கைகேயி சூழ்வினைப் படலம் - 1674

bookmark

1674.    

‘நீல மா முகில் அனான்தன்
     நினையினோடு அறிவும் நிற்க.
சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்?
     தேவரின் அடங்குவானோ?
காலமாக் கணிக்கும் நுண்மைக்
     கணக்கையும் கடந்து நின்ற
மூலம் ஆய், முடிவு இலாத
     மூர்த்தி இம் முன்பன்’ என்பார்.

     நீல மா முகில் அனான்தன் - கரிய பெரிய மேகத்தைப் போன்ற
இராமபிரானது; நிறையினோடு அறிவு நிற்க - நிறையும் பேரறிவும்
ஒருபுறம் இருக்க;  சீலம் ஆர்க்கு உண்டு- அவனது  நீர்மைக்குணம்
வேறு எவருக்கு உண்டு?  (ஒருவர்க்கும் இல்லை);  இம் முன்பன் -இந்த
முன்னவனாகிய இராமபிரான்;  தேவரின் அடங்குவானோ - தேவர்களுள்
ஒருவனாய் அமைவானோ? (அமையான்);  காலமாக் கணிக்கும் - கால
அளவாகக் கணக்கிடப்படுகின்ற; நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற -
நுட்பமாகிய எண்களையும் கடந்து  அப்பால் நின்ற;மூலம் ஆய் -
முதற்பொருளாகி;  முடிவிலாத மூர்த்தி - அழிவில்லாத பரம்பொருள்
ஆவான்; கெட்டேன் - (இதனை உணராமல் இது காறும்) ‘கெட்டேன்’;
என்பார் - என்று  சொல்வர் சிலர்.

     இராமனுடைய நிறையும் அறிவும் அல்லாமல்,  நீர்மையே அவனைப்
பரம் பொருள் என்பதனைக்காட்டிக்கொடுக்கிறது. அதனை அறியாமல்
நாளைப் பழுதே போக்கினேனே’ என்று  தனித்தனியேதன்னிரக்கம்
கொண்டனர்  சிலர்.

     நிறை - தன் நெஞ்சைத் தடுத்து நிறுத்தும் திறன். சீலம் - உயர்த்தார்,
தாழ்ந்தார்என்னும் வேறுபாடின்றி நீரோடு நீர் கலந்தாற்போல இரண்டறக்
கலந்து பழகுதல்.  இப்பாட்டின்பின்னிரண்டு அடிகளின் கருத்துப் பின்னும்
“மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும்
நீத்த காரணன்”  (1584)  என இடம் பெறுதல்காணலாம்.             95