யூனான் மன்னனின் நயவஞ்சக அமைச்சன் செய்த அக்கிரமம்
அன்றைய காலத்தில் கிரேக்க நாட்டை யூனான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய பேராற்றல் கண்டு பல நாட்டு மன்னர்கள் அவனுக்கு உதவி செய்யக் காத்துக் கொண்டு இருந்தார்கள். அவனிடம் மிகப் பெரிய படை இருந்தது. அதனால் அனைத்து அரசர்களும் அவனுக்கு பயந்து கப்பம் கட்டி வந்தார்கள். அவன் சிறந்த ராஜ தந்திரியும் கூட. எனினும், செல்வத்தையும், அறிவையும் அவனுக்கு வாரி வழங்கிய இறைவன் ஏனோ தொழுநோய் என்ற பெருவியாதியையும் அவனுக்கு கொடுத்து விட்டான். அதனால் யூனான் அனுதினமும் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டு இருந்தார். அவரது அந்தப் பெரு வியாதியைத் தீர்க்க எண்ணற்ற மருத்துவர்கள் முயன்றும் கூட முடியாமல் போனது தான் கொடுமை.
யூனான் சாப்பிடாத மருந்துகளே இல்லை என்ற அளவுக்குப் பல விதமான மருந்துகளையும் உட்கொண்டார். ஆனால், நாளுக்கு நாள் அவரது வியாதி பெருகிக் கொண்டு தான் போனதே தவிர சிறிதும் குறையவில்லை. அது தான் கொடுமை.
இந்தச் சமயத்தில் தான் மருத்துவ மேதை என்று பல நாடுகளிலும் புகழப் பெற்ற மாபெரும் அறிஞரான "தூபான்" என்னும் ஞானி அந்த நகரத்துக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அவ்வளவு பிரபலமானவராக அவர் இருந்து வந்தார். அத்துடன் அவரது மனமும் கூட நன்மைகளின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. மருத்துவ சாஸ்திரம் மட்டுமின்றி தத்துவ சாஸ்த்திரத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் அவர். மருத்துவத்தை தொழிலாகச் செய்யாமல் சேவையாக செய்து வந்தார். பலருக்கு இலவச மருத்துவ சேவையையும் அவர் வழங்கி உள்ளார். அதனால் சில ஊரில் வாழ்ந்த மக்கள் அவரை தெய்வமாகத் தான் போற்றினார்கள்.
இந்நிலையில் தான் "தூபான்" அந்நாட்டு அரசரான "யூனானுக்கு" ஏற்பட்ட தொழு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவருக்கு அரசரை குணமாக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அத்துடன் அது தன்னால் முடியும் என்றும் அவர் நம்பினார். அதனால் அரசரைக் காண அந்நாட்டின் அரண்மனைக்கு விரைந்தார். காவலர்கள் "தூபானைப்" பார்த்த மட்டில் உணர்ந்து கொண்டார்கள் அவர் யார் என்று. அத்துடன் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
தூபான் மன்னரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் யூனானுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார். அதனால் யூனான் மகிழ்ச்சி அடைந்து தனது நோய் நிச்சயம் நீங்கும் என்று நம்பினார். பிறகு தூபானிடம் அரசர்," எனது நோய்க்கு எவ்வகையில் மருத்துவம் பார்க்கப் போகின்றீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு தூபான், "அரசே! தாங்கள் எந்த வித மருந்தையும் உட்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்? தைலங்களைக் கூடத் தாங்கள் தேய்த்துக் குளிக்கத் தேவை இல்லை. களிம்பு வகைகளைக் கூட தேகத்தில் பூசிக் கொள்ள வேண்டியதில்லை. ஏன் கசப்பு சுவை கொண்ட கஷாய மருந்துகளைக் கூட அருந்த வேண்டிய அவசியம் இல்லை. ஆம்! இந்த வகையில் தான் உங்களை நான் குணப்படுத்தப் போகிறேன்" என்றார்.
"உண்மையாகவா? இது சாத்தியமா?" என்று கேட்டார் மன்னர்.
"ஆம்" என்றார் தூபான். உடனே அரசர் மனம் மகிழ்ந்து தூபான் தனது அரண்மனையில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
தூபானுக்கு ஒரு அற்புதமான கலைநயம் மிக்க அறை ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் தனது நூல்களை எல்லாம் பத்திரமாக அடுக்கி வைத்தார் தூபான். பிறகு "போலோ" விளையாட்டிற்குப் பயன்படும் மட்டையைத் தயார் செய்தார் தூபான். அதிலும் அதனை சற்று வித்தியாசமாகவே தயார் செய்தார் தூபான். குறிப்பாக, அதில் நிறைய துவாரங்களை உண்டு பண்ணி அதற்குள் பலவிதமான மூலிகைகளின் தூளை நிரப்பினார். இதைப் போலவே பந்தினுள்ளும் நிரப்பி அதன் வாயை அடைத்தார்.
அடுத்த நாள் காலை தூபான் அந்தப் பந்தையும் மட்டையையும் கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தார். பிறகு அவரிடம், "அரசே! இந்தப் பந்தையும் மட்டையையும் வைத்து நீங்கள் நாளைக் காலையில் அதுவும் சூரிய ஒளியில் விளையாட வேண்டும். அப்போது வியர்வை நன்றாக வெளிவர வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் ஓடி, ஆடி விளையாட வேண்டும். அப்போது இந்தப் பந்திலும், மட்டையிலும் இருக்கும் மூலிகைகளின் தூள் வெளியில் வந்து உங்கள் ஸ்பரிசத்தில் படிய வேண்டும். மேலும், இதில் நான் அடைத்து வைத்திருக்கும் அனைத்து மூலிகைகளின் காற்றையும் தாங்கள் சுவாசிக்க வேண்டும். அவ்வாறு தாங்கள் அந்தத் தூளின் மனத்தை சுவாசித்தால் நிச்சயம் தங்களது நோய் குணமாகும்" என்று கூறி முடித்த தூபான். அந்தப் பந்தையும், மட்டையையும் எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளையும் கூட மன்னருக்கு வழங்கினார்.
அதனை சரியாகப் பின்பற்றி அடுத்த நாள் காலையில் மன்னர் போலோ விளையாட்டை விளையாடினார். இதே போல அன்றைய தினம் இரவும் தூபான் இன்னொரு மூலிகைப் பொடிகளைக் கொண்ட பந்தையும், மட்டையையும் அரசரிடம் வழங்கினார். அதைக் கொண்டு அடுத்த நாளும் மன்னர் போலோ விளையாட்டை ஆர்வமுடன் விளையாடினார். இப்படி சுமார் ஒரு வாரம் நடந்தது. ஒரு நாள் மன்னர் குளித்து, முடித்து உற்சாகத்துடன் குளியல் அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது தான் தன்னைப் பிடித்து இருந்த தொழு நோய் முற்றிலும் குணமானதை அவர் உணர்ந்தார். உடனே தூபானை அழைத்து அதற்காக நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் அவருக்கு விலை மதிக்க முடியாதப் பரிசுப் பொருட்கள் பலவற்றைக் கொடுத்து கௌரவித்தார். மேலும், ஒரு மிகப் பெரிய மாளிகை ஒன்றையும் பரிசளித்தார்.
பிறகு தூபானிடம் அரசர்," தாங்கள் இனி ராஜ வைத்தியராக எனது நாட்டிலேயே தங்கி விடலாம். அத்துடன் தங்களது ஆராய்ச்சியையும் தொடர்ந்து தாங்கள் எனது நாட்டிலேயே செய்து கொள்ளலாம். அதற்குத் தேவையான அனைத்தும் தங்களுக்கு செய்து தரப் படும்" என்றார்.
அரசர் யூனானின் கட்டளைப் படி தூபான் அந்த நாட்டிலேயே தங்கினார்.
மன்னரின் தீர்க்க முடியாத நோயை தூபான் தீர்த்ததால் அவருக்கு அந்த நாட்டிலும், அரண்மனையிலும் அப்படி ஒரு மரியாதை அளிக்கப்பட்டது. தூபான் பெரிதும் மதிக்கப்படும் மனிதராகத் திகழ்ந்தார்.
இது இப்படி இருக்க, மன்னருக்குப் பல அமைச்சர்கள் இருந்து வந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிக பொறாமைக் காரனாகவும். பிறர் நன்றாக வாழ்வதைப் பொறுக்க முடியாதவனாகவும் இருந்தான். அவன் ஞானி தூபான் போற்றப்படுவதை விரும்பவில்லை. மேலும் அந்தப் பொறாமையால் அந்த அமைச்சர் தூபானை பற்றி மன்னரிடமே தவறாகப் பேசத் தொடங்கினார். எனினும், அந்நாட்டு மன்னர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
ஒரு நாள் மீண்டும் அந்த அமைச்சர், "ஞானி தூபான் அவர்கள் தங்களுக்கே கெடுதல் நினைக்கக் கூடும்" என்று மன்னரிடம் கூற அதனைக் கேட்ட அரசர் அதீத கோபம் அடைந்தார். பிறகு அந்த அமைச்சரைப் பார்த்து, "தூபான் ஒரு உண்மையான ஞானி. அவர் போற்றுதலுக்கு உரியவர். அவரது திறமைக்கு இந்த நாட்டைக் கூட அவருக்குப் பரிசாக அளிக்கலாம். ஏனெனில், அவர் எனது தொழுநோயையே போக்கியவர். நீ சொன்ன விஷமத்தனமான வார்த்தைகளை நம்பி உன்னுடைய பேச்சைக் கேட்டு நான் அந்த ஞானியைத் துன்புறுத்தினால் சிந்திபாத் அவர் வளர்த்த வல்லூறைக் கொன்றதைப் போன்ற மூடத்தனமான செயலை செய்தவன் ஆவேன் நான்" என்றார்
இப்படிக் கூறி விட்டு கதையை நிறுத்தினாள் ஷாரஜாத் அப்போது இருள் மெல்ல விளகிக் கொண்டு இருந்தது. அதனால் இரவு விடை பெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு அர்த்தத்துடன் மன்னர் ஷாரியாரைப் பார்த்தாள் ஷாரஜாத். தனது மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்ட ஷாரியர்.
"சரி, பொழுது விடிந்ததை எனக்கு சொல்லாமல் சொல்கிறாயா? எனில், இப்போதைக்கு நான் போகிறேன். மீதி கதையை நான் இன்று இரவு வந்து கேட்கிறேன். கண்டிப்பாக மீதி கதையையும் சொல்ல வேண்டும். சரிதானே?" என்று கூறி விட்டுத் தனது அலுவலகப் பணியைப் பார்க்கச் சென்றார்.
பிற்பாடு அன்றைய பொழுதும் அற்புதமாகக் கழிந்தது. இரவு வேளையும் நெருங்கியது ஷாரியர், ஷாரஜாத்தை நெருங்கி மீண்டும் கதையை கேட்கத் தொடங்கினார். அப்போது ஷாரஜாத்தும் சிந்திபாத் என்ற அரசனின் முட்டாள் செயலை பறைசாற்றும் கதையை கூறத் தொடங்கினாள்.
