கோலங் காண் படலம் - 1226
1226.
தொழும் தகைய மென் நடை
தொலைந்து. களி அன்னம்.
எழுந்து. இடைவிழுந்து. அயர்வது
என்ன. அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை
குலாவ. ஒர் காலபம்
வழங்கு நிழல் மின்ன வரும்
மஞ்ஞை என. வந்தாள்.
களி அன்னம் - (தனக்குச் சமமாக நடக்க எண்ணி உடன்வந்த
களிப்புடைய அன்னங்கள்); தொழும் தகைய மென்நடை தொலைந்து
இடை விழுந்து அயர்வது என்ன - யாவராலும் தொழத்தக்க
மென்மையான (தனது) நடைக்குத் தோற்றுப்போய்; இடையிடையே
கீழே வீழ்ந்தும். (முயன்று மீண்டும்) எழுந்தும் வருந்துவதுபோல;
கொழுந்துடைய சாமரை அயல் எங்கும் குலாவ ஒர்கலாபம் நிழல்
வழங்க மின்னவரும் மஞ்ஞை என வந்தாள் - தன் இருமருங்கும்.
நுனிசீர்த்த சாமரைகள் சுழல. ஒப்பற்ற (காலபம்) ஒளி வீச மின்னிக்
கொண்டுவரும் ஒரு மயில்போலப் (பிராட்டி) (மண்டபம் நோக்கி)
வந்தாள்.
வெள்ளை நிறச் சாமரங்கள். கீழும் மேலுமாக வீசப்படல். அன்னம்
சீதையின் அழகுநடைக்குத் தோற்று விழுவதும் எழுவதும் போல
இருப்பதாகக் கற்பித்தவாறு. தற்குறிப்பேற்ற அணி இரட்டுற மொழிலாக
மயிலுக்குக் கலாபம் தோகையினையும். சீதைக்குக் கலாபம்.
இடையணியினையும் குறித்துத் தோகை ஒளிர மயில் ஒன்று வருவது
போன்று வந்தாள். பிராட்டி என்க; அவள் நடைக்கும் விழுந்தும்
எழுந்தும் அடித்துக் கொண்டோடும் அன்னங்கள் போல்
வெண்சாமரம் இரட்டப் பிராட்டி வந்தாள் என்க. 25
