கையடைப் படலம் - 340

bookmark

சூரியாத்தமன காலத்தில் மூவரும் சரயுவைக் கடத்தல்

340.

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டும் உச்சி. பச்சை மா
ஏழும் ஏற. போய் ஆறும் ஏறினார்.
 
தாழும் மா  மழை  - படிந்திருக்கின்ற பெரு மேகங்களை; தழுவும்
நெற்றியால் - தழுவியிருக்கும் தாழ்வரைகளால்; சூழி யானை போல் -
முகபடாம்  அணிந்துள்ள யானையைப் போல; தோன்றும் மால்வரை -
காணப்படும்  பெரிய  மலையினது; பாழிமா முகட்டு உச்சி - பெருமை
பொருந்திய   உயர்ந்த   சிகரத்தின்   உச்சியில்;   பச்சைமா  ஏழும்
ஏற   -  சூரியனது  தேரில்பூட்டப்பட்ட  பச்சைநிறக் குதிரைகள் ஏழும்
ஏறும்படியான  உச்சிக்  காலத்தில்;  ஆறும்  ஏறினார் - அந்தச் சரயு
நதியைக் கடந்து சென்றனர்.

இதில்     முதல் இரண்டடி உவமையணியாகும். ‘யானை  மலைக்கு
உவமையாகும்.  நெற்றி: தாழ்வரை (உச்சியுமாம்) தாழ்வரையில்   மேகம்
படிந்திருப்பதால்.  கருநிறைமுடைய  அம்மலை.  முகபடாம்   அணிந்த
யானையைப்  போலத் தோன்றுகிறது என்பது கருத்து. பாழி:  பெருமை.
சூழி:   முகபடாம்  (நெற்றிப்பட்டம்).  முகடு:  சிகரம்.  மால்:   பெரிய.
பச்சைமா:  பச்சைக்  குதிரைகள். ‘ஏழும்’ ஏற: ஆறும் ?ஏறினார்.  ஏழு.
ஆறு என்று எண்ணுப்பெயர்கள் தோன்றப் பாடிய நயம்  கருதத்தக்கது.
ஆக.  நண்பகல்  போதில் மூவரும் சரயு நதியைக்  கடந்து  சென்றனர்
என்பது கருத்து.                                           24