கோலங் காண் படலம் - 1217
திலகம் தீட்டுதல்
1217.
மொய் வளர் குவளை பூத்த
முளரியின் முளைத்த. முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண்
மீன் உண்டேல். அனையது ஏய்ப்ப.
வையக மடந்தைமார்க்கும்.
நாகர் கோதையர்க்கும். வானத்
தெய்வ மங்கையர்க்கும். எல்லாம்.
திலகத்தைத் திலகம் செய்தார்.
மொய்வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த - (இதழ்கள்
மொய்த்துள்ள குவளை மலர்கள் இரண்டு பூத்துள்ள ஒரு தாமரைப்
பூவினிடத்தே முளைத்துள்ள; முந்நாள் மெய்வளர்மதியின் நாப்பண்
மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப - நாள்தோறும் வளர்கின்ற
இயல்புடைய சந்திரனின் மூன்றாம் நாட் பிறையின் நடுவே ஒரு
விண்மீன் ஒளிர்வது உண்டாயின் அதனை ஒக்கும்படி; வையக
மடந்தை மார்க்கும் நாகர் கோதையர்க்கும் வானத் தெய்வ
மங்கையர்க்கும் எல்லாம் - (இடையுலகாகிய) மண்ணக மங்கைமாரும்.
(கீழ் உலகாகிய) நாக உலக மங்கையரும் (மேல்உலகாகிய) வான் உலக
மங்கையரும் ஆகிய மூவுலக மங்கையர் எல்லோர்க்கும்; திலகத்தைத்
திலகம் செய்தார் - திலம் போலச் சிறந்து விளங்கும் பிராட்டியின்
(நெற்றியில் தோழிமார்) திலகமிட்டு அழகு செய்தனர்.
தாமரையில் குவளை பூத்தது போன்றன. பிராட்டியின் முகத்தே
விளங்கும் கண்கள்; தாமரையின் உதித்த மூன்றாம் பிறை போன்றது
அவள் முகத்தே தோன்றும் நெற்றி. மூன்றாம் நாள் திங்களிடையே
உதித்த விண்மீன் ஒன்று போன்றது அவள் நெற்றியில் இட்ட திலகம்.
மூவுலக மங்கையர் திலகத்துக்கு ஒரு திலகம் இட்டனர் என்க. “
திலகத்தைத் திலகம் செய்தார்” - என்பது நினைக்க இனிக்கும்
தொடர். மாகவிகட்கே வாய்ப்பது. “மடந்தை மார்களில் திலகமே!”
(கம்ப. 2072) “வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?”
(கம்ப. 5137) என மேலும் பிராட்டியை ஏத்துவார். குவளை பூத்த
முளரி. மதியின் நாப்பண் மீன் - இல் பொருள் உவமைகள்.
நாப்பண்-நடு 16
