களது நலன் கருதியே சொன்னேன். ஒரு வேளை, நான் சொன்னதில் தங்களுக்கு ஏதேனும் தவறு தென்பட்டால், பாரசீக அரசர், அந்நாட்டு இளவரசருக்கு, அந்நாட்டு  அமைச்சர் செய்த துரோகத்தைக் கருதி அவரைக் கொன்றதைப் போல என்னையும் தாங்கள் கொன்று விடுங்கள்" என்று கூறி முடித்தார்.

இப்படியாக ஷாரஜாத் தனது அன்புக் கணவரிடம் அன்றைய இரவும் ஒரு கதையைக் கூறி அதனைப் பாதியில் நிறுத்திக் கொண்டாள். அரசர் ஷாரியார் அந்தக் கதையை மேற்கொண்டு கேட்கத் துடித்தார். அந்த நேரத்தில் ஷாரஜாத்தின் தங்கை உடன் இல்லை என்பது ஷாரஜாத்துக்கு ஒரு வகையில் வசதியாகப் போய் விட்டது. அதனால், ஷாரஜாத் அன்பு மொழி பேசி, அரசரை அணைத்துக் கொண்டு அவருக்கு இன்பத்தைக் கொடுத்தாள். அரசரும் ஆவலுடன் இன்ப விளையாட்டில் மூழ்கினார். இதனால் அன்றைய இரவும் கழிந்தது. அடுத்த நாள் காலையில் அரசர் ஷாரியார், மனைவியிடம் மீதிக் கதையை அன்று இரவு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விட்டு, தனது அரசுக் காரியங்களை கவனிக்க அரசவைக்குச் சென்றார். இப்படியாக அன்றைய பொழுதும் நல்லபடியாக முடிந்தது. இரவு நேரம் தொடங்கியது. ஷாரியார் கதையைக் கேட்க ஆவலுடன் ஷாரஜாத்தைத் தேடி வந்தார். அன்றைய இரவும் அரசரிடம் தான் பாதியில் விட்டக் கீழ்க்கண்ட கதையை கூறத் தொடங்கினாள் ஷாரஜாத்.