குலமுறை கிளத்து படலம் - 725
மாந்தாதா
725.
‘கருதல் அரும் பெருங் குணத்தோர்.
இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு
சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-
புலிப் போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண.
உலகு ஆண்டான் உளன் ஒருவன்.
பொருது உறை- போர்புரிந்த பின் உறையில்; சேர் வேலினாய் -
செருகிய வேற்படையை உடைய சனகனே!; சுடர்நேமி செல -
ஒளியுடைய தமது ஆணைச் சக்கரம் (எங்கும் தடையில்லாமல்)
செல்லுமாறு; திரிபுவனம் - மூன்று உலகங்களையும்; முழுது ஆண்டு
நின்றோர் - முழுவதும் ஆட்சி புரிந்தவர்களும்; கருதல் அரும்பெரும்
- நினைக்கவும் முடியாத (இரக்கம் முதலிய) சிறந்த; குணத்தோர் -
குணங்களையுடையவர்களும் ஆகிய; இவர் முதலோர் - இக்
குமாரர்களின் குலத்திலே தோன்றிய முந்தைய அரசர்கள்; கணக்கு
இறந்தோர் - எண்ணற்றவர்கள் (இவர் குலத்துள்) ஒருவன்;
புலிப்போத்தும் - (இயல்பாகவே பகைமையுடைய) ஆண்புலிகளும்;
புல்வாயும் - மான்களும்; ஒருதுறையில் - (அப் பகையுணர்ச்சியின்றி)
ஒரே நீர்த்துறையிலே; நீர் உண்ண - (இறங்கித்) தண்ணீர்
குடிக்கும்படி; உலகு ஆண்டோன் - உலகத்தை அரசாண்டவன்;
ஒருவன் உளன் - (மாந்தாதா) இருந்தான்.
அரசனது ஆணையிடத்துத் தமக்குள்ள அச்சத்தால் எவையும்
நலியத்தக்கனவும் நலியாமல் உள்ள நீதிமுறை கூறியது. இந்த அரசன்
மாந்தாதா என்பவன். அவன் அரசாண்ட காலத்தில் நாடெங்கும்
சத்துவ குணம் நிலவியிருந்ததால் மிருகங்கள் முதலியனவும் அன்பும்
அருளும் பூண்டு வாழ்ந்தன. புல் வாய் - புல்லையுண்ணும்
வாயையுடைய (மான்) - காரணப்பெயர். வேற்றுமைத்
தொகையன்மொழி. 5
