கோலங் காண் படலம் - 1227

bookmark

1227.

மன் முதல் அனைத்து உலகின்
   மங்கையருள் எல்லாம்.
கண் மணி எனத் தகைய.
   கன்னி எழில் காண.
அண்ணல் மரவின் சுடர்.
   அருத்தியொடு தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஓர்
   விதான நிழல் வந்தாள்.
 
மண்முதல்  அனைத்து  உலகின்  மங்கையருள்   எல்லாம்  -
பூவுலகம்  முதலான  எல்லாவுலகிலும் உள்ள பெண்டிர் அனைவர்க்கும்;
கண்மணி எனத் தகைய கன்னி எழில் காண -  கண்ணின்  உள்ளே
உள்ள கருமணி போன்ற அருமையுடைய   கன்னியாகிய  பிராட்டியினது
அழகைக்   காண்பதற்காக;  அண்ணல்   மரபின்  சுடர்  -  (இவள்
கொழுநனாகவுள்ள)     இராமபிரானது   குலத்துக்கு   ஆதிபுருடனான
சூரியன்;  அருத்தியொடு  தான்  அவ்  விண் இழிவது ஒப்பது ஒர
விதான  நிழல்  வந்தாள் -  மிக்க    விருப்பத்தோடு.  தான்  அந்த
விண்ணிலிருந்து   இறங்கி   வந்திருப்பதைப்   போன்ற  தன்மையதான
பேரொளியுடைய ஒரு மேற்கட்டியின் நிழலில் சீதை வந்தடைந்தாள்.   

சூரியன்   தன்   குலக்    கொழுந்தாவான்    வாழ்க்கை   சிறக்க
வந்தடைகிற  கன்னி  ஆகிய  மணப்  பெண்ணை.   மூத்தான்   காண
விரும்புவது  இயல்பாதல்  பற்றிக்  கதிரவன்   மேலும்   அவ்விருப்பை
ஏற்றிக் கூறினார். தற்குறிப்பேற்ற அணி.                         26