கோலங் காண் படலம் - 1212
கையில் கடகமணிதல்
1212.
“தளை அவிழ் கோதை ஓதிச்
சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள். இராமன் செங் கை
முறைமையின தீண்ட நோற்ற;
அளியன; கங்குல் போதும்
குவியல ஆகும்’ என்று. ஆங்கு.
இள வெயில் சுற்றியன்ன
எரி மணிக் கடகம் இட்டார்.
தளை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள் - இதழ்களின் கட்டவிழ்ந்த மலர்மாலைகளை யணியும்
கூந்தலையுடைய சீதையின் தளிர் போன்ற மென்மையுடைய கைகள்
ஆகிய செந்தாமரை மலர்கள்; இராமன் செங்கை முறைமையின்
தீண்ட நோற்ற அளியன - இராம பிரானுடைய சிவந்த கைகளால்
சாத்திர முறையின்படி தீண்டப்படுவதற்கு. தவம் (மிகச்) செய்துள்ளன.
(இராமபிரானது) அன்புக் குரியன; கங்குல் போதும் குவியல ஆகும்
என்று ஆங்கு - (அத்தாமரைகள்) இரவுப் பொழுதில் குவிந்தால்
இராமபிரானது அன்பினையிழக்க நேருமோ என்று இரவுப்
பொழுதிலும் அவை குவியாதிருக்க வேண்டும் என்று அக்கைகளிலே;
இளவெயில் சுற்றியன்ன எரிமணிக் கடகம் இட்டார் - (சூரிய
ஒளியிருப்பின் தாமரைகள் குவியா ஆதலால்) (கதிரவன்)
இளவெயிலைச் சுற்றிக் கட்டினாற்போன்று ஒளிவிடும் பதுமராக
மணிக்கற்கள் பதித்த கடகம் என்னும் அணியினைத் (தோழியர்)
இட்டனர்.
இரவும் பகலும் வியாத் தாமரைக் கைகளாகச் சீதை கரங்களை
ஆக்கினர் என்க. இராமனைச் சூரியன் ஆகவும் சீதை கைகளைத்
தாமரைகளாகவும் உருவகித்தார். கங்குற்போதும் குவியாத தாமரை -
இல்பொருள் உவமை. கடகம் இருபாலர்க்கும் உரிய கையணி எனத்
தெரிகிறது. “கங்கைக்கு இறைவன் கடகக்கை புடைத்து நக்கான்” (கம்ப.
1718) என இலக்குவனுக்கும் “கடகக்கை” கூறப்பெற்றித்தல் காண்க. 11
