கோலங் காண் படலம் - 1218

bookmark

பல மலர்களைச் சூட்டுதல்

1218.    

சின்னப் பூ. செருகும் மென் பூ.
   சேகரப் போது. கோது இல்
கன்னப் பூ. கஞல. மீது.
   கற்பகக் கொழுந்து மான
மின்ன. பூஞ் சுரும்பும் வண்டும்
   மிஞிறும் தும்பிகளும் பம்ப.
புன்னைப் பூந் தாது மானும்
   பொற் பொடி அப்பிவிட்டார்.*
 
பூஞ்சுரும்பும்  வண்டும் மிஞிறும்  தும்பிகளும் பம்ப - அழகிய
சுரும்புகளும். வண்டுகளும்.  மிஞிறுகளும்.  தும்பிகளும்  மொய்க்குமாறு;
சின்னப்பூ. செருகும் மென்பூ. சேகரப்போது. கோதுஇல் கன்னப் பூ
கஞல  -  விடுபூவும். பின்னலில் செருகும் பூவும். தலைமுடி உச்சியிலே
சூடற்குரிய   பூவும்.    குற்றமற்ற  காதுகளிலே   வைக்கத்தக்க  பூவும்
(என்னும்  இவற்றை)  அங்கங்கே விளங்குமாறு வைத்து;  மீது கற்பகக்
கொழுந்து  மான  மின்ன  -  அவற்றின் மேலே. கற்பகவிருட்சத்தின்
தளிர்கள்  மின்னுவது  போல மின்னுமாறு; புன்னைப் பூந்தாது மானும்
பொற்  பொடி   அப்பிவிட்டார்  -  புன்னைமலர்களின்   மகரந்தப்
பொடிகளை   ஒக்கின்ற   பொற்   பொடிகளை  எடுத்துத்  (தோழியர்)
அப்பிவிட்டனர்.  

சுரும்பு.     வண்டு. மிஞிறு. தும்பி என்பவை  வண்டின்  இனங்கள்.
“காவில்   வாழ்பவர்   நால்வருளர்”   (சீவக.  891)  என்று  தேவரும்
கூறுவார். மான-ஒப்ப உவம உருபு. கஞலல்- ஒளிர்தல்.            17