சித்திரகூடப் படலம் - 2151
2151.
‘வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை,
இளந் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின்,
இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து
எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என
வீழ்வன - காணாய்.!
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை, இளம் தளிர்க்
கொழுந்தே! - வில்லாகியபுருவத்தைக் கொண்ட ஒளிபடைத்த
நெற்றியையும், விளங்கிய அணிகலன்களையும் உடைய, இளையதளிரின்
கொழுந்து போன்றவளே!; எல் கொள் மால் வரை உம்பரின் -
சூரியனைக்கொண்ட பெரிய மலையின் உச்சியில்; இரும் புனம் காக்கும்-
பெரிய தினைப்புனத்தைக் காக்கின்ற; கொல்கொள் வேல் கணார் -
கொலைத்தெரிழில் கொண்ட வேல்போன்ற கண்களை உடையவர்களாய
குறமகளிர்; குரீஇ இனத்து எறி - (தினையைக் கவரவருகின்ற) குருவிக்
கூட்டத்தின்மேல் வீசி எறிகின்ற; குருவிந்தக் கற்கள் -(செந்நிறம் உடைய)
குருவிந்த மணிக் கற்கள்; வானிடை - ஆகாயத்தில்; மீன் என -
நட்சத்திரம் போல; வீழ்வன - விழுவனவற்றை; காணாய் -.
குருவிந்தம் - ஒருவகை மாணிக்கக் கல்; செந்நிறம் உடையது.
“பதுமமும் நீலமும் விந்தமும்படிதமும்” என்ற சிலப்பதிகார (மதுரைக்.
ஊர்காண். 186 -7.) அடிகளுக்கு, ‘விந்தம் -குருவிந்தம்’ இரத்தவிந்து
என்பதும் அது;...... ‘திலகமுலோத்திரம் செம்பருத்திப்பூக்களின்மலர் குன்றி
முயலுதிரமமே, சிந்துரம் குக்கில் கண் என எட்டும், எண்ணிய குருவிந்தம்
கண்ணியநிறமே’ என்ற அடியார்க்கு நல்லார் உரையானும் உணரலாம். 17
