கையடைப் படலம் - 323
323.
‘நிலம் செய் தவம் என்று உணரின்.
அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும்.
அன்று; நகர். நீ. யான்
வலம் செய்து வணங்க. எளிவந்த
இது முந்து என்
குலம் செய் தவம்’ என்று
இனிது கூற. முனி கூறும்:
நெடியோய். நகர் யான் வலம் செய்து வணங்க - நீண்ட தவம்
உடையீர்! இந்த நகரத்திலே நான் வலம் வந்து வணங்கும்படியாக; நீ
எளிவந்த இது - தாங்கள் எளிமையாக வந்த இந்தச் செயலானது;
நிலம் செய்தவம் என்று உணரின் அன்று - இந்த நாடு செய்த
தவப்பயன் தானோ எனில் அல்ல; என் நலம் செய்வினை உண்டு
எனினும் அன்று - எனது நல்வினை செய்து காட்டிய பயனாலோ
என்றால் அல்ல; எம்முந்து குலம் செய்தவம் - எங்களது முந்திய
குலத்தினோர் செய்த தவப்பயனே யாகும்; என்று இனிது கூற முனி
கூறும் - என்று தயரதன் இனிய முகமன்கூற. அதனைக் கேட்ட
முனிவன் கூறுவான்.
நிலம்: இடவாகு பெயராய் மக்களை உணர்த்திற்று. செய்தவம்:
வினைத்தொகை ‘தவம்’ தவப்பயன் அல்லது புண்ணியமும் ஆம்.
வலம்: வலம் வருதல். எளிமை: சுலபம். தயரதன். முனிவனை நோக்கி
‘’நெடியோய்’’ என்றது. நீண்ட தவத்தை உணர்த்தி நின்றது. 7
