கைகேயி சூழ்வினைப் படலம் - 1658
பல ஒளிகள்
எங்கும் ஒளிவெள்ளம்
1658.
விளக்கு ஒளி மறைத்த, மன்னர்
மின் ஒளி; மகுட கோடி
துளக்கு ஒளி, விசும்பின் ஊரும்
சுடரையும் மறைத்த; சூழ்ந்த
அளக்கர் வாய் முத்த மூரல்
முறுவலார் அணியின் சோதி,
‘வளைக்கலாம்’ என்று, அவ் வானோர்
கண்ணையும் மறைத்த அன்றே.
மன்னர்மின் ஒளி - மன்னர்களின் உடம்பின் ஒளிக்கதிர்கள்;
விளக்கு ஒளி மறைத்த - விளக்கின் ஒளியைமறையச் செய்தன; மகுட
கோடி துளக்கு ஒளி - மகுடங்களின் தொகுதிகள் அசைதலால் உண்டாகும்
ஒளிக்கற்றைகள்; விசும்பின் ஊரும் சுடரையும்மறைக்கு- வானத்தில்
செல்லும் சூரியனையும் மறைந்தன; சூழ்ந்த அளக்கர் வாய்முத்தமூரல்
முறுவலார்-பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப் போன்ற
பற்களையும் புன்னகையையும் உடையபெண்களுடைய; அணியின்
சோதி - ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்; வளைக்கலாம்என்று-
தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ்வானோர்
கண்ணையும் - அந்தக் தேவர்களின் கண்களையும்; மறைத்த- மறைத்தன;
கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால்
வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை ஒளிக்கதிர்கள் என்று
பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை
மயக்கமாகும். அன்று, ஏ - அசைகள். 79
வசிட்ட முனிவன் வருகை
