கையடைப் படலம் - 338

bookmark

மூவரும் சரயு என்னும் ஆற்றை அடைதல்

338.

வரங்கள் மாசு அற. தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்.
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்.
 
தவம்  செய்தோர்கள் - தவத்தைச் செய்தவர்கள்; வரங்கள் மாசு
அறவாழ்  -   அத்தவத்தால்  பெற்ற வரங்களுக்குக் குறைவில்லாதபடி
இருந்து  வாழ்கின்ற; புரங்கள் நேர் இலா நகரம் - பதவிப்புரங்களான
அமராவதி.     அளகை    ஆகியவையும்   நிகரில்லாத   அயோத்தி
மாநகரத்தை;   நீங்கிப்  போய்   -   அம்மூவரும்  நீங்கிச் சென்று;
அரங்கின்   ஆடுவார்  சிலம்பின்   அன்ன -  நடன  அரங்கிலே
ஆடுகின்ற நாட்டிய மகளிரின்  சிலம்பொலி  போல;  நின்று  இரங்கு 
வார்புனல் - என்றும் நிலைத்து ஒலித்துக் கொண்டிருக்கும்.பெருகிவரும்
நீரை  உடைய;  சரயுஎய்தினார் - சரயு நதியை அடைந்தார்கள்.

வரங்கள்:     வேண்டிக்கொண்ட தவபலம். தவம்: புண்ணியமுமாம்.
தவம்   புரிந்தோர்   புகுவது   துறக்கமாதலின்.   இங்குப்   புரங்கள்
அமராவதியும்.   அளகாபுகரியும்  எனக்குறிப்பிடப்பட்டன.   இவையும்
அயோத்திக்கு  நிகராக  மாட்டா என்பதால் ‘’புரங்கள் நேரிலா நகரம்’’
என்றார்.  கோவை இந்நகரொடு என்று குறிக்கலாவது. ‘அத்தேவர்  தம்
நகரியைச்   செப்புகின்றதென்’   என   நகரப்  படலத்துள்   கூறுவது
நினைவுகூரத்தக்கது.  அரங்கு: நடனமண்டபம். ‘அன்ன’  உவமைஉருபு.
இரங்குதல்:  ஒலித்தல் நின்று இரங்கு வார்புனல் சரயு என்றதால்’  சரயு
எப்போதும்  ஒலித்துக்  கொண்டிருக்கும்’  நீர்ப்  பெருக்காறு  என்பது
புலனாகும். ‘அமரர் போற்றும் விழுநதி’ என்பார் பின்னும்          22