கைகேயி சூழ்வினைப் படலம் - 1662
கைகேயி இராமனைக் கொணர்க எனல்
1662.
வின் தொட நிவந்த கோயில், வேந்தர்தம்
வேந்தன் தன்னைக்
கண்டிலன்; வினவக் கேட்டான்;
கைகயள் கோயில் நண்ணி,
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல,
மற்று அவரும் சொல்ல,
பெண்டிரில் கூற்றம் அன்னாள்,
‘பிள்ளையைக் கொணர்க’ என்றாள்.
விண்தொட நிவந்த கோயில் - வானை அளாவி உயர்ந்து நின்ற
அரண்மனையில்; வேந்தர்தம் வேந்தன் தன்னை - அரசர்களுக்கு
அரசனாகிய தயரதனை; கண்டிலன் -காணாதவானகி; வினவ -
(அங்குள்ளாரைக்) கேட்க; கேட்டான் - (அவர்கள்)சொல்லக் கேட்டு;
கைகயள் கோயில் நண்ணி - கைகேயியின் அரண்மனையை அடைந்து;
தொண்டைவாய் மடந்தைமாரின் சொல்ல - கொவ்வைக் கனிபோன்ற
வாயினையுடையதாதியரித்தில் தன் வருகையைத் தெரிவிக்க; அவரும்
சொல்ல - அத்தாதியரும்கைகேயியிடத்துத் தெரிவிக்க; பெண்டிரில்
கூற்றம் அன்னாள் - மகளிருள் யமனைப்போன்ற அவள்; ‘பிள்ளையைக்
கொணர்க - இராமனை அழைத்து வருக;’ என்றாள் -என்று சுமத்திரனை
நோக்கிக் கூறினாள்.
தயரதன், கைகேயியின் அரண்மனையில் இருத்தலைக் கேட்டுச்
சுமந்திரன் அங்கே செல்ல, அவன் சக்கரவத்தியைக் காண்பதற்கு முன்னே
கைகேயி அவனைப் பார்த்து இராமனை அழைத்துவரப்பணிந்தாள்.
கணவனைக் கொல்லத் துணிந்தவாளாதலின், ‘கூற்றம் அன்னாள்’ என்றார்.
கண்டிலன், கேட்டான் - முற்றெச்சங்கள். மற்று - அசை. 83
