கைகேயி சூழ்வினைப் படலம் - 1677
1677.
மின் பொருவு தேரின்மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
யார் உருககில்லார்?
வீரன் - வீரனாகிய இராமன்; மின் பொருவு தேரின்மிசை -
மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது; ஆ - பகவானது; தன்
பொருவு இல் கன்று -தனது ஒப்பற்ற கன்று; தனி தாவி வரல்
கண்டாங்கு - தனியே துள்ளிக் குதித்து வருதலைப்பார்த்தபோது; அன்பு
உருகு சிந்தையொடும் - அன்பினால் கரைகின்ற மனத்தோடு; உருகுமா
போல் - உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு
உருகி - மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார்யார் - உருகாமல்
வன்மையோடுநின்றவர் யார்? (எவரும் இலர்).
இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு
தோன்றி உள்ளமும் உடலும்உருகி நிற்பர் என்றவாறு. கண்டாங்கு -
தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல்- உருகுமாறுபோர்ல;
ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற
சொல் பலமுறை ஒரே பொருளில் வந்தது சொற்பொருட் பின்வருநிலை
அணி. 98
