கையடைப் படலம் - 339
மூவரும் ஒருசோலையை அடைதல்
339.
கரும்பு கால் பொரக் கமுகு வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்.
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார்.
கரும்பு கால்பொர- கரும்புச் சோலையிலே காற்று வீசுவதால்;
கமுகு வார்ந்த தேன் - கமுகு மரங்களிலே பெருகிவரும் தேன்;
வரம்புமீறிடும் - வரப்பை மீறிச் செல்லும்படியான; மருதவேலிவாய்-
மருத நிலங்களிலே; அரும்பு கொங்கையார் - தோன்றிவரும்
தனங்களையுடைய இளமாதரது; அம்மென் ஒதிபோல் - அழகிய.
மென்மையான கூந்தலைப் போலக் கறுத்த; சுரும்பு வாழ்வது ஓர்
சோலை நண்ணினார் - வண்டுகள் வாழ்கின்ற ஒரு சோலையை
அம்மூவரும் அடைந்தனர்.
கால்: காற்று. பொருதல்: வீசுதல். வார்ந்த: பெருகிய. வரம்பு: வரப்பு.
மருதவேலி: மருதநிலம். அரும்புதல்: தோன்றுதல். அரும்பு கொங்கை’
வினைத்தொகையாம். ஓதி: கூந்தல். வண்டின் கரு நிறத்துக்கு
உவமையாகக் கூறப்பட்டது. 23
