கைகேயி சூழ்வினைப் படலம் - 1675

bookmark

1675.    

‘ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை
     அவனியில் கொணர்ந்தோர், முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி
     அசுரரைப் பொருது வென்றோர்.
பேர்கெழு சிறப்பின் வந்த
     பெரும் புகழ் நிற்பது, ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த
     புகழினைத் தழுவி’ என்பார்.

     ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை
அவனியில்கொணர்ந்தோர் - ஆகாய கங்கையை உலகத்திற்குக்
கொண்டுவந்தவரும்; முந்தை -பழமையாகிய;  போர் கெழு புலவர்க்கு
ஆகி - (அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத்துணையாகி; அகரரைப்
பொருது வென்றோர்- அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய
இக் குலத்து முன்னோர் பலருக்கும்);  பேர் கெழு சிறப்பின் வந்த -
விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய;  பெரும் புகழ் நிற்பது - மிக்க
கீர்த்திநிலைத்து  நிற்பது;  ஐயன் தார்  கெழு - இராமபிரானது
வெற்றிமாலை பொருந்திய;  திரள்தோள்தந்த புகழினை - திரண்ட
தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை;  தழுவி -தழுவியே யாம்;  என்பார்.

     ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்;  கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை
வென்றோர் -ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள்
தோற்களுக்குத் தாடகைவதம்,  சிவனது வில்லைமுறித்தது,  பரசுராமனை
அடக்கியது. ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் -அறிவினையுடைய
தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர்.  சுரர் - தேவர்;  அமுதத்தை
(சுராவை)உண்டவர்.                                           96