கைகேயி சூழ்வினைப் படலம் - 1623
1623.
‘மண் ஆள்கின்றார் ஆகி,
வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும்,
எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு,
என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம்
என்னப் பெறுவேனோ?’
‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப்
பட்டம் ஏற்று; வலத்தால் - வலிமையாலும்; மதியால் - அறிவினாலும்;
வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப்
போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள்
வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு-
வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என்
அரண்மனையில் வாழும்பெண்ணினால்; அந்தரம் வந்தது என்னப்
பெறுவேனோ - முடிவு நேர்ந்தது என்று சொல்லத்தக்க நிலையை
அடைவேனோ!’
வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு
அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும்
பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம். 44
