சித்திரகூடப் படலம் - 2152
2152.
‘வரி கொள் ஒண் சிலை வயவர்தம்
கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட, நிமிர்
பசும் புகைப் படலம்,
அரிய வேதியர், ஆகுதிப்
புகையொடும் அளவி,
கரிய மால் வரைக் கொழுந்து எனப்
படர்வன - காணாய்!
வரிகொள் ஒண்சிலை வயவர் - கட்டமைந்த ஒள்ளிய வில்லை
உடைய வீரர்கள்; தம் கணிச்சியின் மறித்த - தம்முடைய கோடாலிப்
படையால் வெட்டி வீழ்த்திய; பரியகால் அகில் கூட - பருத்த கரிய
நிறமுள்ள அகில் கட்டையைச் சுடுதலால்; நிமிர் பசும்புகைப்படலம் -
மேல் செல்லுகின்ற அடர்ந்த புகைத் தொகுதி; அரிய வேதியர் ஆகுதிப்
புகையொடும் அளவி - சொல்லுதற்கரிய புகழ் படைத்த அந்தணர்களது
ஓம குண்டத்திலிருந்து எழுகின்ற புகையோடும் கலந்து; கரிய மால்வரைக்
கொழுந்து எனப் படர்வன - கரியநிறமுள்ள பெரிய மலைச்சிகரங்களைப்
போல வானத்தில் படர்ந்து செல்லுகின்றவற்றை; காணாய் -.
வேடுவர் அகில் சுட்ட புகைம், வேதியர் வேள்விப் புகையும், ஒன்று
கலந்து மலைச்சிகரம் போல் உள்ளது என்பதால் மறமும் அறமும் கலந்து
விளங்குவதைக்குறிப்பிட்டார். 18
