சாணக்கிய நீதி எனும் அர்த்தசாஸ்திரம்

சாணக்கிய நீதி எனும் அர்த்தசாஸ்திரம்

bookmark

சாணக்கிய நீதி எனும் அர்த்தசாஸ்திரம் மனித வாழ்க்கைக்கு எந்தக் காலத்திலும் பயன்படும் ஒரு கலங்கரை விளக்கம்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் தொகுக்கப்பட்ட மானுட வாழ்வுக்கான சாசனம் என்றால் , அது தான் சாணக்ய நீதி என்னும் அர்த்தசாஸ்திரம். இதனைத் தொகுத்தவர் கௌடில்யர் என்று அழைக்கப்படும்  சாணக்யர் . கௌடில்யர் கூறுவார், அர்த்த சாஸ்திரம் என்கிற விஞ்ஞானத்தின் கர்த்தாவாக தன்னையே முழுக்க , முழுக்க சொல்லிக் கொள்ள முடியாது என்று. பிருஹஸ்பதி, மனு, பராசரர், அம்பி, உஷாணர்கள் போன்றவர்களின் கருத்துக்களை  தாம் கையாண்டு இருப்பதாய் அவர் ஒப்புக் கொள்கிறார். அது மட்டும் அல்லாமல், விஷாலாக்க்ஷா , பரத்வாஜா, போன்ற குருமார்களின் கருத்துக்களும் அர்த்தசாஸ்த்திரம் என்னும் இந்த  நூலில் ஆங்காங்கே  எடுத்தாளப்பட்டு இருக்கிறது. இந்த சாணக்ய   நீதி என்னும் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்.  தனி மனித உயர்வுக்கான நெறிமுறைகளுடன், ஒரு அரசாங்கத்தின்  கடமை, அரசு அதிகாரிகளின் கடமை, பிராணிகளின் நலன், வன  பாதுகாப்பு, பல்வேறு வகையான குற்றங்களுக்கான தண்டனைகள், விற்பனை வரி, வீடு கட்டும் விதி முறைகள், மதுபான தயாரிப்பு உரிமைகள், பொது மகளிருக்கான கோட்பாடுகள், என்று  சமூகவியலின் "அ" முதல் "அக்கு " வரை வரையறை செய்கிறது. படியுங்கள்,  நிச்சயம் ஒரு நாவலைப் போல மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்த நூல். 

மானுட  வாழ்வின் சிறந்த குறிக்கோள்கள்

மானுட  வாழ்வின் சிறந்த குறிக்கோள்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. அவை முறையே தர்மா, அர்த்த, காமா,மற்றும்  மோட்சா தர்மா - ஒருவர் தன்னுடைய மூதாதயர்களுக்கும் , சமூகத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை, நேர்மையா  இருத்தலை தர்மம் குறிப்பிடுகிறது. ஒருவர் , தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகளை அது பேசுகிறது. ஏனெனில், ஒரு சமூகம் பல குடும்பங்களைக் கொண்டது , ஒரு குடும்பம் என்பது ஒவ்வொரு  தனிப்பட்ட மனிதர்களைக் கொண்டது. ஆக, ஒவ்வொரு தனிமனிதனும் தர்மத்தைக் கடைபிடித்தால் , அது ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும். சமூகம், எந்த அளவுக்கு தர்மத்தை மதிக்குமோ  அந்த அளவுக்கு , அது பாதுகாப்பாக இருக்கும். அதுவே,அச்சமூகத்தில்  தர்மத்துக்கு ஊரு நேர்கின்ற பொழுது அந்த சமூகம் தன்னைத் தானே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டுவிடும் என்பது சானக்யரின் கருத்து . சாணக்யர் காலத்தில் அரசர்கள், அமைச்சர்கள், குருமார்கள், குடி மக்களின் உரிமைகள் , கடமைகள் இவற்றுக்குத்  தர்மம் தான் சட்டத் தொகுப்பேடாய் இருந்து இருக்கிறது.

அர்த்த - " அர்த்த" என்னும் பதம் " பொருட்செல்வத்தைக்" குறிக்கிறது. ஆனால், அர்த்தசாஸ்திரம்  இங்கு முழுக்க, முழுக்க  பொருட் செல்வத்தைப்  பற்றி மட்டும்  பேசவில்லை.  பொருள் அவசியம் தேவை தான். அதே நேரத்தில் ,   கௌடில்யர் சொல்கிறார் " ஒரு நாட்டின் ,உண்மையான செல்வம் என்பது,  அதன் ஆட்சியின்  எல்லைக்கு உட்பட்ட இடமும், பல்வேறு தொழில்களைச் செய்கிற அதன் குடிமக்களும் தான்"  என்று. ஏனெனில், அவரைப் பொறுத்து மட்டில் "மக்கள் இல்லை என்றால், ராஜ்ஜியம் ஏது? " என்று கேட்கிறார். தவிர, செல்வம் என்பது மக்களின் புலக்கத்துகாக பயன்பட வேண்டிய கருவியாகத் தான் எப்பொழுதும் இருக்க வேண்டுமே தவிர. அது மக்களை ஆளும் கருவியாக மாறிவிடக் கூடாது என்கிறார். அவ்வாறு , அது (செல்வம்) மக்களை ஆளும் கருவியாக மாறிவிட்டால், அது அந்த சமூகம் விரைவில் அழியப் போவதற்கான அடையாளம் என்கிறார்.

அதனால், செல்வத்தை சரியான முறையில் கை ஆளுவதில் தான் ஒரு நாடு, மற்றும் அதன் மக்களின் வளர்ச்சி அடங்கி உள்ளது என்கிறார் கௌடில்யர் . அதனால் தான், அர்த்தசாஸ்திரத்தின்  பெரும் பகுதி செல்வத்தை கையாளும் முறைகளைப் பற்றியே  பேசுகிறது. அதனால் தான், இந்த சாணக்ய  நீதிக்கு , அர்த்த ( பொருள்) சாஸ்திரம்  என்னும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நூல், தொழில், வரி விதித்தல், வரி வசூல் செய்தல், வரவு செலவுத் திட்டம், அரசாங்கத்தின் கருவூலக் கணக்குகள் , அதனைத்  திறம் பட செலவு செய்யும் உத்தி போன்றவற்றை அழகாக விவரிக்கிறது. அத்துடன் சட்டத்தை அமல்படுத்துவது, குற்றம், இராணுவ பலம், அரசு அலுவலர்களின் அதிகாரம் , கடமைகள், குடிமக்களின் பொறுப்புகள் ஆகியவையும் இந்நூலில்   வகைப் படுத்திக் கூறப்பட்டு உள்ளது.

காமா - ஒரே  கோத்திரம் அல்லாத ஆனால், அதே குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு இன்புறுவது. அதன் மூலம், தனக்கென ஒரு வாரிசுகளையும்,  ஏற்படுத்திக் கொள்ளுதல். அவர்களுக்காகத் தனது சொந்த விருப்பு , வெறுப்புகளைத் தியாகம்  செய்தல்.மோட்சா - மோட்சம் எனப்படும் "மோட்சா".  மனிதன் அடைய விரும்பும் மிக உயர்ந்த குறிக்கோளாய் கருதப்படுகிறது. மோட்சத்தைப் பற்றி வரையறை செய்வது அவ்வளவு எளிதல்ல. அடிப்படையில் அது தன்னை அறிவதன் மூலம் பெறுகிற விடுதலை ஆகும்.  தன்னுள் இருக்கும் தெய்வத் தன்மையைத் தெளிவாக புரிந்து கொண்டு உலகில் இருக்கும் , உலகம் சார்ந்த கட்டுகளில் இருந்து தன்னை ( இறை அருளால்)  விடுவித்துக் கொள்ளுதல் என்றும் சொல்லாலாம்.

இந்த மேற்கண்ட இந்த  நான்கைப் பற்றியும் கூட , அர்த்தசாஸ்திரத்தில் அழகாக எடுத்து உரைக்கப்பட்டு உள்ளது . தர்ம சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்கள்  அர்த்த சாஸ்த்திரத்தில் இடம் பெற்று இருப்பதும் உண்மை. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு முக்கிய வேற்றுமை உண்டு. தர்ம சாஸ்த்திரங்கள் தனிமனிதனுக்கு , தன்னுடைய தர்மம் இன்னதென்று போதிப்பது.ஆனால், அர்த்த சாஸ்த்திரம் ஒரு நாட்டின்  ஆட்சியாளருக்கே  ( தர்மம் உட்பட)  பல விஷயங்களை    அறிவுறுத்துவது. உதாரணமாக ஒரு அரசனின் கடமையைக் கௌடில்யர் , இவ்வாறு எடுத்து  உரைக்கிறார். கௌடில்யரைப் பொறுத்த மட்டில் , அரசனுக்கு மூன்று கடமைகள் உண்டு என்கிறார்.
அவை - 
1.அன்னியப் படையெடுப்புகளில்  இருந்து நாட்டைக் காப்பது ரக்க்ஷா . இது ஒரு அரசனின் முதற்க் கடமை ,
2. இரண்டாவதாக ஆட்சி எல்லைக்குள் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது ( அதாவது இது வடமொழியில் " பாலனம் " எனப்படும்) , இதனைத் தொடர்ந்து
3. மூன்றாவதாக சொல்லப்படுவது , மக்கள் நலனைப் பாதுகாப்பது. அதாவது , ஒரு நல்ல அரசன் மக்களின் நலன் மீது அக்கறை உள்ளவானாக இருத்தல் வேண்டும்.  ( இது வடமொழியில் ,  "யோக க்ஷேமம்" எனப்படும் )
இதுவே, ஒரு அரசன் கடைபிடிக்க வேண்டிய " ராஜ்ஜிய பரிபாலன " முறை  என்கிறது அர்த்தசாஸ்திரம். பிற நாட்டின் மீது  படை எடுப்பதைப் பற்றியும் அர்த்தசாஸ்திரம்  இவ்வாறு விவரிக்கிறது ,

" ஒரு அரசன் தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது நன்று என்று  திருப்திப் படலாம். ஆனால், நாடு சேர்க்கும் ஆசை அண்டை நாட்டவனுக்கு இருக்காதென்பது  என்ன நிச்சயம். அதனால், முதலில்  தான் முந்திக் கொண்டு இணைப்பு அல்லது போரில் வெற்றி பெறுவதன் மூலம் தன்னுடைய எல்லையை அரசன் விஸ்தரித்துக்  கொள்ள  வேண்டியது அவசியம் . அதன் மூலம் அவனுடைய நாடும் வளம் பெறும்.ஆக, ஒரு அரசன் தனது எல்லைகளை அவசியம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் விரிவுபடுத்திக் கொள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும்" .

சரி,  இவ்வளவையும் அழாகாக எடுத்துக் கூறும் அந்த புத்தி கூர்மை பெற்ற கௌடில்யர் தான் யார்? வாருங்களேன், அவர் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்!

புத்தி கூர்மை பெற்ற அந்த கௌடில்யர் தான்  யார்?

"கௌடில்யா" என்ற இவரது பெயரின் மூலம். இவர் "குடில " கோத்திரத்தில் இருந்து வந்தவர் என்று ஒரு கருத்து உண்டு. அது போல இவர், "சனகா" என்ற ஏழை பிராமனின் மகன்  என்பதால்   " சாணக்யா" என்று பிற்காலத்தில்  அழைக்கப்பட்டார் என்று கூறுவோரும் உண்டு  . இவரது இயற்ப் பெயர் " விஷ்ணு குப்தர்" . சாணக்கியர் அல்லது கௌடில்யரின் ஆரம்பகால வாழ்க்கைப் பற்றி போதிய தகவல்கள் இல்லை.

அவர் பூர்வத்தில் கேரளத்தைச் சேர்ந்த அந்தணர். ஏழ்மையில் அடிபட்ட, மெலிந்த தேகம். அதாவது,  அப்படியொன்றும்  ஈர்க்கத்தக்க தோற்றம் கொண்டிருக்கவில்லை . எப்படியோ பாடலிபுத்ரம் வந்து சேர்ந்து, நந்த அரசனுடைய அவையிலும் இடம் பெற்றார் என்று அவரைப் பற்றி சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .

சாணக்கியர் பற்றி வேறு ஒரு கதையும் இருக்கிறது. அவர் வட இந்தியாவைச் சேர்ந்த அந்தணர். தட்சசீலத்தில் பிறந்து, அங்குள்ள பல்கலைக் கழகத்தில் பயின்றவர். மூன்று வேதங்களில், மந்திரங்களில் புலமைப் பெற்றவர், ஆனால் பிறர் கண்டு எரிச்சல் அடையும் படியான ஒரு தோற்றம் மற்றும் நிறம் கொண்டவர். சுருக்கமாகச் சொல்லப்போனால் அங்கலட்சணம் இல்லாதவர் என்ற இந்த  இன்னொரு கருத்தும் நம்பப்படுகிறது  . எது எப்படி இருந்தாலும், இவர் தான் வட இந்தியாவில் நந்த வம்சத்தை வேருடன் அழித்து . மௌரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர். அரசர்களை உருவாக்குபவர் (King maker) என்ற வார்த்தையே இவரிடம் இருந்து தான் பிறந்தது. எதனால்,ஏன்  நந்த வம்சத்தை இவர் அழித்தார்?  இவர் எவ்வாறு மௌரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார்?. போன்ற கேள்விகள் இதனை வாசிக்கும் அன்பர்களுக்கு ஏற்படலாம். வாருங்களேன், அதையும் தெரிந்து கொள்வோம்.

நந்த வம்சத்தைக் கடைசியாக ஆண்ட அரசன் தனநந்தன். உண்மையில் இந்த தனநந்தன் அரசனே அல்ல , அவர் தாழ்ந்த குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை அந்நாட்டு ராணியின் கள்ளக் காதலராயிருந்து, மன்னனைக் கொன்று  தானே மகுடன் சூட்டிக் கொண்டவர்.  தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காக சட்டப்படி அரச உரிமை உள்ள மன்னனின் வாரிசுகளையும் கொன்றவர் அவர். அத்தகைய மோசமான பாரம்பரியம் கொண்ட தனநந்தரை குடிமக்கள் வெறுக்கவே செய்தனர். அவர் கொடுங்கோலனாகவும்  இருந்தார் . மக்களுக்குத் தேவை அற்ற வரிகளை விதித்து, அதிக வரிச்சுமைகளை ஏற்படுத்துதல், அழகான கன்னிப் பெண்களைத் தன் ஆசைக்காக கவர்தல், இதனை  எதிர்ப்பவர்களை தேசத்ரோகி  எனக் குற்றம் சாட்டி, மனிதாபமற்ற முறையில் தண்டித்தல் என அவர் செய்யாத அக்கிரமங்களே இல்லை எனலாம் .

இப்படி இருக்கும் பொழுது தான், ஆணவமிக்க தனநந்தர் தான் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு கௌடில்யரையும்  அழைத்து, அவர் உண்ணத் தலைப்படும் பொழுது ,அவரை எட்டி உதைத்து, குடுமியை பிடித்தவாறு தனது  சேவை ஆட்களை விட்டு  வெளியே விரட்டி அடித்தார். கோபாவேசமான கௌடில்யர்  நந்த வம்சத்தை அழிக்காமல்  தன்னுடைய அவிழ்ந்த குடுமியை வாரி முடியப் போவதில்லை என்று அப்பொழுது சூளுரைத்தார். தன்னுடைய நோக்கத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய நபரைத் தேடி அவர் துறவி வேடத்தில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார்.

அப்பொழுது தான், அரச குலத்தில் பிறந்த மாடு மேய்க்கும் ஆயனால் வளர்க்கப்பட்ட சந்திர குப்தனைக்  கண்டார். அந்தச் சிறுவனே தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி உதவப் போகிற ஆள் என்று அவர் முடிவு செய்தார். கௌடில்யர் அந்தச் சிறுவனை முதன் முதலாய் சந்தித்த பொழுது அவன் தன்னுடைய தோழர்களுடன் நாடகம் நடத்திக் கொண்டிருந்தான். அதில் அவனே ராஜாவாக வேடம் தரித்து அமைச்சர்களுக்கு உத்தரவு இட்டான் , வழக்கு விசாரித்து தீர்ப்பு செய்தான். அவனுடைய தலைமைப் பண்புகளால் பெரிதும் கவரப்பட்டவர் கௌடில்யர். அவனை வளர்த்த ஆயனுக்கு ஆயிரம் பணம் விலை கொடுத்து சிறுவனை வாங்கிக் கொண்டார். அரசனுக்குரிய கல்வியளிப்பதர்க்காக  அவனைத் தட்சசீலத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால், கௌடில்யரும் சந்திரகுப்தனும்  தனநந்தரிடம் நடத்திய முதல் போரில் தோற்றுப் போயினர். அவர்கள் செய்த தவறு,  நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தான். ஆனால், பிறகு அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து,  தங்கள் போர் முறையை  மாற்றிக் கொண்டனர். 

எல்லைப்புற மாகாணங்களை ஒவ்வொன்றாகப் போரிட்டுத் தங்கள்  வசப்படுத்திக் கொண்டனர். படிப்படியாக அவர்கள் பாடலிபுத்திரத்தை வென்று தனநந்தரையும் விரட்டி அடித்தனர். அந்தப் போரில் தனநந்தர் மீண்டும் எழமுடியாத  படி வீழ்ந்தார்.  பின்னர் சந்திரகுப்தனை  அரியணையில் அமர்த்திய  கௌடில்யர் ராஜ்ய விவகாரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தாம் கற்று அறிந்தவற்றை  சிந்தித்து " அர்த்த சாஸ்த்திரத்தை" எழுதி முடித்தார். ஆற்றல் மிக்க ஓர் அரசனை எப்படித் தோற்கடிப்பது, இணைப்பு முயற்ச்சிகளை  எப்படி  மேற்கொள்வது, கலகக் காரர்களை  எப்படி அடக்குவது, ஏமாற்றக்  கூடியவர்களிடம்  எப்பேற்பட்ட தந்திர உபாயங்களைப்  பின்பற்றலாம் போன்ற ராஜ தந்திர, ராணுவ யுத்திகளை இந்நூலில் சாணக்யர் குறிப்பிடுகிறார். மொத்தத்தில்,  இந்த அர்த்தசாஸ்த்திரம் என்பது இலக்கியத் தரம் வாய்ந்த நீதி நூல் ஆகும். இதில் கூறப்பட்டுள்ள  விஷயங்கள் யாவும் ஒரு  நாட்டின் ஆட்சியாளர்கள்   மட்டும் இன்றி, ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ளக்கூடியதாக  உள்ளன. சுருக்கமாகச் சொன்னாள், சமுதாய, தனிநபர் நலனில் அக்கறை கொண்டவர்கள் அவசியம் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்  இந்த சாணக்ய நீதி என்னும் அர்த்தசாஸ்த்திரம் .  வாருங்கள் சாணக்கிய நீதிக்குள் செல்வோம்.