சித்திரகூடப் படலம் - 2160
2160.
‘செம் பொனால் செய்து, குலிகம் இட்டு
எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி
வன முலைக் கொடியே!
அம் பொன் மால் வரை, அலர் கதிர்
உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது
ஒப்பது - பாராய்!
செம்பொனால் செய்து - சிவந்த பொன்னால் செய்து; குலிகம்
இட்டு எழுதிய -சாதிலிங்கக் குழம்பினால் தொய்யிலாகப் படம் வரைந்து
எழுதிய; செப்பு - சிமிழை; ஓர்கொம்பு தாங்கியது - ஒரு கொம்பு
தாங்குகின்றது; எனப் பொலி - என்றுசொல்லுமாறுவிளங்குகின்ற;
வனமுலைக் கொடியே - அழகிய முலைகளை உடையகொடி
போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற சூரியன்; அம்
பொன்மால்வரை உச்சி சென்று அணுக - அழகிய பொன் மயமான
பெரிய மலையின் உச்சியில் சென்றுசேர; பைம்பொன் மாமுடி
மிலைச்சியது ஒப்பது - அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரியமகுடம்
சூட்டியது போல் உள்ளதனை; பாராய் -.
சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது
மலைக்குப் பொன் மகுடம்சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின்
மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அதுதொய்யில் எழுதிய
முலைக்கு ஒப்பாயிற்று. வனம் - அழகு. 26
