கோலங் காண் படலம் - 1230

bookmark

சீதையின் எழிலை யாவரும் காணுதல்

யாவரும் சீதையின் அழகில் ஈடுபடல்
 
1230.    

சமைத்தவரை இன்மை மறை
   தானும் எனலாம். அச்
சுமைத் திரள். முலைத் தெரிவை
   தூய் வடிவு கண்டார்.
அமைத் திரள் கொள் தோளியரும்.
   ஆடவரும் எல்லாம்
இமைத்திலர். உயிர்த்திலர்கள்.
   சித்திரம் எனத் தாம்.
 
சமைத்தவரை இன்மை  மறைதானும்  எனலாம்  -  இயற்றியவர்
இன்னார்  என்று  சொல்ல  இயலாமையால்.  வேதத்தின்  வடிவம்தான்.
இவள் என்று சொல்லத்தக்க;  அச்சுமைத்திரள்.  முலைத்  தெரிவை
தூய்வடிவு      கண்டார்   -    கனந்திரண்ட   தனங்களையுடைய
அப்பிராட்டியினுடைய  தூய  திருமேனியைக்  கண்டு;   அமைத்திரள்
தோளியரும் ஆடவரும் எல்லாம் - (இள) மூங்கில் போன்று திரண்ட
தோள்களையுடைய   பெண்டிரும்.  ஆண்களும்  ஆகிய  அனைவரும்;
சித்திரம் எனத் தாம் இமைத்திலர்;  உயிர்த்திலர்கள்  -  (மிகுந்த
வியப்பால் திகைப்புற்று) ஓவியப்  படிவங்களை  போன்று  இமைக்கவும்
இல்லை; மூச்சு விடவும் இல்லை.  

தண்டார்  -   முற்றெச்சம்.  வேதம்   இறைவனால்    வெளியிடப்
பட்டதன்றி.   ஒருவராலும்.    உண்டாக்கப்பட்டதில்லை.    அதுபோல.
பிராட்டியும் சனகரால் எடுத்து  வளர்க்கப்பட்டவளே  அல்லாமல் பெற்று
வளர்க்கப்பட்டவள்  அல்லள்  (அயோ நிஜ)  என்று உவமை  கொண்டு
விளக்கியவாறு.   ஒரு    புருடரால்   செய்யப்படாமை  பற்றி.  வேதம்
“அபௌருஷேயம்”     எனப்படும்.    பிராட்டியின்     தூய   வடிவு
அனைவரையும்  பெருவியப்பில்   ஆழ்த்தி.   ஆடாமல்   அசையாமல்
உயிர்க்கவும்  செய்யாமல் ஓவியம் ஆகிற்று என்பதாம். “ ஓவியம்  ஒப்ப
உயிர்ப்பு  அடங்கி  ஓயும்”   (கம்ப.  1508)  என்பார்  மேலும்.   பால்
வேறுபாடின்றி.   எல்லோரையும்   செயல்  இழக்கச்செய்யும் தெய்விகப்
பேரழகு பிராட்டியினுடையது என உணர்த்தியவாறு.               29