குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்.
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்,
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். 42
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்.
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
''அன்றேயப் போதேவீ டதுவே வீடு'' 43
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம்.
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44
