கோலங் காண் படலம் - 1231
சீதையைக் கண்ட இராமனது மகிழ்ச்சி
1231.
அன்னவளை. ‘அல்லள்’ என.
‘ஆம்’ என. அயிர்ப்பான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்
கண்ட கடல் வண்ணன்.
உன் உயிர் நிலைப்பது ஒர்
அருத்தியொடு உழைத்து. ஆண்டு.
இன் அமிழ்து எழ. களி கொள்
இந்திரனை ஒத்தான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்கண்ட கடல் வண்ணன் - அமிழ்த
மயமானதொரு கன்னிகை போன்ற சீதையைக் கண் எதிரிலே கண்ட
கடல் போன்ற நிறத்தனான இராமபிரான்; அன்னவளை அல்லள் என
ஆம் என அயிர்ப்பான் - அந்தச் சனக மன்னன் திருமகளை. (தான்
கன்னிமாடத்தருகே கண்ட) அம்மங்கை யல்லளோ என்றும்.
அம்மங்கையே ஆவாளோ என்றும். உண்டான ஐயமுடையவனாய்
(இருந்த ஐயம் நீங்கி. அவளே இவள் என்று அறிந்த மகிழ்ச்சியினால்);
உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து -
மதித்தற்குரிய உயிர். (என்றும்) உடலில் நிலைத்திருக்கவேண்டிய
விருப்பத்தினால் மிகப்பாடுபட்டு. (அதன் பயனாய்); ஆண்டு
இன்னமிழ்து எழக் களி கொள் இந்திரனை ஒத்தான் -
அக்கடலிடத்தே இனிய அமிழ்தம் எழுவதைக்கண்டு களிகூர்ந்த
தேவேந்திரனைப் போன்றவன் ஆனான்.
இராமனை “அல்லன் கொல். ஆம்கொல்” என்று சீதை ஐயுற்றுத்
தவித்தது கோலங்காண்படலத்தில் (கம்ப. 1122) கூறப்பட்டது.
கன்னிமாடத்துக் கண்டவளே இவள் என இராமன் இங்கு ஐயந்
தீர்ந்தான்;கன்னிமாடத்தருகில் கண்டவனே இவன் எனச் சீதை
“எய்யவில் வளைத்தும்” (கம்ப. 1151) எனும் பாடலில்
ஐயந்தீர்வாள். கடலிற் பிறந்த அமிழ்தத்தை மீண்டும் ஒருமுறை
அக்கடல் கண்ணுற்றது என்பார். “கன்னி அமிழ்தத்தை. எதிர்
கண்ட கடல் வண்ணன்” என்றார். கடலில் எழுந்த அமிழ்தம்” என்றார்.
பிராட்டிக்கு அமிழ்தம். பாற்கடலில் தோன்றியதாலும். அனைவராலும்
விரும்பப் படுதலாலும். இன்பம் விளைத்ததாலும். மரணத்தைத்
தவிர்ப்பதாலும் உவமை என்க. 30
