சித்திரகூடப் படலம் - 2159
2159.
‘இலவும் இந்திரகோபமும்
புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர்,
அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம்,
கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம்
கமழ்வன - பாராய்!
இலவும் - முருக்க மலரும்; இந்திரகோபமும் - இந்திர கோபப்
பூச்சியும்; புரை இதழ் - ஒத்திருக்கின்ற (செந்நிறமான) உதட்டை உடைய;
இனியோய்! -இனியவளே!; அலவும் நுண் துளி அருவி நீர் - அலை
வீசி வருகின்ற நுண்ணிய துளி சிதறும்அருவியின் நீரானது; அரம்பையர்
ஆட - வானுலக மகளிர் ஆடுகின்ற காரணத்தால்; கலவை, சாந்து, செங்
குங்குமம், கற்பகம், கொடுத்த பலவும் - வாசனைப் பொருள்கள்,
சந்தனம், சிவந்த குங்குமம், இன்னும் கற்பகமரம் கொடுத்த மணப்பொருள்கள்
பலவும்; தோய்தலின் - (அருவிநீரில்) தோயப் பெறுதலால்; பரிமளம்
கமழ்வன - நறுமணம்வீசப்பெறுகின்றன; பாராய் -.
அருவிநீர் தன் தன்மை இழந்து அரம்பையர் ஆடிய காரணத்தால்
அவருடம்பில் பூசியிருந்த மணப்பொருள்கள் தம்மிடத்தே கலக்கப்பெற
அதனால் பரிமளம் வீசுகிறது என்பதனால் தேவருலகத்தைத்தொடும் மலை
உச்சி அருவிகளின் சிறப்பு உரைத்தவாறாம். இந்திர கோபம் - செந்நிறமுள்ள
ஒரு வகைப் பூச்சி, மழைக்காலத்து வரும் - ‘செம்மூதாய்’ எனவும் பெயர்
கூறுவர். 25
