கோலங் காண் படலம் - 1211
தோளணி அணிதல்
1211.
கொமை உற வீங்குகின்ற
குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற
நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு.
இமை உற இமைக்கும் செங் கேழ்
இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம்
ஆகின். ஒப்பு ஆகும் அன்றே.
கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கை -
திரட்சியமையப் பூரித்திருக்கிற இங்குலிகச் செப்புகளைப் போன்றுள்ள
மார்பகங்களின்; சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் - கனம்
மிகுதலால். துவண்டு வருந்தும் இடையினையுடைய சீதையினது;
பூண்செய் தோளுக்கு இமையுற இமைக்கும் செங்கேழ் இன மணி
முத்தினோடும் - தக்க அணிகளை யணிந்த தோள்களுக்கு (காண்பார்
கண்களைத் தம் ஒளியால் கூசச் செய்து) (அவர்கள்) இமைகளை
மூடச் செய்ய வல்ல ஒளியுமிழும் சிவந்த நிறத்தோடு கூடிய
கூட்டமான பதுமராகக் கற்களோடும் முத்துக்களோடும்; உற அமைவது
அமை உண்டு ஆம் ஆகின். ஒப்பு ஆகும் - பொருந்தி
அமைகின்ற மூங்கில்கள் உண்டாம் என்றால் அத்தகைய
மூங்கில்களே சமமாக வல்லவையாம்.
அமை - மூங்கில். பிறபெண்டிரின் தோளுக்கு உவமையாகும்
மூங்கில். செம்பதுமராகக் கற்களும் முத்து மாலைகளும் அணிந்து
வந்தால்தான் சீதையின் தோளுக்கு உவமையாம் என்பதாம். இல்
பொருள் உவமையணி. சீதையின் தோள்கட்குப் பதுமராகக் கற்கள்
பதித்த அணிகளையும். முத்து மாலைகளையும். அணிந்தனர் என்பது
கருத்து. மகளிர் தோள்களுக்குக் கணுக்கள் அற்ற மூங்கிலை உவமை
கூறல் கவிமரபு. “வேயடித் திரண்ட மென்றோள்” (சீவ. 2923)
“ஆடமைத் தோள் நல்லார்”. (நன்னூல் பொதுப்பா.) என வருதல்
காண்க. 10
