கைகேயி சூழ்வினைப் படலம் - 1597
1597.
பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான்.
பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் -
அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது;
மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் -
அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை); வேதனை
முற்றிட -துன்பம் முதிர்ச்சி அடைய; வெந்து வெந்து - மனம் மிக
வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான்
(துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து
உயிர்த்தான் - வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான்.
இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது
உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து மீண்டும்
அடங்குவது போல, மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும்
அடங்கியும் நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக்
காட்டுவது. 16
