கைகேயி சூழ்வினைப் படலம் - 1673
1673.
‘வாரணம் அரற்ற வந்து,
கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த
நம்பிதன் கருணை’ என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா
ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும்,
கண்கள் நீர் கலுழ நிற்பார்.
இந்த நம்பிதன் கருணை - இந்தக் குணங்களால் நிறைந்தவனாகிய
இராமபிரானதுதிருவருள்; வாரணம் அரற்ற வந்து - முதலை வாய்ப்பட்ட
கயேந்திரன் என்னும் யானைஆதிமூலமே என்று கதற அங்குத் தோன்றி;
கரா உயிர் மாற்றும் - முதலையின் உயிரைப்போக்கிய; நேமி நாரணன்
(கருணை) ஒக்கும் - சக்கரப் படையையுடைய திருமாலின்திருவருளை
ஒத்ததாகும்; என்பார்- என்று கூறுவர் சிலர்; ஆரணம் அறிதல் தேற்றா-
மறைகளும் இனையன் என்று அறிய இயலாத; ஐயனை அணுகி நோக்கி-
(திருமாலாகிய)இராமபிரானை நெருங்கி நன்கு பார்த்து; காரணம்
இன்றியேயும் - (அன்பு தவிர வேறு) காரணம் இல்லாமலே; கண்கள் நீர்
கலுழ நிற்பார் - கண்களிலிருந்து நீர் சொரியநிற்பார் சிலர்.
நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு. நாரணன் என்பதன்
பின்னும் கருணை என்பதனைப்பிரித்துக் கூட்டுக. காரணமின்றிக் கண்ணீர்
சொரிந்தனர் என்பது அவர்களது பரவசநிலையினைக்காட்டும். 94
