ஐந்தாம் அத்யாயம்
( பரம்பரை இளவரசர்கள், வம்சம், இளவரசனுக்கான பயிற்சி மற்றும் அவனது சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம், இது தவிர ஒரு அரசன் இளவரசனைக் கையாளவேண்டிய யுக்திகள், அரசன் மற்றும் அரச உடைமைகளுக்கெதிரான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் )
பரம்பரை (சந்ததி இளவரசர்கள்)
மகன்கள் மூன்று வகைப்படுவர். தர்மம் பொருளாதாரம் போன்றவற்றைக் கற்றுணர்ந்து கடைபிடிப்பவன் அறிவுள்ள மைந்தனாவான். சோம்பேரித்தனமுள்ள மகனோ கற்றுணர்ந்தவற்றை கடைபிடிக்காதவன் ஆவான். தர்மம், நீதி, இவற்றை வெறுத்து ஒதுக்கி தீமைகளைச் செய்பவன் தீய மகனாவான். அரசனின் ஒரே மகன் தீயவனாய் திகழ்வானெனில், அரசர் அவனுக்குப் பதிலாய் தன் மகள் வயிற்றுப் பேரனை அரசின் வாரிசாக்கி விடுவார்.
வம்சம்
பரம்பரைக்கான நியதிகள் : ஆபத்து உண்டாகும் நிலை இல்லாவிடில் மூத்த மகனை வாரிசாய் நியமிப்பதே சிறந்தது. தீய குணங்கள் கொண்டவன் ஒரே மகனாயிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அரியணையில் அமர்த்துதல் கூடாது. பல மகன்களைக் கொண்ட ஓர் அரசன் அவர்களுள் தீய குணம் கொண்டவனை வாரிசாக நியமிக்காத நிலையில் மட்டுமே மக்கள் மீது அரசன் கொண்டுள்ள அக்கறை விளங்கும். சில உயரிய குடும்பங்களில் அரசியின் ஆட்சியே வழிவழியாய் நடை பெற்று வரும். குழுவாக ஆட்சி செய்யும் குடும்பங்களை வெல்வது கடினம். அத்தோடு , அத்தகைய குடும்பம் அராஜகத்தில் இருந்து தப்பி நெடுங்காலம் பூமியில் நிலை கொள்ளும்.
இளவரசனுக்கான பயிற்சி மற்றும் அவனது சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம்
அரசனாக வேண்டிய ஓர் இளவரசன் தனது மூன்றாம் வயதில் அட்சராப்பியாசம் முடித்தவுடன் கணிதம் மற்றும் மொழிப் பயிற்ச்சியில் வல்லமை பெற வேண்டும். உபநயனம் அவனுக்கு நடத்தப்பட்ட பிறகு வேதம் மற்றும் தத்துவத்தையும்,உடன் துறைத் தலைவர்களிடம் பொருளாதாரத்தையும், ஆட்சியைப் பற்றி அரசியல் அறிஞர்களிடமும் கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, திருமணம் செய்து கொள்ளலாம். இளமைப்பருவம் அடைந்து, திருமணம் முடிந்தவுடன் ஓர் இளவரசனின் கல்வி தடைபட்டு விடக்கூடாது. அவன் தனது சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் விதமாய் கற்ற பேரறிஞர்கள் உடன் எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும். அவனது பயிற்சி பின் வருமாறு அமையும்.
நாளின் முற்பகுதியில் குதிரை, யானையேற்றம் , ரதம், இவற்றுடன் ஆயுதங்களைக் கையாளவும் பயிற்சி அளிக்கப்படும். பிற்பகுதியில் இதிகாசங்களைக் கேட்க வேண்டும்.எஞ்சிய நேரத்தில் ( இரவும், பகலும் ) அடுத்த நாளுக்குத் தேவையான புதிய பாடங்களைத் தயார் செய்வதும், பழைய பாடங்களைத் திருப்புதல் செய்து அவற்றின் புரியாத பாகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நடைபெறும். கற்றலின் முடிவு அறிவைப் பெறுதல். அறிவினால் ஆற்றலுடன் செயல்பட இயலும். ஆற்றல் மிக்க செயல் பாட்டினால் சுய உரிமை ஏற்படும். அறிவு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, மற்றும் மக்கள் நலனில் கவனம் உடைய ஓர் அரசனே எதிர்ப்பின்றி உலக இன்பத்தை அனுபவிக்க இயலும்.
மேற்கண்டவற்றில் ஒழுக்கம் என்பது இருவகைப் படும். அவை முறையே, பிறப்பிலேயே தோன்றியது மற்றும் பெறப்பட்டது. கட்டுப்பாட்டில் இருந்து நன்மைகளைப் பெறும் ஆற்றல் கொண்ட ஒருவனிடத்தில் போதனை மற்றும் பயிற்சி மூலம் ஒழுக்கத்தை உண்டாக்கலாம். சுயக்கட்டுப் பாட்டுடன் திகழ இயலாதவர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படாது. ஆசிரியருக்குக் கீழ்படிதல், கற்றலுக்கான ஆர்வமும் , திறமையும் பெற்று இருத்தல், கற்றவற்றை நினைவு கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் , கற்றவற்றைக் கடைபிடித்தல், முடிவுகளைத் தீர்மானித்தல் போன்ற இயல்புடையவர்கள் கல்வியின் மூலம் ஒழுக்கத்தைப் பெற இயலும். அத்தகைய இயல்பு இல்லாதவர்கள் எத்தகைய பயிற்சி செய்தும் பலனில்லை . அரசனாய் இருக்க வேண்டிய ஒருவன் (அதாவது இளவரசன்) நல்ல ஆசிரியரின் துணையோடு கற்க வேண்டியவற்றைக் கற்று கட்டுப்பாட்டை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
ஒரு அரசன் இளவரசனைக் கையாளவேண்டிய யுக்திகள்
இளவரசனைக் கருத்தில் கொண்டு, பல அபிப்ராயங்கள் நிலவுகின்றன. மகரிஷி பரத்வாஜரின் அபிப்ராயப்படி,” இளவரசன் என்பவன் தன்னை உருவாக்குபவர்களையே விழுங்கிவிடும் நண்டு போன்றவன். எனவே , அவனது பிறப்பு தொட்டே அரசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அவனால் பெரும் துன்பன் நேருமென்று அறியும் நிலையில் அவனைக் கொள்வது கூட தவறாகாது” என்று உரைக்கிறார்.
பராசரரின் விசுவாசிகளோ " ஒரு இளவரசனை வளர்ப்பது ஒரு விரியன் பாம்பைப் போற்றி வளர்ப்பதற்கு ஒப்பாகும்" என்று கூறுகின்றனர். மேலும் அவர்களது கருத்துப் படி. எப்பொழுதுமே, ஒரு இளவரசன் தனது தந்தையை அவனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் முனைப்புடன் இருப்பான். எனவே , அவனை எல்லைப்புறத்துக்கு அனுப்பி விடுவது சிறந்தது என்பார்கள்.
ஆனால் , பிசுனர் என்ற ராஜ தந்த்ரியோ மேற்கண்ட அச்செயல் தவறானது என்றும். பின்னோக்கி மட்டுமே செல்லும் செம்மரியாட்டை மல்லுக்கு இழுப்பது போன்றதாகும் என்கிறார். மேலும் அவர் தனது விளக்கத்தை இவ்வாறு கூறுகிறார்." ஒரு இளவரசன்,மேற்கண்டவாறு தான் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட காரணம் அறிந்தால் எல்லையில் உள்ள மன்னனுடன் இணைந்து தன் தந்தைக்கு எதிராகவே படை திரட்ட நேரிடும்" என்கிறார்.
இளவரசனைத் தனது தாயின் உறவினர்களுடன் தங்க அனுமதிப்பதே சிறந்தது என்கிறார் கெளபை தாந்தா . இதனால், கட்டாயம் போர்க் கொடி உயரும் .மகனின் பெயரைச் சொல்லி உறவினர்கள் தொடர்ந்து அரசனைத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பர் . எனவே இளவரசனைச் சுகந்தரமாக இருக்க அனுமதிப்பதே நல்லது. ஏனெனில், ஆனந்தத்தை அளிக்கக் கூடிய தந்தையை எந்தவொரு மகனும் வெறுக்க மாட்டான் . இளவரசனைப் பிறந்ததில் இருந்து சந்தேகக் கண் கொண்டு நோக்குவது உயிருடன் எரிப்பதர்க்குச் சமமாகும் .
ஆனால், அதே சமயத்தில் ஒரு உயர்ந்த குடியில் ஒழுக்கமற்ற மகன் பிறந்தால் .அதனால் அக்குடியே, கரையான் அரித்த மரம் போல ஆகிவிடும். ( இளவரசன் தன் தந்தைக்கு எதிராய் திரும்பாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும் ) . எனவே , அரசி கர்ப்பம் தரிக்கும் வேலையில் இந்திரன், பிரகஸ்பதி போன்ற தெய்வங்களை வழிபட்டு அவைகளுக்கு , நீவேதனங்கள் செய்தல் வேண்டும். அந்த அரசின் உடல் நிலை கைதேர்ந்த வைத்தியர்களால் கண்காணிக்கப் படுமாயின் பிரசவம் எளிதாகும். குழந்தை பிறந்த பின் மத குருமார்களால் தீட்டு நீங்கும் வகையில் மதச் சடங்குகள் செய்யப் பட வேண்டும்.இத்துடன், இளவரசனுக்குத் தகுந்த சந்தர்ப்பத்தில் தகுந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப் பட வேண்டும்.
இவ்வனைத்து பாதுகாப்பு முயர்ச்சிகளுக்குப் பிறகும், இளவரசனின் இராஜ விசுவாசம் சோதிக்கப் பட வேண்டும். உதாரணமாய், இரகசிய ஒற்றர்கள் மூலம் இளவரசனுக்கு வேட்டையாடுதல், சூதாட்டம், மது மற்றும் மாதுவின் மேல் ஆசையைத் தூண்டுவதோடு இராஜ்யத்தைப் பறித்துக் கொள்ளுமாறும் பரிந்துரைக்க வேண்டும். மற்றொருவரின் மூலம் அவனுடைய மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும் என்று சில ஆசிரியர்கள் கூறுகிறார்கள். களங்கமில்லா மனதில் தீய எண்ணங்களை உருவாக்குவதைக் காட்டிலும் கொடிய குற்றம் வேறு ஏதுமில்லை என்கிறார் கௌடில்யர். ஒரு தெளிந்த பொருளில் ஏதேனும் பூசுவதால் கறைபடும். அதே போன்று கலங்கமற்ற மனங் கொண்ட ஓர் இளவரசன் அவனுக்குக் கற்பிக்கப்படுவதை அவ்வாறே ஏற்றுக் கொள்வான். எனவே, தவறான தீய கருத்துக்களை விடுத்து உண்மையான நீதி நேர்மையைக் கற்பித்தல் வேண்டும்.
இரகசியக் காவலாளிகள் இளவரசனுக்குத் தவறான யோசனைகள் வழங்குவதை விடுத்து தமது இராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனைப் பாதுகாக்கலாம். இளமையின் வேகத்தில் அன்னியப் பெண்களின் மீது அவன் தன் பார்வையைச் செலுத்துவானாயின் கோரமான பெண்களின் மூலம் அவனை அச்சுறுத்தி விடுபடச் செய்யலாம். மதுவின் பால் மயக்கம் கொள்வானெனில் மருந்து கலந்த மதுவை அளித்து அதனை வெறுக்கச் செய்ய வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபடுவானாகில் ஏமாற்றுக் காரர்கள் மூலம் அவனுக்கு அதன் பால் வெறுப்பை ஏற்படுத்திவிடலாம். வேட்டையாட முயன்றால் வழிப்பறிக் கொள்ளையர்களால் அச்சுறுத்தலாம். அவன் தனது தந்தைக்கு எதிராக செயல்பட நினைத்தால் , அவனுடன் இணைவது போல ஒற்றர்கள் நடித்து அவனது நம்பிக்கையைப் பெற வேண்டும். பிறகு, அவனுடைய எண்ணத்தைத் திசை திருப்ப வேண்டும். தனது தந்தைக்கு எதிராய் சூழ்ச்சி செய்து தோல்வி உற்றானெனில் கொல்லப்படுவான் என்றும், அப்படியே அதில் வெற்றி பெற்றால் உலகம் அவனை தூற்றும் என்றும். அவன் தந்தைக்கு செய்யம் துரோகம், பிற்பாடு அவன் மகனால் அவனுக்கு செய்யப்படும் என்றும். அது மட்டும் அல்லாமல் முதிர்ந்த வயதில் அவன் இறந்த பிறகும் கூட அவன் கால தேவனால் மன்னிக்கப்படாமல் நரகத்தில் தள்ளப்படுவான் என்னும் உண்மையை ( அவனுக்குப் புரியும் வகையில்) எடுத்துரைக்கப் பட வேண்டும். மேலும், மண்குவியல் போல மக்களின் கோபத்தால் தகர்த்து எறியப்படுவான் என்றும் அவனுக்கு உணர்த்த வேண்டும்.
அரசன் மற்றும் அரச உடைமைகளுக்கெதிரான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும்
(i)அரச ரதம் குதிரை அல்லது யானையில் சவாரி செய்தல் போன்ற குற்றங்களுக்கு - கை, கால் வெட்டுதல், அல்லது 700 பணம் அபராதமாய் செலுத்துதல்.
(ii)அரசனைப் பழித்தல், பொய்யான வதந்திகளைப் பரப்புதல் போன்ற குற்றங்களுக்கு - நாக்கை துண்டித்தல்
(iii)அரச குதிரை அல்லது யானையைக் கொல்வது, திருடுவது, ரதத்தை திருடுவது போன்ற குற்றங்களுக்கு - கழுவிலேற்றிக் கொள்ளுதல்
(iv)அரசியுடன் தவறான உறவு கொள்வது போன்ற குற்றங்களுக்கு - உயிருடன் கொதிக்கும் எண்ணெயில் இடுதல்.
