கைகேயி சூழ்வினைப் படலம் - 1661
மன்னனைக் கொணரச் சுமந்திரன் போதல்
தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்
1661.
கணித நூல் உணர்ந்த மாந்தர்,
‘காலம் வந்து அடுத்தது’ என்ன,
பிணி அற நோற்று நின்ற
பெரியவன், ‘விரைவின் ஏகி
மணி முடி வேந்தன் தன்னை
வல்லையின் கொணர்தி’ என்ன,
பணி தலைநின்ற காதல் சுமந்திரன்
பரிவின் சென்றான்.
கணிதநூல் உணர்ந்த மாந்தர் - சோதிட நூலில் துறைபோய
சோதிடர்கள்; ‘காலம் வந்து அடுத்தது -முகூர்த்த நேரம் வந்து
நெருங்கியது;’ என்ன - என்றுதெரிவித்ததனால்; பிணி அற நோற்று
நின்ற பெரியவன் - பிறவிநோய் நீங்கும்படிதவஞ்செய்து அந்நிலையில்
வழுவாமல் நின்ற வசிட்ட முனிவன்; விரைவின் ஏகி -வேகமாகச்சென்று;
மணிமுடி வேந்தன் தன்னை - இரத்தின் கிரீடம்அணிந்தசக்கரவத்தியை;
வல்லையின் கொணர்தி - விரைவில் இங்குக்கொண்டு வருவாய்;
என்ன - என்று பணிக்க; பணிதலைநின்ற காதல்சுமந்திரன் -
அம்முனிவனது கட்டளையைத் தலைமேற் கொண்டு நின்ற அன்பு
நிறைந்தசுமந்திரன்; பரிவின் சென்றான் -அன்போடு விரைந்து சென்றான்.
வசிட்ட முனிவனுடைய தகுதிகளை நோக்கிப் ‘பெரியவன்’என்றார்
நோற்றலினும் அந்நெறி வழுவாது நிற்றல் அருமைத்தாதலின் ‘நோற்று
நின்ற’என்றார். ‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து இருந்த’ என்பதில்
(சிலப்பதிகம் - 1)‘இருந்த’ என்பது போன்றது ‘நின்ற’ என்னும் இது. 82
