குழந்தை மருத்துவம்

bookmark

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.

இளங்குழந்தைகளுக்குச் செய்யப் படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்" சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

"காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்

கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்

பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்" – சீவகசிந்தாமணி – செய். 2703

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை" தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி" தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்" குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.