சித்திரகூடப் படலம் - 2153
2153.
‘நானம், நாள்மலர், நறை, அகில்,
நாவி, தேன், நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது
இறும் இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன
எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி
இமைப்பன - காணாய்!
நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை
வார் குழல்சுமை பொறாது - புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள்,
அகிற்புகை, கத்தூரி, தேன்இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட
கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்; இறும் இடைத்தோகாய் -
ஓடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான
வழியில்; மின் மலர்ந்து என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி;
புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்ாறுகளில்; கதிர்
மணி இமைப்பன- ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை;
காணாய் -.
நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு-
தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம். 19
