குலமுறை கிளத்து படலம் - 728
சாகரர்
728.
‘இடறு ஓட்ட. இன நெடிய
வரை உருட்டி. இவ் உலகம்
திடல். தோட்டம். எனக் கிடந்தது
என இரங்கி. - தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய்!-
இவர் குலத்தோர். உவரி நீர்க்
கடல் தோட்டார்எனின். வேறு ஓர்
கட்டுரையும் வேண்டுமோ?
தெவ் வேந்தர்- பகை அரசர்களது; உடல் தோட்ட- உடல்களைத்
துளைத்த; நெடுவேலாய் - நீண்ட வேலினை உடைய மன்னனே!;இவர்
குலத்தோர் - இம் மைந்தர்களின் குலத்து அரசர்கள்; இரங்கி -
(தங்கள் தந்தையின் அசுவமேதக் குதிரை காணாமல் போக) வருந்தி;
நெடிய வதை - பெரிய மலைகளை; இடறு ஓட்டம் இனம் - காலால்
இடறத் தக்க தேங்காய் ஓடுகளைப் போல; உருட்டி - (வெளியே)
புரட்டித் தள்ளி; இவ் உலகம் - இந்த நிலவுலகம்; திடல் கோட்டம்
என - திட்டாகவும் மேடாகவும்; கிடக்கும் வகை - இருக்கும்படி;
உவரிநீர் - உப்புச் சுவை மிக்க நீரைக் கொண்ட; கடல் தோட்டார்-
கடலை(த் தத்தம் வலிமையால்) தோண்டினார்கள்; எனின் - என்றால்;
வேறு ஓர் கட்டுரையும் - (இக் குலத்தின் பெருமைக்கு) வேறு
நிகழ்ச்சியாக எடுத்துச் சொல்ல ஓர் உறுதி மொழியும்; வேண்டுமோ -
வேண்டுமா? (வேண்டா).
இதில் சொல்லப்பட்டவர் சகர குமாரர். இவர்கள் தோண்டின
பள்ளமே கடலாயிற்று. திடல் தோட்டம் - ஒரு பொருட் பன்மொழி. 8
