கையடைப் படலம் - 337

bookmark

இராமன் இலக்குமணனுடன் முனிவன்பின் செல்லுதல்

337.    

அன்ன தம்பியும் தானும். ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக்கொண்டாலென.
சொன்ன மா தவன் - தொடர்ந்து. சாயைபோல்.
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்.
 
அன்ன  தம்பியும் தானும் - அவ்வாறே வில்தாங்கிய தம்பியாகிய
இலக்குவனும் இராமபிரானும்; ஐயனாம்  மன்னன் இன் உயிர் வழிக்
கொண்டால்  என  -  தமது  தந்தையாகிய  தசரத மன்னனது இனிய
உயிரே   தொடர்ந்து   செல்லுதல்   போலவும்; சாயை   போல்  -
அம்முனிவனது   நிழல்  போன்றும்; சொன்ன மாதவன்  தொடர்ந்து
- மேலே சொன்ன விசுவாமித்திர முனிவனைத் தொடர்ந்து; பொன்னின்
மாநகர்  -  அழகிய அந்த அயோத்தி நகரத்தின்; புரிசை நீங்கினான்
- மதிற்புறத்தைக் கடந்து சென்றான்.

இராமனை மன்னன் தனது உயிரெனக் கருதி இருந்தமையால் இங்கு
‘மன்னன்  இன்னுயிர்  வழிக்  கொண்டாலென’ என்றார்.  இங்கு உயிர்
ஆன்மாவைக் குறித்து நின்றது. முனிவனைத் தொடர்தற்கு  ‘உயிர்வழிக்
கொள்ளலும்’.  அவன்  பின் செல்லுதற்கு. ‘’சாயை’’யும்  உவமைகளாம்
‘சொன்ன’  என்பதற்குப்  பொன்வடிவினனான  என்பது   பொருளாம்.
‘இதுவரை   இராமன்  பெருமையைச்  சொன்ன’  என்றும்   கூறலாம்.
‘பொன்னின் மாநகர்’ பொன்னாலமைந்த எனலும் பொருந்தும்.  புரிசை:
மதில்: நீங்குதல்: நீங்கிப் போதல் (கடத்தல்).                    21